Friday, March 20, 2015

நில நடுக்கமும், இறை நடுக்கமும்!!!

கிட்டத்தட்ட 11 வது முறையாக( நேற்று மதியத்திலிருந்து) நில நடுக்கத்தை இன்று காலை வரை வரை உணர்ந்துள்ளோம். நில நடுக்கம் சார்ந்த சில பதிவுகளில் கடவுளை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று சிலர் கூறுகிறார்கள்.

எனக்கு இந்த நிமிடம் வரை... கடவுளை இதற்காக பிரார்த்திக்க வேண்டும் என்று தோன்றவில்லை, இந்த எண்ணம் சில ஆத்திகர்களுக்கு கூட தோன்றியிருக்காது இதையெல்லாம் எவராலும் தடுக்க முடியாது என்ற நிதர்சனமான உண்மை அவர்களுக்கும் தெரிந்திருக்கும். ஒரு வேளை அந்த நடுக்கத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது என்னையும், என் குடும்பத்தையும் எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது, அதற்கான வழிகளை என் மகனுக்கு எப்படி புரிய வைப்பது என்பது மட்டுமே என் கண் முன்பு இருக்கிறது.

எப்படி பயம் சூழ்ந்த சூழ் நிலையிலும் உங்களால் கடவுளின் எண்ணம் வராமல் இருக்க 
முடிகிறது என்று சிலர் கேட்கிறார்கள். பய சூழ் நிலையில் மட்டும் தான் ஒருவருக்கு கடவுள் எண்ணம் வர வேண்டுமா??? அவர் அந்த சூழ் நிலையில் உனக்கு உதவினால் மட்டுமே நீ அவர் இருத்தலை உணர்வாயா ??? நம்புவாயா??? ஒரு வேளை உனக்கு உதவ வில்லையென்றால் அவரை நம்ப மாட்டாயா??? (இந்த கேள்விகள் எல்லாம் எந்த காலத்திலும் தொடர்பவை!)

சரி இது ஒரு புறம் இருக்கட்டும்....ஒரு வேளை பெரிய நடுக்கம் வந்தால் என்ன செய்வது என்று என்னுடன் Wallet மற்றும் Car Key-ஐ வைத்துக் கொண்டு படுத்திருந்தேன். என் மனைவியோ Passport மற்றும் மகனுக்கு தேவையான சில உணவுப் பொருட்களை அருகில் வைத்துக் கொண்டாள். என் மகனோ புதிதாக வாங்கிய சில விளையாட்டுப் பொருட்களை காண்பித்து இதை என்னுடன் கொண்டு வரட்டுமா என்று அப்பாவியாக கேட்டுக் கொண்டிருந்தான்!!!

No comments: