Friday, October 19, 2012

எனக்கு கிடைக்காத மற்றும் கிடைத்த உந்து சக்திகள்...

தாய்ப்பால் கிடைக்காத ஒரு குழந்தை குறைந்த பட்சம் அதற்கு இணையான ஒரு பால்,ஊட்டம் கிடைக்காதா என்று ஏங்குவதை போல் தான், பெற்றோரிடமிருந்து ஊக்கம் கிடைக்கப்பெறாத நான் அதை என் வாழ் நாளில் பலரிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் சில சமயம் ஏமாந்தும் கொண்டிருக்கிறேன்.


அந்த பழக்கத்தினால் தான் என்னவோ சமயங்களில் என் மகனை வாய் திறந்து ஊக்கப்படுத்தவும் தவறி விடுகிறேன், என் மனைவி சுட்டிக்காட்டும்பொழுது தான் அந்த தவறை உணர்கிறேன்.

குழந்தைகள் உங்களின் மூலமாகப் பிறந்தவர்கள், உங்களுக்காகப் பிறந்தவர்கள் அல்ல. இந்த உலகத்தை அவர்களின் கண்கள் மூலமாகவே பார்க்கட்டும், உங்களின் கண்கள் மூலமாக பார்க்க வற்புறுத்தாதீர்கள். என்ககு மிகவும் பிடித்த/பரிச்சயமான வரிகள் இவை.என் பெற்றோர் இதில் விதி விலக்கு. என் கண்களை மட்டுமல்ல பல சமயங்களில் அவர்கள் கண்களையும் சேர்த்து கட்டி கொள்வதில் தான் ஆர்வமாக இருந்தார்கள். இது அவர்களின் மீது குற்றம் சொல்லும் கட்டுரை அல்ல, எதிர்காலத்தில் என் மகனால் என் மீது குற்றம் சுமத்தாமலிருக்க எனக்கு எச்சரிக்கை படுத்தும் கட்டுரையாக இருக்கலாம்.

இந்த நேரத்தில் என் வாழ் நாளில் எனக்கு ஊக்கம்/உற்சாகமளித்த நபர்களையும் நினைவு கூர்கிறேன். நினைவு கூர்வதை விட நன்றி கூர்வதே மிகவும் பொருத்தமாகும்.

என் சிறு வயதில் 5, 6 படிக்கும்பொழுது என் அம்மா வழி வந்த மாமாதான்(பாபு) எனக்கு ஹீரோ. ப்ரூஸ்லி, ஜாக்கி சான், மைக்கேல் ஜாக்சன் போன்றோரை அறிமுகப்படுத்தியது அவர் தான். நாம் வாழ்க்கையில் பயணிக்கும் வழித்தடத்திலிருந்து விலகி எதிர்படும் பல விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அவரின் மூலமாகத்தான் நான் கற்றிருக்க வேண்டும். இப்பொழுது நான் தினமும் கடைபிடித்து வரும் உடற்பயிற்சியாகட்டும் இல்லை கற்றுக்கொண்ட யோகாசனப் பயிற்சியாகட்டும், இப்பொழுது கற்றுக்கொண்டிருக்கும் தற்காப்புக் கலையாகட்டும் அனைத்திற்கும் அவர் தான் பிள்ளையார் சுழியாக இருந்திருக்கக் கூடும். உடற்பயிற்சி, கராத்தே, கைபந்து மற்றும் நடனம் இவைகளில் அவர் கொண்டிருந்த ஆர்வத்தினால் அந்த காலத்தில் அவரை நான் ஹீரோவாக நினைத்திருந்தேன்... கைபந்து மற்றும் நடனம் மேலும் பாடுவது, இசை போன்றவற்றில் எனக்கு இருந்த ஆர்வத்தையெல்லாம் என் பெற்றோர் அவர்களுக்கும் எனக்கும் சேர்த்து கட்டிவிட்ட கருப்பு துணியால் எப்பொழுதோ காணாமல் போய்விட்டது.

நான் இப்பொழுது எழுதும் கவிதை, கதை மற்றும் கட்டுரை போன்றவைகளுக்கு என் அப்பா தான் அச்சாரம் என்பதை நான் மறுப்பதற்கில்லை, என் அப்பா மரபுக் கவிதை எழுதுபவர்.ஆறேழு புத்தகங்கள் எழுதியிருப்பவர், தமிழ் பாட புத்தகத்திலும் அவரின் கவிதைகள் வந்திருக்கின்றன. என்ன தான் அச்சாரமாக இருந்தாலும் நான் ஆரம்ப கட்டத்தில் எழுதிய கவிதைகளை குறைந்த பட்சம் நன்றாக எழுதுகிறாய், நன்றாக இருக்கிறது என்று மனம் திறந்து, வாய் திறந்து பாராட்டியதில்லை. நான் ஒன்பதாவது படிக்கும் பொழுது எனக்கு கிடைத்த என் நண்பன் வீர நாராயணன் நான் எழுதி காண்பிக்கும் மொக்கை கவிதை, கதைகளை கூட பொறுமையாக படித்து உணர்ச்சி மேலிட ஒரு முக பாவனையுடன் அதை விமர்சிப்பான், அந்த மகிழ்ச்சிக்கு இந்த உலகில் ஈடு இணையேது? அவன் இப்பொழுது என் கண்ணுக்கும், கருத்துக்கும் எட்டாத தொலைவில் இருக்கிறான்..இருக்கிறான் என நம்புகிறேன், நானும் இருக்கிறேன் என அவனும் நம்புவான். அந்த நம்பிக்கையில் தான் இருவரும் ஒருவரையொருவர் தேடிக்கொண்டிருக்கிறோம்.

வாரத்திற்கொருமுறை தவறாமல் வந்து நிற்கும் தொழு நோயாளிக்கு அம்மா தரும் 1 அல்லது 2 ரூபாயை போடுவதும், முன் பின் தெரியாமல் வாசலில் வந்து நின்று கையேந்துபவருக்கு அம்மா உணவளிப்பதும் இவை போன்ற செயல்கள் தான் இன்று நான் ஈடுபடும் சில சமூக சேவைக்கு காரணமாக இருந்தாலும்,இப்பொழுது நான் மேற்கொள்ளும் எந்த சேவையையும் அவர்கள் ஆர்வமாக கேட்டறிந்ததில்லை,பாராட்டியதில்லை.இந்த உலகில் பெரும்பாலானவர்கள் ஏமாற்றுபவர்கள் ,அனைத்தையும் சந்தேகிக்க வேண்டும் என்ற அவர்களின் பொதுப்படையான விமர்சனம் சில சமயங்களில் ஏன் முன்பிருந்த நிலையிலிருந்து முரண்படுகிறார்கள் என்று நினைக்க தோன்றும்.

என் பெற்றோர்கள் அவர்களுக்கு தெரியாமலேயே இன்று நான் ஈடுபடும் சில செயல்களுக்கு காரண்மாக இருந்தார்கள் என்ற பகிழ்ச்சி இருந்தாலும் ஏன் அவர்கள் அந்த செயல்களை வெளிப்ப்டையாக பாராட்டியதில்லை என்கின்ற ஆதங்கம் இன்றும் என் அடி மனத்தில் இருக்கத்தான் செய்கிறது.

இலயோலாவில் முது நிலை கணிப்பொறி கல்வி படிக்கும்பொழுது நான் சந்தித்த இரு நபர்கள் என் வாழ்வில் முக்கிய உந்து சக்திகளாக இருந்தனர் என்பதை இப்பொழுது நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். ஒருவன் எனது நண்பன் வின்ஸ்டன்...ஒரு சந்தர்ப்பத்தில் நூலகத்தில் புத்தகம் எடுக்கும்பொழுது எதேச்சையாக தமிழ் பிரிவிற்கு நாங்கள் இருவரும் சென்றிருந்தோம், அங்கிருந்த புத்தகங்களை ஆராய்ந்தபொழுது ஜெயகாந்தன் முதல் முதலாக நெருக்கமாக பரிச்சயமானார்,அவனுக்குக் கூட. அதன் பிறகே குழந்தைதனமில்லாமல் யதார்த்தமாகவும், முதிர்ச்சியாகவும் சிறுகதைகள் எழுதும் ஆர்வம் எழுந்தது. அந்த சிறுகதைகளை படித்து அவன் வைத்த விமர்சனம் என் கதைகளில் ஜெயகாந்தனின் சாயல் தெரிகிறது என்று...ஆமாம் இன்றுவரை அவரின் சாயல் இல்லாமல் ஒரு சிறுகதையையும் என்னால் எழுத முடியவில்லை.

அடுத்த நபர் கணிப்பொறி முதல் வருடத்தில் பாடம் எடுத்த எங்களை விட 3 வயது மூத்த கணிப்பொறி ஆசிரியை ஜார்ஜிட்டா, அந்த வருடம் தான் அவர் தனது முது நிலை கல்வியை முடித்து எங்களுக்கு பாடம் எடுக்க வந்ததால் அவருக்கு தான் ஆசிரியை என்கின்ற நினைப்பை விட , எங்களில் ஒருவர் என்கின்ற நினைப்பே அதிகமாக இருக்கும். அவரின் வகுப்பில் விளையாட்டுத்தனங்கள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஒரு சந்தர்ப்பத்தில் என் கவிதை டைரியை படித்த அவர் வெளிப்படையாக வைத்த விமர்சனம்... நேற்றிரவு வேலைப்பளு காரணமாக இருந்த தலைவலி உன் கவிதையை படித்தது மூலம் நீங்கியது என்று. எனக்கு அந்த பாராட்டு வித்தியாசமான உந்து சக்தியாக இருந்தது. அதன் பிறகு நிறைய கவிதைகள் எழுதி அவர்களிடம் காண்பித்திருக்கிறேன் அவர்களின் தலைவலி நீங்க வேண்டும் என்பதற்காக அல்ல... நான் மேலும் உந்து சக்தி பெற வேண்டும் என்கின்ற சுயனலத்திற்காக!

சமீப காலத்தில் எனக்கு கிடைத்த உந்து சக்தி...அந்த நபர் கொஞ்சம்...கொஞ்ச நஞ்சமல்ல மிகவுமே வித்தியாசமானவர் நான் சந்தித்த நபர்களில்...அலுவலக வேலைக்காக இப்பொழுது அமெரிக்காவில் இருக்கும்பொழுது சந்தித்த நபர் மணிமேகலை. ஒரு 6 மாதம் கழித்து மிகவும் பரிச்சயமான தமிழ் முகத்தை பார்த்த மகிழ்ச்சியில் தான் முதல் முதலாக அவர்களிடம் பேசினேன். என் கவிதை மற்றும் கதைகளை அவர்கள் பாராட்டும் விதம் மிகவும் எளிது. ஆங்கிலத்தின் வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்தினாலும் நன்று என்கின்ற ஒற்றை வார்த்தையில் தான் அந்த பாராட்டு இருக்கும். எளிதான அந்த பாராட்டு மிகவும் வலிதான ஒன்றாக இருந்தது, மேலும் எழுதத் தூண்டியது.

என் அனுபவத்தை பதிவு செய்யும் இந்த கட்டுரை மூலம் எனக்கு கிடைத்த அனுபவமாக நான் பதிவு செய்ய விரும்புவது இரண்டு விடயங்கள்.

ஒன்று, நம்மை உற்சாகப்படுத்தும் உந்து சக்திகளாக, ஊக்க சக்திகளாக நாம் சந்திக்கும் நபர்களை விட நாம் சந்திக்கும் அனுபவங்களையும் , நாம் படிக்கும் புத்தகங்களையும் கொள்வதே சிறந்தது, ஏனெனில் அவைகள் தான் எப்பொழுதும், என்னேரமும், எந்த சந்தர்ப்பத்திலும் நம்மை விட்டு அகலாது, அதனால் நாம் ஏமாற்றமடைய வேண்டிய அவசியமே இருக்காது.

இன்னொன்று, நம் சந்ததிக்கு உந்து சக்திகளாக இருக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது, ஏனெனில் அவர்களின் பார்வையில் நாம் தான் ஹீரோ, அந்த பிம்பத்தை உடைத்துவிட்டால் அந்த ஏமாற்றம் அவர்களின் வாழ் நாள் முழுவதும் இருக்கும், அவர்களை கண்டிக்கும், தண்டிக்கும் அதே வேளையில் பாராட்டவும்,விமர்சிக்கவும், ஊக்குவிக்கவும் நாம் மறந்து விடக்கூடாது, அவர்களின் திறமையை கண்டறிந்து அதற்கு உந்து சக்திகளாக நாம் இருக்கும் கட்மையை சரிவர செய்தால் அதைவிட மகிழ்ச்சி தரும் விடயம் அவர்களுக்கு வேறொன்றும் இல்லை.

No comments: