Wednesday, February 13, 2013

இன்றைய அனுபவம் (26.1.2013) - பேசும் கலை

இன்றைய அனுபவம் என்னை 22 வருடம் பின்னோக்கி இழுத்துச் சென்றது...

அடுத்தது நான் என்று நினைக்கும் பொழுது பயம் என்னை கவ்விக் கொண்டது,தொண்டை வறண்டிருந்தது,எத்தனை முறை எச்சில் விழுங்கியும் பயனில்லை,இதயத் துடிப்பு தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தது.

என் பெயர். ஆமாம் என்னைத் தான் கூப்பிட்டார்கள். எழுந்து நடக்கும் பொழுது யாரோ முதுகில் ஏறி அமர்ந்தது போன்று ஒரு சுமை, முதுகிலிருந்து அப்படியே அந்த பாரம் மனத்துள் இறங்கியது.போய் நின்றது தான் தாமதம், அப்படியே கட கடவென நான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டு வந்து அமர்ந்தேன்.மூன்றாம் வகுப்பில் நான் பேசிய முதல் பேச்சுப்போட்டி அது. பேசிய தலைப்பு லால் பகதூர் சாஸ்திரி.அதை பேச்சு என்பதை விட என் அப்பா எழுதிக் கொடுத்ததை அப்படியே ஒப்புவித்தேன் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்!


பேச்சுப் போட்டியில் என்னுடைய ஒப்புவித்தல் கலை இப்படித்தான் பல வருடங்களுக்கு தொடர்ந்தது, பரிசுகளும் கிடைத்தது, ஆனால் எனக்கு அதில் முழு திருப்தி கிடைக்கவில்லை. அதற்கான காரணங்கள் இரண்டு... ஒன்று அப்பா அல்லது வேறு சிலரிடமிருந்து குறிப்பு எடுத்து நாம் சொந்தமாக பேசலாம் ஆனால் நானோ அப்பா எழுதிக் கொடுத்ததை அப்படியே பேசிக்கொண்டிருந்தேன், இன்னொன்று அவர் எழுதிக் கொடுத்ததை அப்படியே மனனம் செய்து ஒப்புவித்துக் கொண்டிருந்தேன்.

ஒப்புவித்தல் ஒரு விதத்தில் பயனையும் தரும் பல சந்தர்ப்பத்தில் காலையும் வாறும்! நடுவில் ஒரு வார்த்தை மறந்துவிட்டால் கூட அதோ கதி தான், நீங்கள் அந்த மேடையில் அடுத்த வார்த்தை ஆயுதம் கிடைக்கா நிராயுதபாணி தான்.....அடுத்த வார்த்தைக்கு நம் மூளையிடம் யாசகம் கேட்கும் வறியவனாகும் நிலை நமக்குஏற்படும்.படபடப்பும்,பதைபதைப்பும் சேர்ந்து ஆளை ஒரு கை பார்த்துவிடும்! மீன் குழம்பு சாப்பிடும்பொழுது மீன் முள் தொண்டையில் சிக்கிய கதை தான்,முள் உள்ளேயும் போகாது, வெளியேயும் வராது. அந்த முள்ளை எடுக்காவிட்டால் நமக்கு நிம்மதியே இருக்காது, இது போல் வார்த்தை சிக்கிக் கொண்டால் அவ்வளவு தான், அடுத்த வார்த்தையும் கிடைக்காது, இதுவரை பேசியதும் நினைவுக்கு வராது. சிக்கிக் கொண்ட வார்த்தையையே மறுபடியும் மறுபடியும் பேசிக்கொண்டு திணறிக்கொண்டு இருப்போம். மிச்சமாயிருக்கும் நிமிடங்களை அமைதிக்கும் ,அடுத்தவர் சிரிப்புக்கும் காணிக்கையாக்கி மேடையிலிருந்து இறங்க வேண்டியது தான். பல சமயங்களில் இது போன்ற வார்த்தை முள்களால் திணறியிருக்கிறேன்.

ஒன்பதாம் வகுப்பிலிருந்து என நினைக்கிறேன்,அப்பாவின் எழுத்தை மனனம் செய்யாமல் குறிப்புகளை மட்டும் நினைவில் கொண்டு பேச முயற்சி செய்திருக்கிறேன்,

மேல் நிலை படிக்கும்பொழுது என் பள்ளியில் 50 ஆம் ஆண்டு சுதந்திர விழாவில் பேசுவதற்கான குறிப்பை சுபவீயிடமிருந்து பெற்ற பொழுது தான் பேசும் கலையின் அடுத்த பக்கத்தை அவரிடம் கண்டேன்.

=> குறிப்பெடுத்தல்.

=> தயார்படுத்திக் கொள்ளல்.

=> யதார்த்தமான பேச்சு.

=> மேற்கோள் மற்றும் ஆதாரத் தகவல்கள் இறுதியாக

=> பார்வையாளர்களை தன் பக்கம் இழுக்கும் நம் பேச்சின் முதல் இரண்டு நிமிடங்கள்.

இன்றைக்கும் கூட சுபவீ மேற்கூறிய விடயங்களை அவரது பேச்சில் கடைபிடிப்பதை நாம் காணலாம்.



கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகு ஒரு சிறு கூட்டத்தின் முன்பு மறுபடியும் பேசும் வாய்ப்பை பெற்றேன். என்ன தான் நாம் எழுதினாலும் ,தனி நபர்க்கு முன்பு பேசினாலும் கூட்டத்தின் முன்பு பேசுவது என்பது நிச்சயமாக ஒரு கலை தான்.

தாலஸ் தமிழ் கத்தோலிக்க சங்கத்தில் CHILD ஆதரவற்றோர் இல்ல கட்டுமானப் பணிக்கான நிதியை திரட்டுவதற்காக 15 நிமிடம் பேசும் வாய்ப்பை பெற்றேன். என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை முன் கூட்டியே யோசித்து வைத்திருந்தேன். பல வருடங்கள் கழித்து பேசுவதால் கொஞ்சம் பதட்டம் இருக்கத்தான் செய்தது. பேசுவதற்கு முன்பு என் மனத்தில் இருந்தது இது தான்...

* பேச்சின் ஆரம்பம் பார்வையாளர்களின் கவனத்தை திருப்ப வேண்டும்.

* CHILD ஆதரவற்றோர் இல்லம் பற்றி முழுமையாக சொல்ல வேண்டும்.

* பேச்சு யதார்த்தமாக இருக்க வேண்டும், நடுவில் தடை படக் கூடாது.

* பேச்சு முழுமையாக தமிழில் இருக்க வேண்டும், பிற மொழி கலப்பு இருக்கக் கூடாது. (வேண்டுமென்றால் மேஜர் சுந்தரராஜன் பாணியில் மிகவும் பரிச்சயமில்லாத தமிழ் வார்த்தைகளுக்கு உடனடியாக ஆங்கில மொழி பெயர்ப்பு கொடுக்கலாம் என நினைத்திருந்தேன்). நடைமுறை வாழ்வில் சரளமாக தமிழில் பேசுவதற்கு இது ஒரு முன்னோட்டமாக/வெள்ளோட்டமாக இருக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.

* முக்கியமாக என் பேச்சின் வெற்றி அவர்களின் கை தட்டலில் நான் காண்பதை விட, அவர்கள் மனமுவந்து கொடுக்கும் நன் கொடையில் நான் உணர வேண்டும்.

என் பேச்சை இப்படித்தான் ஆரம்பித்தேன்...

 -> "நான் இங்க புதுசா ஒண்ணும் சொல்ல வரலெ...

 எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய் - இயேசு நாதர்

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் - வடலூர் வள்ளலார்.

ஆண்டவரை உச்சரிக்கின்ற உதடுகளை விட அடுத்தவர்க்கு உதவுகின்ற கரங்கள் என்றும் மேலானவை - அன்னை தெரசா.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் - அறிஞர் அண்ணா

இவங்க சொன்னத, செய்ய சொன்னத தான் சொல்ல வந்திறுக்கேன், நமக்கு அத்தியாவசியத் தேவையானது உணவு,உடை,உறைவிடம்..இந்த அத்தியாவசியத் தேவைக்கே மத்தவங்க கிட்ட கையேந்துற நிலையில இருக்குற, நாம, நம்ம குடும்பம்னு போய்ட்டு இருக்குற நம்ம சராசரி வாழ்க்கைலெ இருந்து நம்ம கண்ணுக்கு புலப்படாம விலகி இருக்குற ஒரு 17 பேர பத்தி சொல்ல போறேன்...." <->
இதுவரை நாங்கள் அவர்களிடமிருந்து சேர்த்திருக்கும் தொகை 600$ க்கு மேல்... பேசுவது நிச்சயமாக ஒரு கலை தான் அப்பேச்சு நமக்கும்,பிறருக்கும் பயன்படும் பட்சத்தில்... அக்கலையை இன்னமும் கற்றுக் கொண்டிருக்கிறேன் நான் பிறரிடம் பேசும்பொழுதும், பிறர் என்னிடம் பேசும்பொழுதும்.....

No comments: