Tuesday, October 30, 2012

இன்றைய அனுபவம் (29.10.2012) - சாதித்திமிரின் மிச்சங்களின் எச்சங்கள்


சாதி - படிப்பறிவும், பகுத்து அறியும் அறிவும் கிடைக்கப்பெறாத மக்களின் கோபக் கனலாக அவர்களின் அரிவாளில் மட்டுமே தெறிக்கும் என்பதில்லை, நன்கு படித்து, பகுத்து அறியும் அறிவு பெற்ற மக்களின் நயவஞ்சகத்தனமான சிரிப்பாக அவர்களின் நாக்கிலிருந்து கூட வெளிப்படலாம்.

முதலாமாவதை கூட நாம் சகித்துக்கொள்ள முடியும், மாற்றிவிட முடியும். இரண்டாமாவதை பொறுத்துக்கொள்வதே கடினம்.

நேற்று மதிய உணவு வேளையில் அலுவலகத்தில் நான் சந்தித்த ஒரு நபரே என்னுடைய மேற்குறிப்பிட்ட சிந்தனைக்கு காரணமாக அமைந்தவர், அவரது பெயர் ஸ்ரீனாத் சக்கரவர்த்தி, வயது 40 இருக்கலாம். அமெரிக்காவிலேயே படித்து இங்கேயே வேலை பார்ப்பவர். எங்களைப் பற்றின தகவல்களை பரிமாறிக்கொண்ட பிறகு பின்வருமாறு அவர் ஆரம்பித்தார்.

"நீங்கள் கத்தோலிக்கரா இல்லை வேறு பிரிவா..."

என் மூதாதையர்கள் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள் தான் என்று கூறிவிட்டு கிறித்துவத்தின் வேறு பிரிவுகள் பற்றியும் விவாதித்தோம். பொதுவாக என்னை கிறித்துவன் என்று குறிப்பிடுவதை நான் விரும்ப மாட்டேன் ஆதலால் அவரிடம் பின்வருமாறு கூறினேன்.

"நான் கடவுள் மறுப்பாளன்,பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவன்" என்று சொல்லிவிட்டு பெரியாரை தெரியுமா என்று கேட்டேன்.

தெரியும்,தி.க வரலாற்றையும் படித்திருக்கிறேன் என்றார். யாரும் பெரியாரை பின்பற்றுபவர் என்று வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள் என்றார்.

அவ்விதம் மறைக்கும் அளவிற்கு அவர் தவறு எதுவும்,செய்யக்கூடாத எதையும் செய்யவில்லையே என்றேன்.

அவருடைய குற்றச்சாட்டு.. He is aggressive என்பது.

அந்த காலத்தில் அப்படிப்பட்ட aggressiveness தேவைப்பட்டது, இப்பொழுது அந்த அளவிற்கு அதற்கு தேவை இல்லாமல் இருக்கலாம் என்று தெளிவுபடுத்தினேன்.

பிறகு எங்களின் பேச்சு எப்படியோ சாதியின் பக்கம் சென்றது. கிறித்துவத்தில் கூட சாதி இருக்கிறது என்றும், மதம் மாறியவர்கள் சாதியையும் பிடித்துக் கொண்டு வந்தால் எதற்கு மதம் மாற வேண்டும் என்பதாக விவாதம் சென்றது.

பிறகு அவர் கேட்ட ஒரு கேள்வி அவரின் உண்மை முகத்தை கொஞ்சம் வெளிப்படுத்தியது.

எதற்காக சாதி இருக்கக் கூடாது என்கிறீர்கள் என்றார்.

எதற்காக இருக்க வேண்டும் என்கிறீர் என்று கேட்டுவிட்டு சமூக ஏற்றத்தாழ்வை நீக்க மனிதனுக்குள்ள பேதத்தை போக்க சாதி களையப்பட வேண்டும் என்றேன் அதன் வேர் மனுவிலிருந்து வந்தது என்றும் கூறினேன்.

வேறுபாடு இல்லாத இடமில்லை என்று நியாயப்படுத்த முயன்றார், மேலும் அதற்கு உதாரண்மாக நானும் என் மனைவியும் கூட வேறுபடுவதாகவும் ஒரு அறிவுப்பூர்வ உதாரணத்தை அளித்தார்!

நேர்க்கோட்டு பிரிவிற்கும் (வழிபாடு அடிப்படையில் அல்லது இனத்தின் அடிப்படையில்), செங்குத்து அடிப்படையிலான பேதத்திற்கு வேறுபாடு உள்ளது என்று கூறினேன். நீங்கள் உங்கள் மனைவியை விட உயர்ந்தவர் என்று நினைத்தாலும் பிரச்சினை ஆரம்பிக்குமே என்றேன்.

