Monday, July 20, 2015

கடவுள் - புரிதல் - குழப்பம்

என் உறவினர் ஒருவர் என்னிடம் வந்து உங்களுக்கு நிச்சயம் விசா கிடைக்கும், நாங்கள் கேட்டால் கடவுள் நிச்சயம் கொடுப்பார் என்றார்.
ஆகா எனக்காக வேண்டுகிறாரே என்றெல்லாம் என்னால் மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை ஏனென்றால் முதலில் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அடுத்து இது நாள் வரை எனக்கு நடந்ததெல்லாம் இயற்கையாக , என் முயற்சியில் மட்டுமே நடந்ததாக நான் நினைக்கும் என் தன் நம்பிக்கை. அமெரிக்கா செல்வதெல்லாம் எனக்கு இலக்காகவோ, இலட்சியமாகவோ இருந்ததில்லை, முதலில் எதேச்சையாக நடந்தது, இரண்டாவதாக என் முயற்சியில் நடந்தது அவ்வளவு தான்.அடுத்து நடக்கப் போவது என் முயற்சியில்/விருப்பத்தின் படி/முடிவின் படி நடக்கும்.
சரி அவரின் கூற்றுக்கு வருவோம்... அவரின் கூற்று மறுபடியும் என்னை கடவுள் - புரிதல் - குழப்பம் என்று இருக்கிறாரே என்கின்ற சிந்தனைக்குள் தான் என்னை கொண்டு செல்கிறது. இதை ஒரு சமூக பிரச்சினையாகத் தான் பார்க்க தோன்றுகிறது.
அது என்ன நாங்கள் கேட்டால் கொடுப்பார்... அவர் அந்த மதத்தில் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு அடிப்படையிலான பிரிவில் இருப்பவர். சரி அப்படியென்றால் மற்றொரு பிரிவில் இருப்பவர் கேட்டால் கொடுக்க மாட்டாரா??? எதற்காக நீங்கள் கேட்பதை அவர் கொடுக்க வேண்டும்??? உங்கள் பிரிவுக்கு மக்களை இழுக்கும் முயற்சியல்லவா இது??? மதத்தின் பெயரால், பிரிவின் பெயரால் கடவுளை களங்கப்படுத்துவது நாங்களா இல்லை நீங்களா???
பசியில் பஞ்சத்தில் பட்டினியில் வறட்சியில் நாள் தோறும் இறக்கிறார்களே, விவசாயிகள் இல்லாமையில் தற்கொலை செய்து கொள்கிறார்களே.... இவர்களை போன்று அத்தியாவசிய தேவைக்காக பலர் மடிகிறார்களே அவர்களில் எத்தனை பேர் உங்கள் கடவுளிடம் மன்றாடியிருப்பர், அதையெல்லாம் விடுத்து நீங்கள் டாலர் சம்பாதிக்க American Embassy-யில் உட்கார்ந்து கொண்டு Visa Stamping செய்வது தான் அவரின் வேலையா!!!??? அப்படிப்பட்ட கடவுள் இருந்து என்ன இல்லாமல் இருந்து என்ன...
இல்லை இது தான் கடவுளை பற்றின உங்கள் புரிதல் என்றால் உங்களின் குழப்ப நிலை தெளிய நிச்சயம் உங்கள் கடவுளிடம் நீங்கள் மன்றாடிக் கொள்ளுங்கள்!!!

Wednesday, July 15, 2015

குமரி கண்டமா சுமேரியமா - 2

தமிழரின் தோற்றத்தையும் பரவலையும் அறிந்து கொள்ள இன்று ஈரான், ஈராக் என்றும் பைபிள் காலத்தில் பாபிலோனியா என்றும் அதற்கு முன்பு மெசபடோனியா என்றும் அதற்கும் முன்பு சுமேரியா என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் நாகரிகமான அதன் வரலாற்றையும், அவர்களால் படைக்கப்பட்ட உலகின் முதல் நெடுங்கதை, முதல் காவியம் மற்றும் முதல் நாவலான கில்காமேஷ் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

தொழில் புரட்சி, மின்னணு புரட்சி, தகவல் தொழில் நுட்ப புரட்சி இதற்கெல்லாம் மூத்த உலகின் முதல...் புரட்சியான விவசாயப் புரட்சியை பொ.யு.மு (கி.மு)8000 வாக்கில் நிகழ்த்தி ஓட்ஸ், பார்லி, சோளம் முதலியவற்றை பயிரிட்டவர்கள் சுமேரியர்கள் என்று சொல்லப்படுகிறது.200 அடி கீழ் பகுதியும், 70 அடி உயரமும் கொண்ட அவர்களால் கட்டப்பட்ட சிகரங்களான ஜிகுராத்துகள் 7500 வருடங்கள் கழித்தும் இன்னும் கம்பீரமாக நிலைத்திருக்கின்றன. இவர்கள் செம்பையும் தாமிரத்தையும் உருக்கி வெண்கலத்தை கண்டுபிடித்தது பொ.யு.மு 3500 அப்பொழுது தான் எழுத்து முறையை கண்டுபிடித்தார்கள்.எகிப்தியர்களின் பிரமிடிற்கு ஜிகுராத்தே மூலம். இவர்களுக்கு பிறகு வளர்ந்த யூதர்கள் உட்பட பல்வேறு இனங்களும் வெவ்வேறு மொழிகள் பேசினாலும் அந்த மொழிகளை எழுத இவர்களின் சுமேரிய எழுத்து முறையையே பயன்படுத்தினர்.

தங்களை என்கி என்ற தெய்வம் அழைத்து வந்ததாக நம்பினார்கள். எரிது என்கின்ற உலகின் முதல் நகரத்தை நிர்மானித்தார்கள் அதற்கு மன்னனாக அலுலிம் உலகின் முதல் மன்னனானான், இது நடந்த காலகட்டம் பொ.யு.மு 5400 என்று குறிப்பிடப்படுகிறது.

கில்காமேஷுக்கு வருவோம். பைபிளில் வரும் நோவா கதைக்கு இந்த கதையில் வரும் அதே போன்றதொரு கதை தான் முன்னோடி.கில்காமேஷ் - என்கிடு இந்த இருவரின் சண்டை அதற்கு பிறகான நட்பு...என்கிடுவின் இறப்பு. கில்காமேஷ் சாகாவரம் பெற தில்முன் என்கின்ற இடத்தில் இருக்கும் உத்தன பிஷ்டரை சந்தித்தல். ஒரு பிரளயத்திலிருந்து தப்பிக்க தன்னை சார்ந்தவர்கள் அனைவரையும் ஒரு பெரிய கப்பலின் மூலமாக தில்முன் என்கின்ற இடத்திற்கு வந்து சேர்ந்ததை கூறி மேலும் சில விளக்கங்கள் மூலமாக நிலையாமை என்கின்ற தத்துவத்தை கில்காமேஷுக்கு புரிய வைப்பதன் மூலம் கதை முற்றுகிறது.

சரி இதற்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு ??? இதற்கும் தமிழர்களுக்கும் தான் தொடர்பு... பிரபாகரனின் இந்த ஆய்வு கட்டுரை இதற்கு முன்பு பலர் வரலாறு, மொழியியல் மூலம் ஆய்வு செய்தது தான்... நீங்களும் சிறிது ஆய்வு செய்யுங்கள் ... அடுத்த பதிவில் பார்க்கலாம்.

குமரிக்கண்டமா சுமேரியமா - 1

ஆதி தமிழர்கள் தமிழ் பரப்பிற்கு குடி பெயர்ந்து பரவியவர்கள் என்று பயணிக்கிறது பா. பிரபாகரன் எழுதிய குமரிக்கண்டமா சுமேரியமா புத்தகம்.
இதை சாதாரணமாக படிக்கும் தமிழர்களின் இரத்தம் கொதிக்கலாம், பிரபாகரனையும், இப்படி பதியும் என்னையும் வந்தேறி எனலாம். உங்கள் உணர்ச்சிகளை கொஞ்சம் அடக்கி வைத்து விட்டு ஆய்வு கட்டுரைக்கு இணையாக இருக்கும் இந்த புத்தகத்தை படியுங்கள், நிச்சயம் நீங்கள் அறிவு வயப்படுவீர்கள், ஆராயத் தொடங்குவீர்கள்.
...
இந்த புத்தகத்தை எழுதியவர் ஒரு மெக்கானிக்கல் எஞ்சீனியர், ஒரு அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த நபர் தமிழ் சார்ந்த ஆய்வில் இறங்கும் பொழுது அந்த ஆய்வு முயற்சி ஒரு குறுகிய இடத்தில் சுற்றிக் கொண்டிருக்காமல் விசாலமாகும் என்பதற்கு இப்புத்தகம் உதாரணம்.
8 பகுதிகள் அடங்கியிருக்கும் இப்புத்தகத்தில் முதல் பகுதி தமிழர்கள் யார் என்று இருக்கிறது. வரலாறு, அறிவியல்,புவியியல் ஆய்வு என்று விளக்குகிறது/விரிகிறது.

அவரின் வாதம் இது தான் தமிழர்களின் வரலாற்று சின்னங்களாக நாம் பெருமைப்படும் அனைத்தும் மாமல்லபுரம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் உட்பட. இவை அனைத்தும் நமக்கு கிடைப்பது பொது யுகம் என்று கருதப்படும் கி.பி-யில் தான். சுமேரியர்கள், எகிப்தியர்கள், சீனர்கள் உட்பட நமக்கு புலப்படும் அனைத்து பழங் குடியினர்கள் பொது யுகத்திற்கு முன்பே தமது வரலாற்று சின்னங்களை நிறுவியிருக்க, முன் தோன்றிய மூத்த தமிழ் குடியின் வரலாற்று சின்னம் என்று பொ.யு.முன்பாக 500 இல் கட்டப்பட்டது என்று ஒன்றும் இல்லை என்பது ஏமாற்றமாகவும், நெருடலாகவும் இருப்பதாக ஆசிரியர் கூறும் பொழுது நமக்கும் அதே உணர்வே மிஞ்சுகிறது.

இல்லை அவை அனைத்தும் குமரிக்கண்டம் அல்லது லெமூரியாவில் மூழ்கி இருக்கும் என்கின்ற எதிர்வாதத்தை புவியியல் கோட்பாடு ஏற்கனவே மறுத்து விட்டதையும் ஆதாரத்தோடு விளக்கியிருக்கிறார்.

அப்படி என்றால்... தமிழர்கள் யார்? எங்கிருந்து பரவியவர்கள்.... தேடுதல் தொடரும்!!! (2 ஆம் பகுதியை ஆரம்பித்திருக்கிறேன், என்ன தான் கூறுகிறார் என்று பார்ப்போம்)

மழை

மழையும் மழை சார்ந்த விடயங்களை ரசிக்கும் ரசனை மிகவும் சுவாரசியமானது.
நாம் மழையையும் ரசிப்பதில்லை, அதை சார்ந்த விடயங்களையும் ரசிப்பதில்லை... ஏன் என்று கேட்டால் , அதற்கெல்லாம் இப்பொழுது நேரமேது என்று மிகவும் சவுகரியமான ஒரு சவப் பெட்டிக்குள் அடைபட்டு கிடக்கவே நாம் பிரியப்படுகிறோம்!
ரசிப்பதால் மட்டுமே மனிதன் மதிக்கப்படுகிறான், மனிதனாகிறான்.
...
கொஞ்சம் பின்னோக்கி நானும் நீங்களும் படித்த பள்ளிக்கு செல்வோம். அந்தப் பள்ளி ஒரு அரசு பள்ளியாக இருக்க வேண்டும் , அப்பொழுது மட்டுமே அந்த ரசனை முழுமை அடையும்!
நம் பள்ளியறைக்கு கதவில்லாத வாயிலும், செங்கலின் இடைவெளியால் உருவான சன்னலும் இருக்கும். மழை அளவுக்கதிகமாக அடிக்கும் பட்சத்தில் சாரல், உள்ளே இருந்தும் நம் அனைவரையும் நனைக்கும். நாம் அனைவரும் புத்தகப் பையுடன் சன்னலுக்கு எதிர்புறம் ஒரு சேர குவிந்திருப்போம். நம் கவனங்கள் மழையும் மழை சார்ந்த விடயங்களில் பெரும் பகுதியும், மிச்ச சொச்ச கவனம் பாடத்தில் ஒன்றுபடாமல் அன்றைய பொழுது கழியும்.

மழை நம்மை நனைக்கும், நம்மை நம்முடன் இணைக்கும்.

மழை என்றாலே யாராவது ஒன்றிரண்டு ஆசிரியர்கள் வர மாட்டார்கள், அப்பொழுது இரு வகுப்புகளை ஒன்றிணைத்து பாடம் நடத்துவர், அந்த சமயங்களில் எல்லாம் நம் ராஜாங்கம் தான். ஒரு மாணவன் பேசினால், சத்தம் போட்டால் தண்டனை கொடுக்கலாம், ஒட்டு மொத்தமாக அனைவரும் சத்தம் போட்டால் என்ன செய்ய முடியும்? வெளியிலும் அனுப்ப முடியாது, அப்படி அனுப்பினால்... அந்த மழையில் அதை விட சிறந்த தண்டனையை எவரும் நமக்கு கொடுக்கவும் முடியாது!
மணி அடிக்கும் திசையை நோக்கி காத்துக் கொண்டிருப்போம்... நிச்சயமாக பள்ளி முடியும் முன்னரே மணி அடிப்பார்கள்(long bell)... மழையையும் மழை சார்ந்த விடயங்களையும் ரசித்துக் கொண்டே வீட்டிற்கு சீக்கிரம் சென்று விடலாம், வீட்டில் அம்மா தேனீரும் , வடை ,பஜ்ஜி செய்து வைத்திருக்கலாம் என்கின்ற ஆசையுடன் பயணப்படுவோம், நாம் விளையாட காகிதக் கப்பலும், ரயில் பூச்சியும் காத்திருக்கும் என்கின்ற ஆவலுடனும்...

சரி... மறுபடியும் சவப் பெட்டிக்குள் போய் அடைபடுவோம்!?

முதிர்ச்சி

இரவு 11 30 மணி.
இடம் Electronic City Bus Stop.

பெங்களூரிலிருந்து சென்னை செல்லும் பேருந்துக்காக காத்திருந்தேன்.
ஒரு பேருந்து நிற்க அதன் அருகில் சிறிய லாரி செல்ல அதற்கு நடுவே இரு சக்கர வாகனத்தில் இருவர் பறக்க, நொடிப் பொழுதில் அந்த லாரி சக்கரத்தில் இரு சக்கர வாகனம் சிக்கிக் கொண்டு நல்ல வேளையாக சக்கரத்திற்கு வெளியே விழுந்தார்கள்.
...
அங்கிருந்த கூட்டம் என்ன நடந்தது என்றே தெரியாமல் அந்த லாரி ஓட்டுனரை அடிக்க முற்படவில்லை, இன்னும் சொல்லப் போனால் அந்த லாரி ஓட்டுனர் அந்த இடத்தில் நிற்காமல் பறக்கவில்லை. தவறை உணர்ந்து கொள்ளாமல் அந்த இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களும் அந்த லாரி ஓட்டுனரை தகாத வார்த்தைகளில் திட்டவோ / அடிக்கவோ செல்லவில்லை. முக்கியமாக அந்த இடத்தில் இருந்த பெரும்பாலோர் அந்த விபத்தை ஏதோ திரைப்பட காட்சியை போல பார்க்காமல் ஓடி சென்று விபத்தில் சிக்கியவர்களை நலம் விசாரித்து ஆசுவாசப்படுத்த முயன்றனர்.லாரி ஓட்டுனரும் இறங்கி வந்து அந்த இருவரிடம் நலம் விசாரித்து விட்டு சென்றார்.

# நமக்கான முதிர்ச்சிகளை / மதிப்புகளை நமக்குள் நாமே தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்!

Tuesday, July 7, 2015

சர்ப்பம்


எங்களுக்கு ஒரே கடவுள் இயேசு தான் மேலும் யோகா செய்வது ஹிந்து முனி போல் இருக்கிறது இந்த காரணங்களெல்லாம் போய் இப்பொழுது பதஞ்சலியை ஆதி சேஷன் என்பர் அதாவது பாதி மனிதன் பாதி பாம்பு..அந்த பாம்பு தான் வேதாகமத்தில் சொல்லப்படும் சர்ப்பம்.. ஆதாம் ஏவாள் மனத்தை கெடுத்து நம்மை வீழ்த்தியது அதனால் யோகா செய்யவே கூடாது என்கின்றனர் சில கிறித்துவ நண்பர்கள்.

தமிழ் சித்தர்கள் உலகுக்களித்த யோகா எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல, அப்படி மோடிக் கூட்டம் பரப்புவது கண்டனத்துக்குரியது என்று பல முறை நாம் சொல்லியாகிவிட்டது, சரி இப்பொழுது இந்த பாம்பு கதையை பார்க்கலாம்!

ஆதாம் ஏவாள் முதல் மனிதர்கள், கடவுள் வேதாகமப்படி உலகை படைத்தது உண்மை என நீங்கள் கொண்டால், எங்களுக்கு அந்த சர்ப்பம் முதல் உண்மை விளம்பியாக, பகுத்தறிவுவாதியாக தெரிகிறது. ஹிந்து மதத்தில் அப்படிப்பட்ட நல்லவர்களை எப்படி அசுரன், அர்க்கன் என்பார்களோ அதே போல் கிறித்துவ மதத்தில் அவைகள் /அவர்கள் சாத்தானாக்கப்பட்டது.

ஆதியாகமத்தில் நன்மை தீமை அறியும் கனியை உண்டாக்கி அதை ஆதாம் ஏவாளுக்கு புசிக்க வேண்டாம் என அறிவுறுத்தி, அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என கட்டளையிட்டு பொய்யுரை பரப்பும் நோக்கம் என்ன??? (சரி எல்லாம் அறிந்த கடவுளுக்கு பின்னாளில் ஆதாம் ஏவாள் அந்த கனியை புசிப்பார்கள் என்று தெரியாதா என்ன... என்பது அடுத்த விவாதப் பொருள் அதற்குள் இப்பொழுது செல்ல வேண்டாம்) நோக்கம் என்னவெனில், இந்த மனிதர்கள் நன்மை தீமை அறியாமல் கண்கள் திறக்கப்படாமல் தனக்கு கீழே இருக்க வேண்டும் என்பதே அவரின் எண்ணம். இந்த குணங்கள் கடவுளின் குணமாக எப்படி இருக்க முடியும்!?

இப்பொழுது அந்த சர்ப்பம் ஆதாம் ஏவாளுக்கு உண்மையை எடுத்துக் கூறி நீங்கள் சாக மாட்டீர்கள், நன்மை தீமை அறிந்து தேவனை போல் இருப்பீர்கள் என்றது. அந்த கனியை புசித்தன் மூலமே அவர்கள் கண்கள் திறக்கப்பட்டது, அவர்கள் அறிவு பெற்றார்கள், நன்மை தீமை அறிந்தார்கள்... ஏன் தாங்கள் நிர்வாணமாக இருப்பதும் அவர்களால் அறியப்பட்டதற்கு காரணமும் அதுவே!
(இந்த சர்ப்பக் கதையை வைத்துக் கொண்டு அதை ஆதி சேஷனோடு தொடர்பு படுத்தி யோகாவை விமர்சிப்பது தேவையற்றது.)

இப்பொழுது சொல்லுங்கள் யார் உண்மை விளம்பி, யார் பகுத்தறிவு வாதி... நம் அறிவுக்கு , நம் கண்கள் திறக்கப்பட்டதற்கு காரணம் யார் ? நன்மை தீமை அறிவதற்கு காரணம் யார் ???

அந்த சாத்தானே, அந்த அசுரனே, அந்த அரக்கனே தற்காலத்தில் பகுத்தறிவு பேசும் நாத்திகர்களாயிருக்கக் கூடும்!!!

# Dedicated to Ingersoll, Ambedkar & Periyar!