Thursday, April 19, 2012

சிந்து - சிந்தி - சிந்தியா --- இந்து - இந்தி - இந்தியா 3

பிளேக் நோய் வந்தபோது, அதற்குக் காரணமான எலிகளை வெள்ளைக்காரர்கள் வேட்டையாடியபோது நமது விநாயகப் பெருமானின் வாகனம் எலி, இந்த வெள்ளைக்கார மிலேச்சர்கள் நமது மதத்தில் தலையிடுகிறார்கள் என்று வெறி உணர்ச்சியை ஊட்டியதன் காரணமாக உணர்ச்சி வயப்பட்ட பக்தர்கள் இரு வெள்ளைக்கார அதிகாரிகளைக் கொன்று விட்டனர். இதன் பின்னணியிலிருந்து தூண்டியவர் என்பதால் இவருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மகாராஷ்டிரத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் சட்டசபையில் இட ஒதுக்கீட்டைக் கேட்டபோது ‘சட்டத்திற்குக் கீழ்ப்படிவதே உங்கள் கடமை. சட்டம் இயற்றுவதை பிராமணர்களிடம் விட்டுவிடுங்கள்’ என்று கருத்து சொன்னவர்.

சென்னை மாநிலத்தில் பார்ப்பனர் அல்லாதார் உணர்வு தோன்ற அதன் எதிரொலியாக மகாராட்டிரத்திலும் அந்தவுணர்வு தலை தூக்கியது. அப்பொழுது (1918) "இப்பொழுது எல்லோரும் சட்ட சபைக்குச் செல்ல வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள். செருப்புத் தைக்கிறவனும், எண்ணெய் செக்கு ஆட்டுகிறவனும், வெற்றிலைப் பாக்குக் கடை வைத்திருப்பவனும் (The Gobblers, The oil Mongers and Petty-Traders) சட்டசபைக்குப் போக வேண்டுமென்று ஏன் முயற்சி செய்கிறார்கள்? யார் யார் எது எதற்குப் போக வேண்டுமென்று ஒரு வரைமுறை கிடையாதா? (டாக்டர் அம்பேத்கர் அவர்களின் காந்தியாரும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன? என்ற நூல்)என்று கருத்துரைத்தவர் சுயராஜ்ஜியம் எமது பிறப்புரிமை என்று முழங்கியவரும் இந்திய மக்களால் லோக மான்ய திலகர் என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட பால கங்காதர திலகர்!

இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரவாதிகள் என்கின்ற வரிசையில் வரும் திலகர் மற்றும் அவரை பின் தொடர்ந்தோரும், மிதவாதிகள் என்று அழைக்கப்பட்ட கோகலே,காந்தி மற்றும் அவரை பின் தொடர்ந்தோரும் வெள்ளையர்களை எதிர்ப்பதை விட வர்ணாசிரம ஹிந்து தர்மத்தை காப்பதில் தீவிரவாத மற்றும் மிதவாத போக்கை கொண்டிருந்தார்கள் என்பது நிதர்சனமான உண்மை, தீவிரவாதிகளிடமிருந்து விதி விலக்காக பகத்சிங் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்கள் இந்த வர்ணாசிரம தர்மத்திற்கு அப்பாற்பட்டு வெள்ளையனை எதிர்ப்பதில் குறியாக இருந்தார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இவர்களிடமிருந்து மிகவும் அப்பாற்பட்டு வடக்கே ஜோதிபா பூலே, அம்பேத்கார் போன்றவர்களும் தெற்கே நாராயண குரு,அயோத்திதாசர்,ரெட்டை மலை சீனிவாசன் மற்றும் பெரியார் போன்றவர்கள் அரசியல் விடுதலையை விட சமூக விடுதலையில் அதிக கவனம் செலுத்தினார்கள் என்பதும் வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை.