Wednesday, June 3, 2015

அறிவாளிகள்

கிழிந்த சட்டையும், அழுக்கு வேட்டியும் அகத்தில் வெகுளிதனமும், புறத்தில் புன்னகை தவழும் இவரை நீங்கள் கோயிலிலோ, தேவாலயத்திலோ இல்லை தர்காவிலோ பார்த்திருக்கலாம்.
நானும் பார்த்தேன். என்னை சுற்றி சுற்றி வந்தார். என்னிடம் பேசவும் வரவில்லை, என்னிடமிருந்து காசையும் எதிர்பார்க்கவில்லை.

நான் ஒவ்வொருமுறையும் கேள்விக் கணையுடன் அவரை பார்க்கும் பொழுது எனக்கு பதிலாக சிரிப்பை மட்டுமே கொடுத்தார்.

தனிமையில் சிறை பட்டிருக்கும் அவருக்கு கூட்டமும் குடும்பமும் விடுதலையை உணர்த்தியிருக்கக் கூடும்,

அங்கு வரும் மக்கள் அவரை துரத்தி அடிப்பார்கள், அவரோ அங்கிருக்கும் சிறுவர்களை துரத்தி விளையாடுவார்.

கடவுளை காண வருவோர் மத்தியில் கடவுளை பற்றி கண்டு கொள்ளாமல் கடவுள் தலத்தில் குடியிருக்கும் ஒரு புதிர்முரண் அவர்.

மக்கள் எல்லாம் பணம் பகட்டு புகழ் என்று ஒரு திசையில் பயணிக்க இவர் மட்டும் அவருக்கான உலகில் வேறொரு திசையில் பயணித்துக் கொண்டிருப்பார்.

பல விடயங்களில் பைத்தியமாக இருக்கும் நாம் அவரை பைத்தியம் என்போம்.

கிளம்பி வரும் பொழுது அவரிடம் ஒரு 10 ரூபாயை கொடுத்தேன். இதை போன்ற பல பத்து ரூபாய்களை அவர் பார்த்திருக்கலாம், என்னைப் போன்ற பல மனிதர்களை அவர் பார்த்திருக்கலாம்.
நாம் அவரை போன்ற மனிதர்களை பார்ப்பது அரிது. நமக்கு அனுபவத்தையும் சிந்தனையையும்
அவர்கள் அறியாமலே நமக்கு கொடுத்து விடுவார்கள்.

அவர்கள் வாழ்க்கையை நமக்கு உணர்த்தும் அறிவாளிகள். ஆனால் அந்த அறிவு அவர்களுக்கு இருப்பதாக நாமும் உணர்வதில்லை அதை அவர்களும் அறிவதில்லை!

No comments: