Wednesday, June 3, 2015

நேபாளம் - பாவ மன்னிப்பு !!!

இதை எழுத வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன் ஆனால் எழுதாமல் இருக்க முடியவில்லை.

நம்பிக்கையோ நம்பிக்கை இன்மையோ மனித நேயத்தை நோக்கித் தான் நகர வேண்டும் அப்படி நகர வில்லையென்றால் அந்த நம்பிக்கையாலோ நம்பிக்கை இன்மையாலோ என்ன பயன்?

அதாவது பெரியாரின் , இங்கர்சாலின் நம்பிக்கை இன்மை, வள்ளலாரின், நாராயண குருவின், தெரசாவின் நம்பிக்கை கலவரத்தை நோக்கியோ, அழிவை நோக்கியோ பயணிக்க சொல்லவில்லை மாறாக வளர்ச்சியை நோக்கி, மாற்றத்தை நோக்கி பயணிக்க கற்றுக் கொடுத்தது.

அப்படி மனித நேயத்தை நோக்கி நகராமல் சிலர் தடுக்கும் பொழுது , அந்த பாதையை சிலர் மாற்றும் பொழுது அதில் இருக்கும் உண்மை இன்மையை விளக்கும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்கின்ற அடிப்படையில் தான் இதை எழுதுகிறேன்.

நேபாளம்...அழிவின் கோர முகத்தை, அதன் உச்ச கட்டத்தை பார்த்த நேரம்.பிஞ்சு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த வயோதிகர்கள் வரை ஒன்றும் இல்லாமல் உருக்குலைந்த நேரம், இடிபாடுகளில் தவிடு பொடியான நேரம், பூமிப் பந்தின் விளையாட்டில் புதையுண்ட நேரம் மத நம்பிக்கையில் திளைத்த ஒருவர் இப்படி பதிவிடுகிறார்... அங்கு போதனைக்கு சென்ற ஒரு போதகரை எரித்துக் கொன்றார்கள் அதன் பலன் இது என்று.

எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் மனைவியிடத்தில் தனிப்பட்ட முறையில் என் கருத்தை பற்றி விவாதித்தாலும் அவர்களுக்காக எப்பொழுதாவது தேவாலயத்திற்கு செல்வது உண்டு, அந்த நேரத்தில் பிரசங்கத்தை மட்டும் ஆவலாக கவனிப்பேன் ஏதாவது வித்தியாசமாக மக்களுக்கு இந்த பாதிரிமார்கள் கூறுகிறார்களா என்று. அப்படி ஒரு சமயத்தில் உறவினர் உறவில் இருக்கும் ஒரு பாதிரியார் இப்படி கூறினார். விபச்சாரமும், விக்ரக ஆராதனையும் தான் நேபாள அழிவிற்கு காரணம் என்று, அதாவது கடவுள் தான் அதற்கு காரணம் என்கின்ற அடிப்படையில்!(குறைந்தது அங்கு ஒரு 200 மக்களாவது இருந்திருப்பார்கள் அவர்களின் மத்தியில் அந்த பரப்புரையானது அரங்கேற்றப்பட்டது.)கடவுளின் அனைத்து செயலுக்கும் காரணம் இருக்குமாம், அதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டுமாம்

எனக்கு பல விடயங்கள் இங்கு புரியவில்லை... அந்த போதகரை எரித்துக் கொன்ற 10 - 15 பேரை அடையாளம் கண்டுபிடித்து உங்களின் கடவுளால் தண்டிக்க முடியாதா??? குழந்தைகள் செய்த விபச்சாரம் என்ன?? அவரை ஆராதிக்காவிட்டால் கொன்று விடுவாரா??? அதுவும் ஒட்டு மொத்தமாக அழித்து விடுவாரா??? உலகில் உள்ள அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் அங்கு இருப்பவர்கள் யார்?? மதத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரித்து கலவரம் உண்டாக்குவது கடவுளா இல்லை கடவுளின் பெயரால் நீங்களா???

அடுத்து எல்லா உயிர்களையும் தன்னியிர் போல் நேசி என்று கூறியதாக நீங்கள் நம்பும் கடவுள், எதிரியையும் நேசி என்று கூறியதாக நீங்கள் நம்பும் கடவுள், ஒரு கன்னத்தில் அறைந்தால் மற்றொரு கன்னத்தையும் காட்டு என்று கூறியதாக நீங்கள் நம்பும் கடவுள் இப்படி செய்வாரா என்ன!?
சரி கடற்கறை ஓரத்தில் கையை பின்புறமாக கட்டி சுட்டுக் கொன்றார்களே, அவர்களின் செயலுக்கு அவர்களின் கடவுளை இழுப்பார்கள் இரட்டை கோபுரம் தகர்க்கப் பட்டதுக்கு அவர்களின் கடவுளை காரணம் காட்டியதை போல. இந்த மாதிரியான நம்பிக்கைகள் மனித நேயத்தை சிதைக்கவே செய்கின்றன.

குறிப்பு :- உங்கள் கடவுளை நான் மனிதனாக மதிக்கும் அளவிற்கு கூட நீங்கள் அவரை கடவுளாக புரிந்து கொள்ளவில்லை!

என் எழுத்துக்கள் உங்களை காயப்படுத்தினால் எனக்கு கவலை இல்லை ஏனென்றால் உங்களின் இது போன்ற நம்பிக்கைகள் உங்கள் மதத்தார் பலரையே காயப்படுத்தியிருக்கிறது. உங்களின் நம்பிக்கை படி நேபாளத்தில் இறந்தோரின் ஆன்மாவை காயப்படுத்தியிருக்கும், உங்களின் நம்பிக்கை படி உங்களின் கடவுளையும் வேதனை படுத்தியிருக்கும்.

நாளை திருப்பலியில் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்!

No comments: