Friday, March 20, 2015

Bangalore Days!!!

காலை 6 30 - 7 மணி இருக்கும். சென்னையிலிருந்து பெங்களூர் வந்து இறங்கினேன்.தங்கும் விடுதிக்கு வந்து அதற்கு பிறகு அலுவலகம் செல்ல வேண்டும் என்கின்ற அவசரத்தில் ஒரு பேருந்தில் ஏறினேன். 20 ரூ கொடுத்து பயணச்சீட்டு பெற்றுக் கொண்டு மீதி சில்லறையை நடத்துனர் தருவார் என்று எதிர்பார்த்திருந்தேன். 10 ரூ அல்லது அதற்கு குறைவாகத்தான் அந்த பயணத் தொகை இருந்திருக்க வேண்டும், நான் என்னவோ அவருக்கு நான் கொடுத்த கடன் தொகையை திருப்பி கேட்பது போல நடத்துனர் என்னை கண்டு கொள்ளவேயில்லை. அலைச்சலில் / அவசரத்தில் நானும் கேட்காமல் இறங்கி விட்டேன். இறங்கியதும் என் மனத்திற்குள் தோன்றியது இது தான்..."இந்த கன்னடக் காரங்களே இப்படி தான் போல"

அடுத்த சில நாட்களுக்குப் பிறகு...மற்றொரு பேருந்தில் 5ரூ பயணச்சீட்டிற்கு 10ரூ கொடுத்து விட்டு மறுபடியும் ஏமாறுவதற்கு காத்திருந்தேன், ஆனால் இந்த முறை மீதி சில்லறையை கேட்டு விட வேண்டும் என்று நினைத்திருந்தேன். சற்றும் எதிர்பாராத விதமாக அவரே வந்து 5ரூ சில்லறையை கொடுத்து விட்டு சென்றார்.

இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு இள நீர் கடையில் தண்ணியா கொடுங்க என்று ஒரு இள நீரை வாங்கி குடித்தேன், குடிக்கும் பொழுது தண்ணீர் மிகவும் குறைவாக இருந்ததை உணர முடிந்தது... சரி என்று 25ரூ பணத்தை கொடுப்பதற்கு முன்பே அவர் மற்றொரு இள நீரை வெட்டி கொடுத்தார். எதற்காக.. என்று கேட்கும் முன்னரே அதுல தண்ணி கம்மியா இருந்துச்சு என்றார் கன்னட தமிழில்...எனக்கும் தெரிஞ்சது சொல்லலாம்னு நெனெச்சேன் என்றேன் தமிழ் கன்னடத்தில்...புன்னகை பரிமாற்றத்திற்கு நடுவில் 25ரூ பணத்தை கொடுத்து விட்டு வந்தேன்.

இருவரும் கன்னடர்கள் தான். இந்த சாதிக்காரன் இப்படித்தான் இருப்பான், இந்த மதக்காரன் இப்படித்தான் இருப்பான் என்பது போலத்தானே இதுவும் ஒரு மூட நம்பிக்கை அல்லது குருட்டு நம்பிக்கை. மனிதம் சாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு, இன/மொழிக்கு அப்பாற்பட்டு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது. உணர்வதற்கு தான் நம்மிடம் நேரமும் இல்லை மனமும் இல்லை!!!

No comments: