Tuesday, February 21, 2012

சிந்து - சிந்தி - சிந்தியா --- இந்து - இந்தி - இந்தியா 2

சிந்து - சிந்தி - சிந்தியா --- இந்து - இந்தி - இந்தியா (Sindhu - Sindhi - Sindhiya - Indhu - Indhi - Indhia)[ உண்மை வரலாற்றை தெரிந்து கொள்ள,புரிந்து கொள்ள ஒரு சிறு முயற்சி!!! ]

இந்திய போராட்ட வீரர்களை தீவிரவாதிகள் - மிதவாதிகள் என்று பிரிக்கலாம் என்றும், காந்தியின் வழி தொட்டவர்கள் மிதவாதிகள் என்றும், திலகரின் அடிவருடிகள் தீவிரவாதிகள் என்றும் நமக்கு சொல்லிக்கொடுத்தது நம் பள்ளிக்கூட வரலாற்றுப்பாடம்,இவர்களுக்கு அப்பாற்பட்டு சுதந்திர கால கட்டத்தில் வாழ்ந்த அரசியல் விடுதலைக்கு அப்பாற்பட்டு சமூக விடுதலையை முன்னிறுத்திய பெரியார் மற்றும் அம்பேத்காரின் பல்வேறு போராட்டங்களுக்கு நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட வரலாறு முக்கியத்துவம் கொடுக்கவில்லை ஒரு வேளை அது இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக சிலர் கருதியிருக்கக்கூடும்!!! மேலும் இந்த தீவிரவாதிகளும்,மிதவாதிகளும் சந்திக்கும் புள்ளியும் இருட்டடிக்கப்பட்ட,மறைக்கப்பட்ட வரலாறாகவே உள்ளது... ஒரு சின்ன உதாரணத்தின் மூலம் தொடங்கலாம்.
“ஆங்கிலச் சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்துருவாகிய ஆங்கிலேயரைத் துரத்தி தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்சுனன் முதலியவர் இருந்து வந்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இது தான் இந்து ஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை"
இது வாஞ்சினாதன் ஆஷ் துரையை சுட்டுக்கொன்று, தானும் இறந்த பொழுது அவன் சட்டைப்பையில் இருந்த கடிதம்.இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை ஆனால் குறிப்பாக ஆஷ் துரையை கொன்ற நோக்கமும் நமக்கு தெரிய வேண்டுமல்லவா...

பிரிட்டிஷ் ஆட்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ்துரை, அம்மாவட்டத்தில் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட அருந்ததி சமூகத்தினரை சமமாக மதித்தார். தனது அலுவலகத்தில் நிலவிய தீண்டாமையை ஒழித்தார். அலுவலகத்தில் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும். ஒரே குடத்தில் தண்ணீர் எடுத்து குடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். குற்றால அருவிகளில் தெய்வங்களும், அவருக்கு பூசை நடத்தும் “பிராமணர்களும்” மட்டும் தான் குளிக்க வேண்டும் என்ற சாதித் தடையை நீக்கி அருந்ததியினர் உட்பட அனைவரும் குளிக்க ஆணையிட்டார். தானும் அதே அருவியில் குளித்தார்

ஆஷ் துரை மாலை நேரத்தில் காலாற நடைபயிற்சி மேற்கொள்ளும் பழக்கம் உள்ளவர். அப்படி ஒருநாள் வழக்கமாக போகும் ராஜபாட்டைவிட்டு விலகி வேறு பாதையில் போகிறார். உடன் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தரை பின்னால் தனது சாரட்டை மெதுவாக குதிரைகளை நடத்தி கூட்டி வரச்சொல்லிவிட்டு நடந்துகொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் கேட்கிறது. நடைப்பயிற்சியில் இருந்தவர் ஓசை வந்த திசை நோக்கினார் . நாலைந்து குடிசைகள் கொண்ட குடியிருப்பு பகுதியில் இருந்து ஓசை வந்ததை உணர்ந்த ஆஷ் துரை அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் குதிரகளை நடத்தி அழைத்துவந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார். ஏன் என்று வினவிய துரைக்கு "அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை என்றும் நீங்கள் அங்கு போகக்கூடாது என்றும் சொல்லுகிறார். ஓரளவு தமிழ்நாட்டு ஜாதிய சூழல் விளங்கிய ஆஷ் துரை, ராவுத்தரை பார்த்து நீ போய் பார்த்து வருவாயா எனக்கேட்கிறார். "சரி துரை நான் போய் பார்க்கிறேன் என்றபடி சேரிக்குள் போன முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார் " மொத பிரசவம் துரை சின்ன பொண்ணு ரெண்டுநாள கத்திட்டு இருக்காளாம், பிள்ளை மாறிக்கிடக்காம்" எங்கிட்டு துரை பொழைக்கபோகுது என்றார். ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே என்று துரைக்கேட்க , அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க அய்யா பின்ன எப்படி வண்டு கட்டி டவுணுக்கு கொண்டு போறது என்றார் முத்தா ரவுத்தர்.

இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி.ஆஷ் துரை இறங்கி அக்குடிசை நோக்கி போனார். அவரை தடுக்க முனைந்த ராவுத்தரின் முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. உள்ளே சென்று பார்த்து வந்த துரையின் மனைவி உடனே மருத்துவமனை கொண்டு சென்றால் ஒரு உயிரையெனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார். அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையொட்டியை பணித்தார் துரை. ஓடிப்போன ராவுத்தர் ஊரின் மேற்குபகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது துரையின் வண்டியொட்டி எனத்தெரிந்த ஒரு பார்ப்பணர் வழிமறிக்கிறார். என்ன விடயம் என்வென்று சொல்லி ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வந்தார். அந்த வழியாய் வண்டிப்பாதை அக்கிரஹாரத்தை தாண்டிதான் சென்றாகவேண்டும். சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டுவண்டு மறிக்கப்படுகிறது. ஒரு சேரிப்பெண்ணை ஏற்றப்போகும் வண்டி இப்பாதை வழியே போகக்கூடாது என்று பார்ப்புகள் வழிமறித்து விடமறுக்கிறார்கள். வண்டி கொடுத்த குடியானவனையும் ஊர் நீக்கம் செய்துவிடுவோம் என எச்சரிக்கிறார்கள். வண்டி கொண்டு வர சொன்னது துரையும் அவரின் மனைவியும்தான் என்று விபரம் சொன்ன பிறகும் ஏற்க மறுக்கிறார்கள் . இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார் ராவுத்தர்.இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள், தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார். குதிரையோட்டியின் பக்கதிலேறி அமர்ந்து கொண்டார். வண்டி அக்கிரஹாரம் நுழைகிறது. பார்ப்புகள் கூட்டமாய் வழிமறிக்கிறார்கள் "ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக்கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது"என்கிறார்கள். வழிவிட சொல்லிப்பார்த்தார் மறுக்கவே வண்டியைக்கிளப்பு என்று உத்தரவிடுகிறார். மீறி மறித்த பார்ப்புகளின் முதுகுத்தோல் துரை அவர்களின் குதிரைசவுக்கால் புண்ணாக்கபடுகிறது. அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு காப்பாற்றப்பட்டாள். ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான் அவன் பெயர் வாஞ்சிநாதன். அப்போது எடுத்த சபதம்தான் வாஞ்சிநாதனை கொலைசெய்ய தூண்டியது. சனாதான காவலனாக , மனித உயிரைவிட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு இன்று வரை மறைக்கபட்டு வருகிறது. இதுவும் ழான் வோனிஸ் எழுதிய Ash Offcial Notes எனும் குறிப்புகளில் அரசு ஆவனக்காப்பகங்களில் தெரிந்தே உறங்கிக்கொண்டிருக்கிறது.

இன்னும் சில வரலாற்று உண்மைகளையும், எப்படி மிதவாதிகள் இவர்களிடமிருந்து வேறுபட்டார்கள் (பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை!?),இந்த தீவிரவாதிகளிடமிருந்து மாறுபட்ட சிலரை பற்றியும் அடுத்து பார்க்கலாம்...

சிந்து - சிந்தி - சிந்தியா --- இந்து - இந்தி - இந்தியா

சிந்து - சிந்தி - சிந்தியா --- இந்து - இந்தி - இந்தியா (Sindhu - Sindhi - Sindhiya - Indhu - Indhi - Indhia)[ உண்மை வரலாற்றை தெரிந்து கொள்ள,புரிந்து கொள்ள ஒரு சிறு முயற்சி!!! ]

இந்தியா என்று கூறியவுடனும், ஜன கன மன கதி பாடும்பொழுதும் மெய் சிலிர்ப்பது எல்லாம் எனக்கும் நிகழ்ந்தது நான் பத்தாவது படிப்பதற்கு முன்பு வரையில்...ஒவ்வொரு சுதந்திர நாளிலும் பள்ளிக்கு செல்லும் பொழுது எங்கள் நகருக்கு(லெனின...் நகர்) பக்கத்து நகரை(ராம் நகர்) தாண்டி செல்கையில் காக்கி சட்டை,அரைக்கால் சட்டை மற்றும் தொப்பியுடன் ஒரு கூட்டம் ஆவேசமாக சுதந்திர நாளை கொண்டாடுவதையும்,எங்களை நிறுத்தி கொடிக்கு வணக்கம் செலுத்தி விட்டு போக சொல்வதையும் அந்த வயதில் நான் பெரிதாக யோசித்ததில்லை,யோசிக்கும் மன நிலையும் அப்பொழுது இல்லை மறைக்கப்பட்ட வரலாற்றையே நான் அதுவரை பள்ளியில் படித்ததால்.....அப்பொழுதெல்லாம் காந்தியும், நேருவும் தான் எனக்கு கதா நாயகர்கள்!!! அந்த கூட்டத்தை பற்றி அப்பா சொல்வார் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் என்று...அப்பொழுது ஒரு விடயத்தை பற்றி மட்டும் ஒப்புமை படுத்திப் பார்க்கத் தோன்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்த கோட்ஸே காந்தியை கொன்றான் என்ற நிகழ்வையும் அப்பா கூறிய அந்த விளக்கத்தையும் ஆனால் அதற்கு மேல் அந்த விடயத்தை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு அப்பொழுது இல்லை...சிறு வயதிலிருந்தே பேச்சு,கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு இருந்ததால் 1997 ஆம் ஆண்டு (பத்தாவது படித்துக் கொண்டிருக்கும்பொழுது)எங்கள் பள்ளியில் கோலாகலமாக கொண்டாடிய இந்திய சுதந்திரத்தின் 50 வது ஆண்டு பொன்விழாவில் பேசினால் என்ன என்று தோன்றியது.அதற்கான குறிப்புகளை சுப வீயிடமிருந்து(அப்பாவின் நெருங்கிய நண்பர்) பெற்ற பொழுது,அவர் கூறிய இரண்டு குறிப்புகள் இந்திய சுதந்திரத்தின் மீது இருந்த ஆர்வத்தை சிறிது குறைத்தது...இந்த பொன்விழாவில் தான் உத்திரபிரதேசத்தில் அதுலா தேவி என்ற தாழ்த்தப்பட்ட பெண் கோயிலுற்குள் நுழைந்த காரணத்தினால் அவளை பலாத்காரம் செய்து அவள் கணவனை கொன்ற நிகழ்வு...மேலும் கே.ஆர் நாராயணனை இந்தியாவின் முதல் குடிமகனாக ஆக்கினால் மட்டும் இதற்கு தீர்வு கிடைத்திடாது ஏனெனில் அவருக்கும் திருப்பதியில் சிவப்பு கம்பள விரிப்பு மறுக்கப்பட்ட நிகழ்வு....இந்த இரண்டு குறிப்புகளை முன்னிறுத்தி பேசியபொழுது வித்தியாசமாக இருந்தது எனக்கும் கேட்டவர்களுக்கும்!!! இதன் மூலம் எனக்கு தோன்றிய கேள்வி.. இது யாருக்கு கிடைத்த சுதந்திரம்...???அப்பொழுது தான் அப்பாவின் மூலம் எனக்கு நன்கு பரிச்சயமான பெரியாரின் மேலும்,மேலோட்டமாக அறிமுகமான அம்பேத்காரின் மேலும் ஆர்வம் அதிகரித்தது.........ஆனால் அப்பொழுதும் காந்தி, நேரு மீதிருந்த மதிப்பு குறையவில்லை....சிந்தனைகளும், ஆய்வுகளும்(தந்தை பெரியார் நமக்கு விட்டுச் சென்ற கடைசி ஆயுதம்!!!) தொடரும் ......................