Wednesday, June 3, 2015

குறும்படம்

குறும்படம் என்பது நிமிடத்தில் நேரத்தில் குறுகியதாகவும், நோக்கத்தில் , தாக்கத்தில் நெடியதாகவும் இருக்க வேண்டும்.

படத்தில் குறைவாக பேசி, படத்தை பற்றி வெளியில் அதிகமாக பேச வைக்க வேண்டும்.
படத்தின் முடிவு நம் சிந்தனையின் தொடக்கமாக இருக்க வேண்டும்.
படத்தின் திருப்பங்களில் நாம் நம்மை திரும்பி பார்க்க வேண்டும்.
படத்தில் வித்தியாசமும், புதுமையும் இருப்பதோடு அந்த படமே வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருக்க வேண்டும்.

மொத்தத்தில் நான் எப்பொழுதோ பார்த்த ஆனால் மனத்தில் இன்றும் பசுமரத்தாணி போல இருக்கும் இந்த இரண்டு படங்களை போல இருக்க வேண்டும்.

1.கால்பந்து ஆட்டம் நடந்து கொண்டிருக்கும், மைதானத்தின் ஓரத்தில் ஒருவன் உட்கார்ந்து கொண்டு அவர்கள் எப்படி ஆட வேண்டும் என்றும் எப்படி ஆடினால் கோல் போட முடியும் என்றும் ஆட்டம் முழுக்க அவ்வளவு ஆர்வமாக நேர் வர்ணனை கொடுத்துக் கொண்டிருப்பான். ஆட்டம் முடியும், அவனுக்கு பக்கத்தில் இருக்கும் தன் காலை தாங்கும் அந்த ஊன்று கோலை எடுத்துக் கொண்டு, ஊன்றி ஊன்றி நடந்து செல்ல படம் முடியும்.

2.வகுப்பறையில் ஆசிரியர் வருகை பதிவு வாசிப்பார். வகுப்பில் இருக்கும் மாணவர்கள் ஆசிரியர் கூறும் ஒவ்வொரு எண்ணுக்கும் வருகையை பதிவு செய்ய, 12 என்று வரும்பொழுது வருகை பதிவு செய்யும் மாணவனின் குரல் வராது அந்த சமயத்தில் ஒரு பேக்கரியை காண்பிப்பார்கள் அங்கு ஒரு சிறுவன் வேலை செய்வது போல...இப்படியாக இரண்டு மூன்று சிறுவர்களை காண்பிப்பதோடு படம் முடியும்.

No comments: