Wednesday, June 3, 2015

The Great Balu - தலைமுறைகள்

படம் ஆரம்பிக்கும் பொழுது அவருக்கு முதல் stroke வந்ததாக காண்பிப்பார்கள், படம் முடிந்து வெளியான பிறகு அவர் இறந்து இரண்டாவது stroke- ஐ நமக்கு கொடுத்து விட்டார்!

அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பல கேள்விகளுக்கு , குழப்பத்திற்கு உரியது அதனால் தான் இந்த கடைசி படத்திலும் தனக்கு இரண்டாவது மனைவி இருந்ததாக காண்பித்தாரோ என்னவோ...

தமிழ் ஆசிரியரான ஒருவர் தன் பேரன் தமிழில் பேச முடியாமல் இருக்கிறான் என்று கேட்கும் பொழுது தன் தலையில் அடித்து என் பேரன் என் பேரன் என்று ஆதங்கப்படும் காட்சி இயலாமையின் உச்சம்.
நம் தலைமுறைக்கு ஆற்றை அறிமுகப் படுத்தும் காட்சி அழகியலின் சாட்சி.

தாத்தாவுக்கு கடவுளாக தெரிவது பேரனுக்கு கல்லாக தெரிகிறது, பேரனுக்கு அவனாக தெரியும் photo தாத்தாவுக்கு சாதாரண paper-ஆக தெரிகிறது. வயது வேறுபாட்டின் , அனுபவத்தின் முரண்கள்.

5 வயதான ஒரு சிறுவன் தன் அம்மாவின் மார்பை பார்த்து இன்னமும் உனக்கு பால் வருமா என்று கேட்பதும், நீ எல்லாவற்றையும் வற்றிப் போக செய்து விட்டாய் என்று அம்மா கூறுவதும், கொஞ்ச தூரம் நடந்து சென்று திரும்பி வந்து அம்மாவை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது நம்மையும் சேர்த்து அரவணைக்கிறது.

தாத்தா சொல்லிக் கொடுத்து நெல் மணியில் பேரன் அ போடுவது ஆகட்டும், சிறு நீர் மூலம் ஆற்று மணலில் பேரன் அ போடுவதை பார்த்து முதலில் கோபக் கனலில் முகத்தை வைத்து அடுத்து அதே போல் தானும் அ போட்டு முயற்சிப்பது ஆகட்டும்...பேரன் அதை பார்த்து உங்களின் அ கொஞ்சம் shaggy-ஆக இருக்கிறது என்று கூறுவது ஆகட்டும்.இது போல் இனி யார் காட்சி அமைக்க முடியும்?

இந்த நாகரிக உலகில் பெரியவர்கள் முன்பு காலுக்கு மேல் கால் போடக் கூடாது என்று எந்த தாத்தா தன் பேரனுக்கு அறிவுறுத்தும் வாய்ப்பு அமையும்!

பிள்ளை(சாதிப் 'பிள்ளை') வாலை நறுக்கி இதையெல்லாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்பதும், எல்லா கடவுளும் ஒண்ணு தான் என்பது இப்ப தான் என் மரமண்டைக்கு புரிந்தது என்பதும் நம் மண்டைக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டியது.

சாவின் அறிமுகத்தை தன் பேரனுக்கு சொல்லி, தன் முகம் வெளுருவது எதார்த்தம்.
உன் தந்தை ஹிந்து, அம்மா கிறிஸ்துவர்... அப்ப நீ யார் என்று ஒரு பாதிரி அந்த சிறுவனிடம் கேட்க, கொஞ்சம் யோசித்து நான் ஆதி என்பானே... செருப்படி அது. ஆமாம் நம் தலைமுறை மதத்தையும் கடக்கும் என்கின்ற ஆவல் அது.

பெரியவர்களிடமிருந்து சிறியவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியதையும், சிறியவர்கள் மூலமாக பெரியவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியதையும் இயல்பாக கூறியிருக்கிறார்.

I dont speak Tamil என்று பேரன் தாத்தாவை சந்திக்கும் பொழுது அவன் தமிழ் பேசவில்லை, அதே பேரன் தனது தாத்தாவை பற்றி எழுதி மேடையில் அவரை பற்றி பேச முயற்சிக்கும் பொழுது அவன் வாயிலிருந்து தமிழ் வரவில்லை. இயக்கத்தின்(direction) வீரியமான வெளிப்பாடு அது.

இவர் போன்ற படைப்பாளிகளின் இழப்பு எல்லாம் இளையராஜா போன்றவர்களின் மூளைக்கு ஓய்வு கொடுக்கும் நிகழ்வுகள் தான்!

அட போங்க பாலு சார்....உங்களின் மூளை எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தது, இந்த படத்தின் ஒவ்வொரு Frame-லும் அது வெளிப்பட்டதே...இன்னும் கொஞ்ச நாள் உயிரோடிருந்து பஞ்சத்தில் இருக்கும் தமிழ் திரையுலகிற்கு மேலும் சிறிது ஊட்டம் கொடுத்திருக்கலாமே..

நாங்கள் தமிழையும் மறக்க மாட்டோம், தாத்தாவையும் (உங்களையும்) மறக்க மாட்டோம்!

இப்படி ஒரு சாட்டையடியை எங்களுக்கு கொடுத்து விட்டு நீங்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
நாங்களோ குற்ற உணர்ச்சியில் செத்துக் கொண்டிருக்கிறோம்!!!

# தலைமுறைகள். Special Thanks to Director M.Sasikumar who produced this Epic.

No comments: