Sunday, December 8, 2013

புரிதல்களுக்காக...

தம்மை தமிழர்களாக முழுமையாக நினைத்து சாதியிலிருந்து தங்களை தனிமைப்படுத்த விரும்பும் ஆனால் அதே சமயம் மதம் மற்றும் கடவுள் நம்பிக்கை கொண்டிருப்பவர்களின் 
புரிதல்களுக்காக...

1.ஏன் நாத்திகர்கள் ஹிந்து மதத்தை மட்டும் எதிர்க்கிறார்கள் ? - 

பெரியாரிய (அண்ணலும் அடக்கம்) நாத்திக வாதம் சாதியை அடிப்படையாகக் கொண்டது, மேலை நாடுகளைப் போன்று பொருள் - கருத்து முதல் வாத எதிர்ப்பு அல்ல, அதனால் ஹிந்து (அதாவது சமஸ்கிருத, வேத, புராண, இதிகாசங்களை கொண்ட ஆரிய அல்லது பார்ப்பனிய அல்லது வர்ணாசிரம வாழ்க்கை முறை) மதத்தை விமர்சிப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது...

2.பிற மதங்களில் சாதிப்பிரிவுகள் இல்லையா என்ன??? - 

இருக்கிறது... கிறித்துவத்தில் கிறித்துவ வேளாளர், கிறித்துவ வன்னியர் என்றும் இருக்கிறது.... ஆனால் இதற்கு மூலம் ஹிந்து மதம் தானே, மதம் மாறியவர்கள் சாதியை விட்டு மாறாததால் ஏற்பட்டவை அவை, மற்றபடி கத்தோலிக்க - பிராட்டஸ்டண்ட், ஷியா - சன்னி என்பவை வழிப்பாட்டின் அடிப்படையில் ஏற்பட்ட நேர்க்கோட்டு பிரிவுகள், உயர்வு - தாழ்வின் அடிப்படையில் தீண்டாமைக்கு வழிகோலிய செங்குத்து பேதங்கள் அல்ல.

3.வர்ணாசிரமம் தான் சாதிப் பிரிவுகளுக்கு மூலம் என்று எப்படி கூற முடியும்? மேலும் மனுதர்மம் என்பது ஹிந்து தர்மத்துக்குள் அடங்கும் என்றும் கூற முடியாதெ... - 
வர்ணாசிரமம் தான் ஆரம்ப கட்ட சாதிப் பிரிவுகளுக்கு மூலம், அதற்கு பிறகு சாதி கிளைகளாக பரவி விரவியதற்கு அந்தந்த சாதிகளின் பரிணாம வளர்ச்சி காரணமாக இருக்கலாம்.

வர்ணாசிரமம் எப்படி சாதிப் பிரிவுகளுக்கு மூலம்???
1.மருத்துவன் என்பது ஒரு சாதியாக இப்பொழுது இணைக்கப்பட்டிருக்கிறது, வர்ணாசிரம பிரிவுக்கும் தொழில் முறை பிரிவுகள் காரணம் என்பதை இங்கு கருத்திக் கொள்க.
2.வர்ணாசிரம பிரிவுகளில் முதலாவதாக சொல்லப்படும் பிராமண என்கின்ற வர்ணம் இன்றும் வழக்கில் உள்ளதையும், அதற்கு கீழ் அய்யர், அய்யங்கார் என்கின்ற சாதிகள் பரிணமித்ததையும் கருத்தில் கொள்க. ஷத்திரிய குல வன்னியர் என்று வர்ண வழி சாதி உருவாக்கமும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
மனு ஹிந்து தரமத்துள் அடங்காது என்பவர்கள், அதை கொளுத்தி போடலாமே... மனுவை பேசும் ஹிந்து மதவாதிகளை விமர்சிக்க கிளம்பலாமே...


என்ன தான் மனுதர்மம் சாதி பிரிவினையையும் அதற்கான பணிகளையும், தண்டனைகளையும் கூறினாலும்...' நால் வர்ணத்தையும் நானே படைத்தேன்' என்ற கீத வார்த்தையையும், ரிக் வேதத்தில் புருஷ சூக்தம் 'ஆதி புருஷனின்/ கடவுளின் முகம் பிராமணனாக ஆயிற்று, கைகள் க்ஷத்திரியனாக ஆயின, தொடைகள் வைசியனாக ஆயின அவரது பாதங்களிலிருந்து சூத்திரன் தோன்றினான்.' என்று வர்ண பாகுபாட்டை கூறுவதையும் கருத்தில் கொள்க.