மனுவில் குறிப்பாக எந்த இடத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று இருக்கிறது என்று கேட்டார்.

நிச்சயமாக இருக்கிறது என்றேன். நேரடையாகவும் சரி, குற்றங்களுக்கான தண்டனைகளின் வேறுபாடு என்கின்ற அடிப்படையில் மறைமுகமாகவும் இருக்கிறது என்றேன். குறிப்பாக எங்கே இருக்கிறது(சட்ட எண்)என்று மின்னஞ்சல் அனுப்புவதாகவும் கூறினேன்.

அவரிடம் உங்களிடம் ஒரு நேரடி கேள்வியை கேட்க வேண்டுமென்று கூறி பின்வருமாறு கேட்டேன்.

"இது பேதமல்ல வெறும் சமூகப்பிரிவு தானென்றால் கோயில் கர்ப்பக்கிரகத்தில் அனைவரையும் உள்ளே விட உங்களுக்கு சம்மதமா..."

அவர் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை...அடுத்த அறிவுப்பூர்வ உதாரணக் கேள்வியை கேட்டார். அந்த கேள்வி அவரின் உண்மை முகத்தை மேலும் தோலுரித்துக் காட்டியது மேலும் இவர் இங்கு படித்தவர் தானா என்கின்ற சந்தேகத்தையும் எழுப்பியது!?

அவரின் கேள்வி...உங்களின் source code- இல் கை வைக்க உங்கள் மகனை அனுமதிப்பீர்களா என்று...

கண்டிப்பாக அவன் கை வைத்து கற்றுக்கொள்ள எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றேன், நீங்கள் அனுமதிப்பீர்களா என்று மறுபடியும் கேட்டேன்.

அதற்கு கோயில் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டுமென்று கூறி நழுவ முயன்றார். அந்த நிர்வாகம் முடிவெடுத்தாலும் சிலர் சம்மதிக்க மாட்டார்களே என்றேன்.

இதற்கு பதில் இருக்கிறது, முதலில் மனுவில் இருக்கும் உயர்ந்தவர்,தாழ்ந்தவர் என்ற வரிகளை பற்றி விவாதிக்கலாம் இதை பிறகு பார்க்க்கலாம் என்றார்.

நானும் சரி என்று விடைபெற்றேன்.

அவரிடமிருந்து எழுந்து வரும்பொழுது இந்த கட்டுரையின் முதலில் நான் எழுதிய கருத்துகள் தான் என் மனத்தில் ஓடியது. மேலும் பெரியார் அப்படி என்ன செய்து கிழித்தார் என்று பலன் அனுபவித்த சில தமிழர்களே கேட்கிறார்களே அதற்கான ஒரு சிறு பதிலும் கிடைத்தது.



அவருக்கு எதிரில் அமர்ந்து தைரியமாக பேசும் துணிச்சலையும், பகுத்து அறிந்து விவாதிக்கும் ஆற்றலையும் கொடுத்ததே அந்தப் பெரியார் தானே...அவரும் அம்பேத்காரும் இல்லை என்றால் நாமும் இல்லை நாம் தின்னும் சோறும் இல்லை.....அவர்கள் எதிர்த்த சாதித்திமிரின் மிச்சங்கள் இன்றும் எச்சங்களை உமிழ்ந்து கொண்டு நம்மிடையே உலாவிக்கொண்டிருக்கின்றன என்பது வேதனைக்குரிய விடயமே...



Wednesday, October 24, 2012

இந்தியப் பண்டிகைகள்



நவராத்திரி ஐதீகம் :-


மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்புகின்றான் அப்போது இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. பின் அதை எவ்வாறு என்று அறிகின்றான். அப்போது ஞானசக்தி தோன்றுகின்றது. பின் கிரியா சக்தியினால் உலகைப் படைக்கின்றான். இக்கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)

நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.

நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்[மேற்கோள் தேவை].

இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.


இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது...

*நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு.*

இதுவாகட்டும் இல்லை தீபாவளியாகட்டும் நம்மையே அசுரர்கள், அரக்கர்கள் என்று புராணத்திலும், இதிகாசத்திலும் சொல்லிவிட்டு.. அசுரர் குல, அரக்கர் குல தலைவர்களை அவர்களின் கடுவுளர்கள் அழித்தது போல் காண்பித்து விட்டு அதை அவர்கள் விமர்சையாக கொண்டாடுவது இருக்கட்டும், நம்மையும் கொண்டாட வைக்கிறார்களே... என்னே ஒரு சாமர்த்தியம்? பெரியாரின் தன்மானமும், சுயமரியாதையும் ,பகுத்தறிவும் இதைத் தான் நமக்கு போதித்ததா???இந்தியர்களின் பண்டிகை என்று கூறும்போதெல்லாம் நம் தனித்தன்மையை இழந்து இன்னமும் நாம் இந்திய ஒன்றியத்தில் இருக்க வேண்டுமா என்று நினைக்கத் தோன்றுகிறது!



Friday, October 19, 2012

அணு உலை - அழிவா இல்லை அரணா???

அணு உலையை ஆதரிப்பது, எதிர்ப்பது என்கின்ற நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன்பு அணு உலை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சில அரசியல் கட்சிகள் மற்றும் சில முக நூல் நண்பர்கள் மட்டுமே அணு உலை பற்றி ஆராய்ந்து அதை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் நிலையை எட...ுக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும், ஆதரிக்கும் கட்சியின் நிலையை சார்ந்தே, தங்களுக்கு பிடித்தமான கட்சியின் நிலைப்பாட்டை மையமாக வைத்தே முடிவெடுக்கிறார்கள்.


அணு உலை மின்சாரத் தேவை என்பது சரியா?????

உண்மை தான் ஆனால் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் அணு உலை மூலம் நாம் பெறும் மின்சாரம் வெறும் 3 சதவீதம் மட்டுமே...மேலும் இந்த அணு உலைகள் மூலம் 40 வருடங்கள் மட்டுமே மின்சாரம் பெற முடியும் ஆனால் அவைகள் வெளியிடும் கதிரியக்கமோ 48,00,000 வருடங்கள் உயிர்ப்புடன் இருக்கும்,இந்த உலைகள் மின்சாரத் தயாரிப்போடு மட்டும் தொடர்புடையது அல்ல,அணு ஆயுதத்தயாரிப்போடும் தொடர்புடையது.

அணு உலை விபத்தை பிற விபத்துக்களோடு தொடர்புபடுத்துவதோடு சரியா?????

இந்த நாகரிக உலகில் அணு உலை பற்றின பயம் தேவையில்லாதது என்கின்ற கூற்றும் பரவலாக இருக்கிறது. முன்பு மகிழுந்துவை பயன்படுத்த தயங்கினோம், ரயிலை பயன்படுத்த தயங்கினோம் மற்றும் வானூர்தியை பயன்படுத்த தயங்கினோம் ஆனால் இப்பொழுது அனைத்தும் பழக்கமாகிவிட்டது, பயன்பாட்டிற்கு வந்து விட்டது அதை போலத்தான் அணு உலையும் என்கின்ற வாதம் வாதத்திற்கு மட்டுமே பொருந்துவதாகும்.எந்த விபத்தும் அணு உலை விபத்தை போல் தலைமுறையை பாதிக்கும் கதிரியக்கத்தை வெளிப்படுத்தாது என்பதும், அணு உலை பயன்பாட்டில் இருக்கும்பொழுதே கதிரியக்கத் கழிவுகளை வெளிப்படுத்தும் என்பதும் மறைக்க/மறுக்க முடியாத உண்மையாகும்,மேலும் எண்ணிக்கையில் நூற்றுக்கணக்காக ஏற்படும் விபத்துக்களோடு இலட்சக்கணக்கில் விபத்துக்களை ஏற்படும் , தலைமுறை தலைமுறையை பாதிக்கும் அணு உலை விபத்துக்களோடு தொடர்பு படுத்துவதும் அறியாமையே...

கூடங்குள அணு உலை நவீன தொழில் நுட்பத்தில் இருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை என்கின்ற கூற்று உண்மையா?????

எந்தவித நவீன தொழில் நுட்பத்தை கையாண்டிருந்தாலும் விபத்து என்று வருகின்ற பொழுது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும்,அணு உலைகள் வெளியிடும் கதிரியக்க கழிவுகளால் பாதிப்பு ஏற்படும் என்பதும் அனைவரும் அறிந்த விடயமே.(கதிரியக்கத்தால் வெளிப்படும் கதிர்வீச்சு கதிரியக்க மாசுவிற்கு காரணம் என்று தமிழக அரசின் இணையத்தளத்தில் இருப்பதையும், கூடங்குளத்தில் முதல் அணு உலை இயங்கத்தொடங்கும் பொழுது நொடிக்கு 130,000,000,000,000,000 கதிர்வீச்சி துகள்களை வெளிப்படுத்தும் என்கின்ற அய். நா. அறிவியல் குழுவின் அறிக்கையும் இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் அணு உலை விபத்து காப்பீடு சட்டம் - 2010, சுனாமி, ஆயுத தாக்குதல் மற்றும் எதிர்பாராமல் அணு உலையில் நடக்கும் விபத்துக்களுக்கு எந்த விதத்திலும் அணு உலை நிர்வாகம் பொறுப்பாகாது என்று கூறியிருப்பது என் அப்பா குதிருக்குள் இல்லை என்று கூறுவதை போல் தான் உள்ளது) மேலும் நவீன தொழில் நுட்பத்தில் செர்னோபிலில் கட்டமைத்த அணு உலை 1986-லும், புகுஷிமாவில் கட்டமைத்த அணு உலை 2011-லும் விபத்துக்குள்ளான நிகழ்வும் இங்கு கவனிக்கத்தக்கது.

சூரிய மின்சக்தி மூலம் மின் தேவையை பூர்த்தி செய்ய இயலுமா?????

இப்பொழுது ஒரு பரவலான கருத்து நிலவுகிறது, சூரிய மின் சக்தியின் மூலம் மின் தேவையை நிறைவு செய்து கொள்ள செலவு அதிகமாகும் என்பது, இது ஒரு விதத்தில் உண்மை என்றாலும் அந்த செலவும் கூட நிலத்தை ஆக்கிரமிப்பதால் ஏற்படுவதே ஆகும், அரசாங்கம் சிறிது சிறிதாக இதை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் அணுமின் உலையின் தேவையே எதிர்காலத்தில் இருக்காது. பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் கூறும் கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் வசதி படைத்த அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்காத தனியார் நிறுவனங்களும் தங்களுக்கான மின் தேவையை சூரிய சக்தி மூலம் நிறைவு செய்யும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் உதாரணத்திற்கு திருவண்ணாமலையிலுள்ள ஒரு பள்ளியும், பெரியார் - நாகம்மை பல்கலைகழகமும் சூரிய சக்தி மூலம் மின் தேவையை பூர்த்தி செய்வதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனக்கு கிடைக்காத மற்றும் கிடைத்த உந்து சக்திகள்...

தாய்ப்பால் கிடைக்காத ஒரு குழந்தை குறைந்த பட்சம் அதற்கு இணையான ஒரு பால்,ஊட்டம் கிடைக்காதா என்று ஏங்குவதை போல் தான், பெற்றோரிடமிருந்து ஊக்கம் கிடைக்கப்பெறாத நான் அதை என் வாழ் நாளில் பலரிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் சில சமயம் ஏமாந்தும் கொண்டிருக்கிறேன்.


அந்த பழக்கத்தினால் தான் என்னவோ சமயங்களில் என் மகனை வாய் திறந்து ஊக்கப்படுத்தவும் தவறி விடுகிறேன், என் மனைவி சுட்டிக்காட்டும்பொழுது தான் அந்த தவறை உணர்கிறேன்.

குழந்தைகள் உங்களின் மூலமாகப் பிறந்தவர்கள், உங்களுக்காகப் பிறந்தவர்கள் அல்ல. இந்த உலகத்தை அவர்களின் கண்கள் மூலமாகவே பார்க்கட்டும், உங்களின் கண்கள் மூலமாக பார்க்க வற்புறுத்தாதீர்கள். என்ககு மிகவும் பிடித்த/பரிச்சயமான வரிகள் இவை.என் பெற்றோர் இதில் விதி விலக்கு. என் கண்களை மட்டுமல்ல பல சமயங்களில் அவர்கள் கண்களையும் சேர்த்து கட்டி கொள்வதில் தான் ஆர்வமாக இருந்தார்கள். இது அவர்களின் மீது குற்றம் சொல்லும் கட்டுரை அல்ல, எதிர்காலத்தில் என் மகனால் என் மீது குற்றம் சுமத்தாமலிருக்க எனக்கு எச்சரிக்கை படுத்தும் கட்டுரையாக இருக்கலாம்.

இந்த நேரத்தில் என் வாழ் நாளில் எனக்கு ஊக்கம்/உற்சாகமளித்த நபர்களையும் நினைவு கூர்கிறேன். நினைவு கூர்வதை விட நன்றி கூர்வதே மிகவும் பொருத்தமாகும்.

என் சிறு வயதில் 5, 6 படிக்கும்பொழுது என் அம்மா வழி வந்த மாமாதான்(பாபு) எனக்கு ஹீரோ. ப்ரூஸ்லி, ஜாக்கி சான், மைக்கேல் ஜாக்சன் போன்றோரை அறிமுகப்படுத்தியது அவர் தான். நாம் வாழ்க்கையில் பயணிக்கும் வழித்தடத்திலிருந்து விலகி எதிர்படும் பல விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அவரின் மூலமாகத்தான் நான் கற்றிருக்க வேண்டும். இப்பொழுது நான் தினமும் கடைபிடித்து வரும் உடற்பயிற்சியாகட்டும் இல்லை கற்றுக்கொண்ட யோகாசனப் பயிற்சியாகட்டும், இப்பொழுது கற்றுக்கொண்டிருக்கும் தற்காப்புக் கலையாகட்டும் அனைத்திற்கும் அவர் தான் பிள்ளையார் சுழியாக இருந்திருக்கக் கூடும். உடற்பயிற்சி, கராத்தே, கைபந்து மற்றும் நடனம் இவைகளில் அவர் கொண்டிருந்த ஆர்வத்தினால் அந்த காலத்தில் அவரை நான் ஹீரோவாக நினைத்திருந்தேன்... கைபந்து மற்றும் நடனம் மேலும் பாடுவது, இசை போன்றவற்றில் எனக்கு இருந்த ஆர்வத்தையெல்லாம் என் பெற்றோர் அவர்களுக்கும் எனக்கும் சேர்த்து கட்டிவிட்ட கருப்பு துணியால் எப்பொழுதோ காணாமல் போய்விட்டது.

நான் இப்பொழுது எழுதும் கவிதை, கதை மற்றும் கட்டுரை போன்றவைகளுக்கு என் அப்பா தான் அச்சாரம் என்பதை நான் மறுப்பதற்கில்லை, என் அப்பா மரபுக் கவிதை எழுதுபவர்.ஆறேழு புத்தகங்கள் எழுதியிருப்பவர், தமிழ் பாட புத்தகத்திலும் அவரின் கவிதைகள் வந்திருக்கின்றன. என்ன தான் அச்சாரமாக இருந்தாலும் நான் ஆரம்ப கட்டத்தில் எழுதிய கவிதைகளை குறைந்த பட்சம் நன்றாக எழுதுகிறாய், நன்றாக இருக்கிறது என்று மனம் திறந்து, வாய் திறந்து பாராட்டியதில்லை. நான் ஒன்பதாவது படிக்கும் பொழுது எனக்கு கிடைத்த என் நண்பன் வீர நாராயணன் நான் எழுதி காண்பிக்கும் மொக்கை கவிதை, கதைகளை கூட பொறுமையாக படித்து உணர்ச்சி மேலிட ஒரு முக பாவனையுடன் அதை விமர்சிப்பான், அந்த மகிழ்ச்சிக்கு இந்த உலகில் ஈடு இணையேது? அவன் இப்பொழுது என் கண்ணுக்கும், கருத்துக்கும் எட்டாத தொலைவில் இருக்கிறான்..இருக்கிறான் என நம்புகிறேன், நானும் இருக்கிறேன் என அவனும் நம்புவான். அந்த நம்பிக்கையில் தான் இருவரும் ஒருவரையொருவர் தேடிக்கொண்டிருக்கிறோம்.

வாரத்திற்கொருமுறை தவறாமல் வந்து நிற்கும் தொழு நோயாளிக்கு அம்மா தரும் 1 அல்லது 2 ரூபாயை போடுவதும், முன் பின் தெரியாமல் வாசலில் வந்து நின்று கையேந்துபவருக்கு அம்மா உணவளிப்பதும் இவை போன்ற செயல்கள் தான் இன்று நான் ஈடுபடும் சில சமூக சேவைக்கு காரணமாக இருந்தாலும்,இப்பொழுது நான் மேற்கொள்ளும் எந்த சேவையையும் அவர்கள் ஆர்வமாக கேட்டறிந்ததில்லை,பாராட்டியதில்லை.இந்த உலகில் பெரும்பாலானவர்கள் ஏமாற்றுபவர்கள் ,அனைத்தையும் சந்தேகிக்க வேண்டும் என்ற அவர்களின் பொதுப்படையான விமர்சனம் சில சமயங்களில் ஏன் முன்பிருந்த நிலையிலிருந்து முரண்படுகிறார்கள் என்று நினைக்க தோன்றும்.

என் பெற்றோர்கள் அவர்களுக்கு தெரியாமலேயே இன்று நான் ஈடுபடும் சில செயல்களுக்கு காரண்மாக இருந்தார்கள் என்ற பகிழ்ச்சி இருந்தாலும் ஏன் அவர்கள் அந்த செயல்களை வெளிப்ப்டையாக பாராட்டியதில்லை என்கின்ற ஆதங்கம் இன்றும் என் அடி மனத்தில் இருக்கத்தான் செய்கிறது.

இலயோலாவில் முது நிலை கணிப்பொறி கல்வி படிக்கும்பொழுது நான் சந்தித்த இரு நபர்கள் என் வாழ்வில் முக்கிய உந்து சக்திகளாக இருந்தனர் என்பதை இப்பொழுது நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். ஒருவன் எனது நண்பன் வின்ஸ்டன்...ஒரு சந்தர்ப்பத்தில் நூலகத்தில் புத்தகம் எடுக்கும்பொழுது எதேச்சையாக தமிழ் பிரிவிற்கு நாங்கள் இருவரும் சென்றிருந்தோம், அங்கிருந்த புத்தகங்களை ஆராய்ந்தபொழுது ஜெயகாந்தன் முதல் முதலாக நெருக்கமாக பரிச்சயமானார்,அவனுக்குக் கூட. அதன் பிறகே குழந்தைதனமில்லாமல் யதார்த்தமாகவும், முதிர்ச்சியாகவும் சிறுகதைகள் எழுதும் ஆர்வம் எழுந்தது. அந்த சிறுகதைகளை படித்து அவன் வைத்த விமர்சனம் என் கதைகளில் ஜெயகாந்தனின் சாயல் தெரிகிறது என்று...ஆமாம் இன்றுவரை அவரின் சாயல் இல்லாமல் ஒரு சிறுகதையையும் என்னால் எழுத முடியவில்லை.

அடுத்த நபர் கணிப்பொறி முதல் வருடத்தில் பாடம் எடுத்த எங்களை விட 3 வயது மூத்த கணிப்பொறி ஆசிரியை ஜார்ஜிட்டா, அந்த வருடம் தான் அவர் தனது முது நிலை கல்வியை முடித்து எங்களுக்கு பாடம் எடுக்க வந்ததால் அவருக்கு தான் ஆசிரியை என்கின்ற நினைப்பை விட , எங்களில் ஒருவர் என்கின்ற நினைப்பே அதிகமாக இருக்கும். அவரின் வகுப்பில் விளையாட்டுத்தனங்கள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஒரு சந்தர்ப்பத்தில் என் கவிதை டைரியை படித்த அவர் வெளிப்படையாக வைத்த விமர்சனம்... நேற்றிரவு வேலைப்பளு காரணமாக இருந்த தலைவலி உன் கவிதையை படித்தது மூலம் நீங்கியது என்று. எனக்கு அந்த பாராட்டு வித்தியாசமான உந்து சக்தியாக இருந்தது. அதன் பிறகு நிறைய கவிதைகள் எழுதி அவர்களிடம் காண்பித்திருக்கிறேன் அவர்களின் தலைவலி நீங்க வேண்டும் என்பதற்காக அல்ல... நான் மேலும் உந்து சக்தி பெற வேண்டும் என்கின்ற சுயனலத்திற்காக!

சமீப காலத்தில் எனக்கு கிடைத்த உந்து சக்தி...அந்த நபர் கொஞ்சம்...கொஞ்ச நஞ்சமல்ல மிகவுமே வித்தியாசமானவர் நான் சந்தித்த நபர்களில்...அலுவலக வேலைக்காக இப்பொழுது அமெரிக்காவில் இருக்கும்பொழுது சந்தித்த நபர் மணிமேகலை. ஒரு 6 மாதம் கழித்து மிகவும் பரிச்சயமான தமிழ் முகத்தை பார்த்த மகிழ்ச்சியில் தான் முதல் முதலாக அவர்களிடம் பேசினேன். என் கவிதை மற்றும் கதைகளை அவர்கள் பாராட்டும் விதம் மிகவும் எளிது. ஆங்கிலத்தின் வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்தினாலும் நன்று என்கின்ற ஒற்றை வார்த்தையில் தான் அந்த பாராட்டு இருக்கும். எளிதான அந்த பாராட்டு மிகவும் வலிதான ஒன்றாக இருந்தது, மேலும் எழுதத் தூண்டியது.

என் அனுபவத்தை பதிவு செய்யும் இந்த கட்டுரை மூலம் எனக்கு கிடைத்த அனுபவமாக நான் பதிவு செய்ய விரும்புவது இரண்டு விடயங்கள்.

ஒன்று, நம்மை உற்சாகப்படுத்தும் உந்து சக்திகளாக, ஊக்க சக்திகளாக நாம் சந்திக்கும் நபர்களை விட நாம் சந்திக்கும் அனுபவங்களையும் , நாம் படிக்கும் புத்தகங்களையும் கொள்வதே சிறந்தது, ஏனெனில் அவைகள் தான் எப்பொழுதும், என்னேரமும், எந்த சந்தர்ப்பத்திலும் நம்மை விட்டு அகலாது, அதனால் நாம் ஏமாற்றமடைய வேண்டிய அவசியமே இருக்காது.

இன்னொன்று, நம் சந்ததிக்கு உந்து சக்திகளாக இருக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது, ஏனெனில் அவர்களின் பார்வையில் நாம் தான் ஹீரோ, அந்த பிம்பத்தை உடைத்துவிட்டால் அந்த ஏமாற்றம் அவர்களின் வாழ் நாள் முழுவதும் இருக்கும், அவர்களை கண்டிக்கும், தண்டிக்கும் அதே வேளையில் பாராட்டவும்,விமர்சிக்கவும், ஊக்குவிக்கவும் நாம் மறந்து விடக்கூடாது, அவர்களின் திறமையை கண்டறிந்து அதற்கு உந்து சக்திகளாக நாம் இருக்கும் கட்மையை சரிவர செய்தால் அதைவிட மகிழ்ச்சி தரும் விடயம் அவர்களுக்கு வேறொன்றும் இல்லை.

Tuesday, October 2, 2012

சிவாஜி - மேல் தட்டு வர்க்கத்தினால் கைப்பாவையாக்கப்பட்ட அடிமை!!!

சிவாஜி எதிரிகளை வீழ்த்துவதில் மாவீரன்,அடிமைப்பட்டு கிடந்த மராத்திய மண்ணை மீட்டெடுத்ததில் தீரன், விடுதலை வேட்கை கொண்ட மண்ணின் மைந்தன் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமுமில்லை.


பி.ஜெ.பி, ஆர்.எஸ்.எஸ்,சங் பரிவார்,சிவ சேனா கூட்டங்கள் மட்டுமல்ல மராத்திய மண்ணில் உள்ள அனைத்து மேல் தட்டு வர்க்கமும் சிவாஜியை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவதில...் சிவாஜியின் வீரம் மட்டும் தான் காரணமா இல்லை இதற்கும் மேல் ஏதாவது இருக்குமா என்று சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியாது, சிவாஜியை எந்த நேரத்திலும்/ எந்த காலத்திலும் அந்தக் கூட்டம் விட்டுக் கொடுத்ததில்லை.

தாழ்த்தப்பட்ட/ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ் நாளில் போராடிய மராத்தியத்தின் அம்பேத்காரை புகழாத இந்த கூட்டம், பெரியார் மற்றும் அம்பேத்காருக்கு அரை நூற்றாண்டு முன்பே மேலாதிக்க சாதி திமிருக்கு சாட்டை அடி கொடுத்த மராத்திய மகாத்மா ஜோதிராவ் பூலேவை புகழாத இந்த கூட்டம் , சிவாஜியை மட்டும் இந்த அளவுக்கு புகழ்வதேன் ? அவரை விட்டுக் கொடுக்க முனையாதது ஏன்???

1664 முதல் 1670 வரை ஆட்சிக்கட்டிலில் இருந்தார் சிவாஜி, அப்பொழுது முகலாய மன்னன் அவுரங்கசீப்பின் ஆட்சி தான் இந்தியா பெரும்பான்மையும் இருந்தது. அவர்கள் இருவரும் ஹிந்துவாக இருக்கும் பட்சத்திலும் இல்லை முஸ்லீமாக இருக்கும் பட்சத்திலும் பேரரசர் - சிற்றரசர் என்கின்ற அடிப்படையில் அங்கு போர் நிச்சயமாக நிகழ்ந்திருக்கும் ஆனால் அவர்களுக்கு இடையே நடந்த போரை ஹிந்து - முஸ்லீம் போராக திரித்தது மேற்சொன்ன கூட்டத்தின் மதவெறி பார்வை.


அடுத்து அண்ணாவின் சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்ஜியம் பல்வேறு வரலாற்று உண்மைகளை தோலுரித்துக் காட்டியது, என்ன தான் சிவாஜி எதிரிகளின் மீது வெற்றி கொண்டாலும், அரசனாக முடி சூட்டிக் கொள்ளும்போது இன்று அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடும் கூட்டம் சம்மதிக்கவில்லை. அவரின் குலம் ஆளப்பிறந்த குலம் அல்ல என்று வைதீகப் பார்ப்பனர்கள் வாதிட்டனர்,அதற்கு பிறகு காகப்பட்டரிடம் அவர் அடைக்கலம் புகுந்தபின்னரே அவரால் ஆட்சி கட்டலில் ஏற முடிந்தது, களத்தில் போர் வீரனான சிவாஜி அடிமை பட்டத்துடனே ஆட்சிக்கட்டிலில் ஏற முடிந்தது. சிவாஜியின் அரசாங்கமும் மேல் தட்டு வர்க்கத்தின் அனுசரனையோடும்,அவர்களுக்கு சாதகமாகவும், அவர்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவுமே அமைந்தது என்பது வரலாற்று உண்மை. நன்றி - சுபவீ வலைப்பூ

Monday, October 1, 2012

ஹிந்தி ஹிந்தியாவின் தேசிய மொழியா??? அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழியா???

இந்த கேள்வியே மிகவும் அபத்தமானது. ஹிந்தியா ஆங்கிலேய ஆளுகைக்கு உட்பட்டு இருக்கும் வரையில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தான் இருந்தது அதற்கு பிறகு ஹிந்தி வெறி கொண்ட சில ஆட்சியாளர்களால் பிரச்சினை சிறிது சிறிதாக தலை தூக்க ஆரம்பித்தது, அதற்கு எதிர்ப்பு வலுக்கும் பொழுது 1959-இல் நேருவின் உறுதி மொழியும் அதையொட்டி 1963-இல் அலுவல் மொழி சட்டமும் இயற்றப்பட்டது.


 நேருவின் உறுதிமொழி :- I believe also two things. As I just said, there must be no imposition. Secondly, for an indefinite period - I do not know how long - I should have, I would have English as an associate, additional language which can be used not because of facilities and all that... but because I do not wish the people of Non-Hindi areas to feel that certain doors of advance are closed to them because they are forced to correspond - the Government, I mean - in the Hindi language. They can correspond in English. So I could have it as an alternate language as long as people require it and the decision for that - I would leave not to the Hindi-knowing people, but to the non Hindi-knowing people  

இந்த உறுதிமொழியின் வாயிலாக இயற்றப்பட்ட அலுவல் மொழி சட்டத்தின்(என்ன தான் நேருவின் உறுதி மொழியை இந்த சட்டம் பிரதிபலித்தாலும் பல்வேறு இடைச்செருகல்கள் ஹிந்தி வெறியர்களால் திணிக்கப்பட்டது ) பிரச்சினைக்குரிய பகுதி (ஹிந்தி வெறியர்களால் பிரச்சினை கிளப்பப்பட்ட...) :- Notwithstanding the expiration of the period of fifteen years from the commencement of the Constitution, the English language MAY, as from the appointed day, continue to be used, in addition to Hindi

Instead of SHALL,they added MAY without listening others (Obviously Non-Hindi Speaking leaders and people)

அண்ணா எதற்கு ஹிந்தியை ஹிந்தியாவின் ஆட்சி மொழியாக்க எதிர்த்தார் என்கின்ற காரணத்தை அவர் வாயிலாக அறிவதும் இங்கு அவசியமாகிறது.
"If Hindi were to become the official language of India, Hindi-speaking people will govern us. We will be treated like third rate citizens". (Anti-Hindi Imposition Rally, Chennai Marina (Madras Marina), April 29, 1963)


"Making a language (Hindi) that is the mother tongue of a region of India the official language for all the people of India is tyranny. We believe that it will give benefits and superiority to one region (the Hindi-speaking region).... This and future generations in non-Hindi areas will suffer immeasurable hardships... Making Hindi the official language of India would destroy the age old language and culture of Tamil Nadu". (Court Trial for burning the Constitution of India to show opposition to Hindi imposition, December 3, 1963).

மேலும் ராஜ்யசபாவில் ஒரு உறுப்பினர் அண்ணாவிடம் பின்வருமாறு கூறினார்..."ராஜ்ய சபாவில் ஹிந்தி பேசுபவர்கள் அதிகம் அதனால் ஹிந்தியை தேசியமொழியாக அறிவிக்க வேண்டுமென்றார்." அதற்கு அண்ணா பின்வருமாறு பதிலுரைத்தார் "ஹிந்தியாவில் காகம் தான் அதிகம், ஏன் காக்கையை விட்டு விட்டு மயிலை தேசிய பறவையாக அறிவிக்க வேண்டும்?", எந்தவொரு வரைமுறையும், சட்ட திட்டமும் இல்லாமல் அவர்கள் விருப்பத்திற்கிணங்க திணிப்பதை சுயமரியாதையுள்ள எந்த இனமும் , எந்தவொரு மனிதனும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே ஹிந்தி பேசாத மக்களின் எண்ண ஓட்ட்மாக இருந்தது, இருக்கிறது, தமிழர்கள் மட்டும் தான் ஹிந்தியை எதிர்ப்பதாக பரவலாக ஒரு கண்ணோட்டம் இருக்கிறது, இது முற்றிலும் தவறானது. பால் தாக்கரே எதிர்க்கிறார், குஜராத் உயர் நீதி மன்றத்தின் சமீபத்திய ஆட்சி மொழி சம்பந்தப்பட்ட தீர்ப்பு தெளிவாக்குகிறது ஹிந்தி ஹிந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று.