Friday, March 20, 2015

Bye Bye America!!!

கிட்டத்தட்ட 3 வருடங்கள் 3 மாதங்கள் கழித்து அமெரிக்காவிலிருந்து விடை பெறப் போகிறேன். அமெரிக்காவானாலும், அமைந்தகரையானாலும் ஒரு இடத்திலிருந்து சில நாட்கள் கழித்து நகர்ந்தால் ஒரு வெறுமை வரத்தான் செய்யும்...

இங்கு வந்ததற்கான நோக்கம் (கடன்) நிறைவேறினாலும், இங்கு வந்த பிறகு நான் ஆரம்பித்த சில விருப்பங்களை(தற்காப்பு கலை) முழுமையாக முடிக்காமல் கிளம்ப நேரிடுகிறதே என்கின்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.

விசா சிக்கல் காரணமாக இந்த 3 வருடங்கள் கழித்து முதல் முறையாக இப்பொழுது தான் சென்னை செல்லப் போகிறேன் என்கின்ற பொழுது வெறுமைகளும், வருத்தங்களும் சற்று மறையத்தான் செய்கிறது.

அமெரிக்கா எனக்கு கனவாகவோ , இலட்சியமாகவோ இருந்ததில்லை. 2009 பொருளாதார தேக்க நிலை காரணமாக அலுவலகத்தில் திட்ட பணிக்காக(Project Work) காத்திருந்த பொழுது அந்த திட்ட பணியும் கிடைத்து அதற்காக அமெரிக்காவும் செல்ல வேண்டும் என்ற பொழுது அந்த டீலிங் பிடித்து முதல் முறையாக 6 மாதம் இங்கு வந்தேன், அதற்கு பிறகு ஒன்றரை வருடம் கழித்து கடன் காரணமாக மறுமுறை நானே டீலிங் செய்து கொண்டு வந்தேன்!

அடுத்து இங்கு வரப் போகிறேனா இல்லையா என்பதை காலத்தின் கையில் ஒப்படைத்து விட்டேன் என்பதை விட , என் கையில் கொடுக்கப்பட்ட காலத்தை தீர்மானிக்க நான் பல விடயங்களை முன்னிறுத்தி சென்னை சென்ற பிறகு தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்த அமெரிக்கா பல மனிதர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது அதன் மூலமாக பல விடயங்களை , பல அனுபவங்களை கற்றுத்தந்திருக்கிறது.

என்னதான் இங்கு பல வருடங்கள் இருந்தாலும் நம் அடையாளத்துடன் , உதவி மனப்பான்மையுடன் இருக்க விரும்பும் மனிதர்கள், இங்கு வந்த சில நாட்களிலேயே நம் அடையாளத்தை மறைக்க நினைத்து மறைக்க முடியாமல் கொண்டையை வெளிக்காட்டும் மனிதர்கள். அமெரிக்கா தான் சொர்க்கம், அமெரிக்கா தான் உலகம் என்று இருக்கும் மனிதர்கள்.( இவர்களின் பார்வையில் நம் ஊர் ஒரு நரகம்!!!)

இவர்களாவது பரவாயில்லை... என்ன சார் கிளம்புறீங்களா... நான் இங்கு குடியுரிமையுடன் இருக்கிறேன், வந்து 25, 30 வருடங்கள் ஆகிவிட்டது. உங்கள் குழந்தையை வேண்டுமானால் நான் தத்து எடுத்துக் கொள்ளட்டுமா என்று ஒருவர் கேட்டாரே பார்க்கலாம். அவர் மீது எனக்கு கோவம் வரவில்லை, பரிதாபம் தான் வந்தது. அவரின் மன நிலை என்ன.... அமெரிக்காவில் வாழ்வது மட்டும் தான் வாழ்க்கை என்று நினைக்கிறாரா இல்லை பணம் இருப்பதால் எந்த உறவு முறையையும் வாங்கி விடலாம் என்று நினைக்கிறாரா.... இவர்களை போன்றோரை அமெரிக்கா காப்பாற்றட்டும், இவர்களை போன்றோரிடமிருந்து அமெரிக்கா காப்பாற்றப்படட்டும்!!!

No comments: