Saturday, March 17, 2012

தமிழ் ஹிந்து

சமீபகாலமாக இப்படி ஒரு இணையதளம் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது.....அதன் பெயர் என்னவோ தமிழ் இந்து என்பது தான் , நான் அதை கொஞ்சம் திருத்தி சம்ஸ்கிருத வார்த்தை பயன்படுத்தி ஹிந்து என்று அழைப்பதன் காரணம்,இந்து அல்லது ஹிந்து என்பதன் அடிப்படையே சமஸ்கிருதம் தான், சமஸ்கிருதத்தோடு வேண்டுமானால் அதனை இணைத்துக்கொள்ளலாம் ,தமிழோடு இணைப்பது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் வேலையே!!!

தமிழையும் ஹிந்துவையும் இணைப்பதற்கு அவர்கள் சொல்லும் காரணம்...ஹிந்த் என்கின்ற நிலப்பரப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் அடக்கமாம்,ஆகையால் தமிழ் பாரம்பரியமும் அதனுள் அடக்கமாம்.,அதனால் தமிழர்களும் இந்துக்களாம் என்ன பேத்தலாக இருக்கிறது!? ஒரு காலனியில் ஆத்திகர்கள் 15 பேர் 15 வீட்டில் இருப்பதாக கொள்வோம்,ஒரு நாத்திகன் ஒரு வீட்டில் இருக்கிறான். அந்த காலனிக்கென்ற என்ன தான் ஒரு சட்ட திட்டங்கள் இருந்தாலும்,அந்த காலனியை நிர்வகிப்பரும் ஆத்திகராக இருந்தாலும்,அந்த காலனியின் பெயர் ஸ்ரீ ராம விலாஸாக இருந்தாலுமே கூட என்னுடைய அடையாளம் நாத்திகன் என்பதே... நான் எப்படி அந்த குட்டைக்குள்...அதாவது அந்த குடைக்குள் வர முடியும்!!!

சங்க கால இலக்கியங்களிலும் இராமாயண,மகாபாரத குறிப்புகள் இருக்கின்றன. என்ன தான் புராண இலக்கிய காலத்திற்கு பிறகு தழுவல்கள்,மொழிபெயர்ப்புகள் அதிக அளவில் இருந்தாலும் சங்க காலத்திலும் ஆங்காங்கே குறிப்புகள் இருப்பதை மறுக்க முடியாது,மறைப்பதற்கும் இல்லை.(சங்கம் என்கின்ற சொல்லே வடமொழியின் ஆதிக்கம் தான்) உதாரணமாக கி.பி.ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த சின்னமனூர் செப்பேட்டில் பின்வருமாறு இருக்கிறது அது ஒரு பாண்டிய செப்பேடு.... மாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் (பாண்டியர் செப்பேடு: பத்து) மகாபாரதத்தை மொழி பெயர்த்த செய்தி அது,ஆனால் அந்த நூல் கிடைக்கவில்லை. அதாவது வட மொழியை சேர்ந்த புராணங்கள்,இதிகாசங்கள் அவர்களது ஹிந்து என்று சொல்லப்படுகிற சமஸ்கிருத மதமோ,ஆரிய மதமோ,அந்த பாரம்பரியத்தின் தாக்கம் தமிழ் இலக்கியத்தில் தமிழ் பாரம்பரியத்தில் இருந்திருக்கிறது என்பதையும் மறுக்கவோ/மறைக்கவோ முடியாதே....தமிழ் பாரம்பரியம் தனிப்பட்ட பாரம்பரியம் தான்...அந்த பாரம்பரியத்திற்கு சமஸ்கிருதமோ,ஆங்கிலமோ,உருதுவோ வந்தேறி மொழி தான் அந்த மொழிகளை சார்ந்த இனமும்,அவர்களின் பாரம்பரியத்தின் தாக்கம் தமிழ் இலக்கியங்களில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் வந்தேறிகள் தான்.

சிவன் மற்றும் சைவ மடங்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறுவதாக சிலர் சொல்லலாம். சிவனின் அடிப்படை சீவன் என்பது...உயிரே மூலம்,சக்தியே மூலம்...தமிழ் பாரம்பரியத்தை சேர்ந்த சித்தர்கள் உரைத்ததே அவை...அதுவே பின்பு வடமொழியின் ஆதிக்கத்தால் சீவன் ஜீவனாக மாறியது...சிவ வழிபாடு,சக்தி வழிபாடே ஆதி தமிழனின் இறை வழ்பாடென சொல்வதும் உண்டு....பின்பு உங்களின்...அதாவது சமஸ்கிருத ஹிந்து ஆதிக்கத்தில் பல்வேறு கன்றாவி கதைகள் இறக்குமதியாயின...சிவன் ருத்த்ரன் ஆனார்,தமிழ் முருகன் சுப்ரமணியன் ஆனார்.சிவனை பற்றின கதைகள் ஆகட்டும்,அய்யப்பன் பிறந்த கதைகள் ஆகட்டும்,தீபாவளி கொண்டாடுவதன் காரணமாகட்டும்.இந்த சமஸ்கிருத தாக்கம் தொல்காப்பிய காலத்திற்கே முற்பட்டே இருந்திருக்கிறது(தொல்காப்பியனை பெரியார் ஆரிய கைக்கூலி என்று கூறியதில் தவறேதும் இல்லை தான்!)பின்வரும் இணையத்தை பாருங்கள்....தாக்கத்தை புரிந்து கொள்ள.....http://alivetamil.blogspot.com/2011/08/north-language-alivetamil-blog.html ஆதலால் சிவன் கோயிலில்,சைவ மடங்களில் தமிழில் நடைபெறும் அர்ச்சனை எங்களுக்கு பெரிய ஆச்சிரியத்தை தராது.உங்களுக்கு தேவை என்றால் தமிழ் நேச பாஷை, சிதம்பரம் நடராஜர் கோயில்ல தமிழில் அர்ச்ச்னை பண்ண வேண்டும் என்று ஆறுமுக நாவலர் போராடின பொழுது அது நீச பாஷை,சூத்திர பாஷை.....எந்த தன்மானமுள்ள,பகுத்தறிவுள்ள தமிழனும் தமிழ் ஹிந்து என்கின்ற ஒரு வட்டத்திற்கும் வரவே முடியாது, ஹிந்து சமுதாயத்தின் சாதி நிலையை முதலில் களைந்தெடும்(ஆமாம் மனுஸ்மிருதியும் தமிழ் பாரம்பரியத்தின் மீதான சமஸ்கிருத ஆதிக்கம் தானே, நம் மன்னர்கள் அந்த தாக்கத்திற்கு உட்பட்டு அதை நீதியாக நினைத்து அதையும் காக்கத் தொடங்கினார்கள்!?),அதற்கு பிறகு தமிழையும் ,தமிழர்களையும் நீங்கள் விளக்குகின்ற ஹிந்து என்கின்ற வட்டத்துற்குள் வருவது பற்றி யோசிக்கலாம்.

ஆரியத்தாக்கத்தை, வட மொழி சமஸ்கிருத ஆதிக்கத்தை உள் வாங்கிக் கொண்ட இலக்கியங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் சமூகம் சத்தியமாக சுய மரியாதை அற்ற சமூகம் தான்.....தமிழ் இலக்கியங்களின் மீதான வடமொழி ஆதிக்கம்...இதை யாராலும் மறுக்கவோ,மறைக்கவோ முடியாது.என்ன தான் பாலில் தண்ணியை கலந்தாலும் பால் வேறு,தண்ணி வேறு தான். அதை இரண்டையும் கலந்து வியாபாரம் செய்கிறார்கள் என்பதற்காக...அதற்கு என்ன தான் கவர்ச்சிகரமான பெயர் வைத்தாலும் அது இரண்டும் ஒன்று ஆகா...பிரித்தெடுப்பது சிரமம் தான், ஆனால் நாங்கள் பிரித்து பார்க்கவே விரும்புகிறோம் தனித்தன்மையை இழக்காமல் இருப்பதற்காக...இது தான் எங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட பகுத்தறிவு ,சுய மரியாதை....அது சங்க இலக்கியமாக இருந்தாலும் சரி,தொல்காப்பியமாக இருந்தாலும் சரி...திருக்குறளாக இருந்தாலும் சரி. இடம் ,பொருள்,காலம் மற்றும் மரபு அடிப்படையில் எங்களுக்கு போடும் பிச்சை எங்களுக்கு தேவை இல்லை...உங்கள் மரபின் அடிப்ப்டைக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் கட்டாயமும், நிலைமையும் எங்களுக்கு இல்லை. சில சுயமரியாதை அற்ற,பகுத்தறிவற்ற ஜென்மங்கள் இருக்கும் வரை உங்களுக்கு கவலை இல்லை, நன்றாக கலப்பட வியாபாரம் செய்து கொள்ளுங்கள்

No comments: