Friday, March 5, 2010

மதமாற்றம் சாதியை ஒழிக்குமா?

அம்பேத்கார் ஒரு காலத்தில் 1 லட்சம் இந்துக்களை இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு தழுவச் செய்தார்,அதற்கு அவர் வைத்த காரணம் இந்து மதத்தில் உள்ள தீண்டாமை,மூட நம்பிக்கை மற்றும் ஏற்றத்தாழ்வுகள்.அந்த சமயத்தில் பெரியாரிடம் சில நிருபர்கள் நீங்களும் ஏன் இதே வழியை பின்பற்றக் கூடாது என்று கேட்டனர்,அதற்கு அவர் அளித்த பதில்.....மதம் என்பதே மனிதர்களின் மூளையை மழுங்கடிப்பது தான்,ஒரு இடத்தில் அசிங்கம் இருக்கிறது அதை அப்புறப் படுத்தி சுத்தப் படுத்த வேண்டும் என்கிறேன், நீங்கள் அந்த அசுத்தம் இருந்த இடத்தில் வேறு எதை வைக்க வேண்டும் என்கிறீர்கள். நான் இருக்கும் மதத்தில் குறைபாடுகள் இருந்தால் அதில் இருந்தெ அதை களைய விரும்புகிறேன்.

மதமாற்றம்... மன மாற்றம் என்கின்ற அடிப்படையில் சுயமாக, தனிச்சையாக வர வேண்டும். காசு பணத்திற்காகவோ, பிரியாணி பொட்டலத்திற்காகவோ இல்லை பிறரின் இயலாமையை, அறியாமையை பயன்படுத்தியோ செய்யப்படும் மத மாற்றம் நிரந்தரமாக இருக்காது. 

ஒரு சமூக மக்கள் தன் சமூக மக்களையே விதி, வர்ணம், கர்மா, சாதி அடிப்படையில் ஒதுக்கும் பொழுது அவர்களை சக மனிதர்களாக பார்க்க தவறும் பொழுது வந்தேறி மதங்களுக்கு மத மாற்றம் என்பது எளிதாக அமைந்து விடுகிறது, அதே சமயம் புதிய மதத்திலும் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றால் தாய் மதம் திரும்பும் நிகழ்வும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

ஆனால் இக்கால கட்டத்தில் மதமாற்றம் என்பது சுய நலத்திற்காக மட்டுமே பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது,மேலும் கிறிஸ்துவ நாடார்,கிறிஸ்துவ வேளாளர் என்று தங்களை பறை சாற்றிக் கொள்ளும்பொழுது(இட ஒதுக்கீட்டிற்கு அப்பாற்பட்டு திருமணத்திலும் வேறு சில சடங்குகளிலும்)இவைகள் எல்லாம் சாதியை ஒழிக்க நிகழ்த்தப்படுவதாக தெரியவில்லை.அதனால் தான் பெரியாரும் அப்படி நீங்கள் தானாகவே முன்வந்து மதமாறும் முயற்சியில் இறங்கும் பொழுது அதற்கு கிறிஸ்துவ மதத்தை விட இஸ்லாம் மதம்(சாதியின் அடிப்படையில் மட்டும் பார்க்கும் பொழுது) மற்றும் புத்த மதமும் சற்று பொருத்தமாக இருக்கும் என்றார்.மொத்தத்தில் இன்றைய காலகட்டத்தில் மதமாற்றத்தின் மூலம் சாதியை ஒழிக்க சிறிது வாய்ப்பே உள்ளது எனலாம்.

ஆனால் மதம் என்பதே ஒரு அபின் போன்றது தான்.

மொத்தத்தில் அவரவர், அவரவர் மதக் குறைபாடுகளை அவரவர் பங்கிற்கு களைவது தான் சிறந்தது!!!



No comments: