Wednesday, June 3, 2015

எதிர்மறை

எதிர் மறை தோல்வியின் / பின்னேற்றத்தின் வெளிப்பாடா... எதிர்மறையாளர்கள் கலவரக்காரர்களா?

என்ன நீங்க பெரும்பாலும் எதிர்மறையாவே எழுதுறீங்களே என்று கேட்பவர்களிடம் ஆமாம் எதிர்மறை தாக்கம் / சிந்தனை கொண்ட ஒரு சமூகத்தில் முள்ளை முள்ளால் எடுப்பது போல அதை பற்றித்தான் பெரும்பாலும் பேசியாக வேண்டும் என்று கூறிக் கொள்ள விழைகிறேன்!

பெரியார் எதிர்மறையாளர் தான் ஆனால் அந்த எதிர்மறை சிந்தனை தான் சமூகத்தில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது மேலும் பெரியார், பெரியாரியல் எந்த வித சாதி ,மத வகு...ப்பு மோதலுக்கு காரணமாக இருந்தது என்று கூற முடியுமா???(ஆமாம் பலருக்கு கேள்வியே கேட்காமல் உண்டு என்றால் நேர்மறை, விமர்சனம் செய்து இல்லை என்றால் எதிர்மறை!!!).
பெரியாரியல் தோல்வியடைந்து விட்டதா,சமூகத்தை முன்னேற்றவில்லையா??? பெரியார் இல்லை என்றால் இங்கு இட ஒதுக்கீடு ஏது, சமூக நீதி ஏது, சுய மரியாதை ஏது ??? நாம் எங்கே படித்திருக்க முடியும்??? இந்த சமூகத்தில் நம் கருத்தை எப்படி தைரியமாக கூறும் உரிமை கிடைத்திருக்க முடியும்???

சமீபத்தில் நடந்த மட்டைப் பந்து ஆட்டத்தில் ஹிந்தியா நன்றாக விளையாடியது என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் , அதை ஒரு பெரிய விடயமாக எடுத்து பத்திரிகையும், பலரும் பேசும் பொழுது அந்த நேரத்தில் நாம் விமர்சனத்தை வைப்பது தவிர்க்க முடியாததாகிறது. இது எதிர்மறை அல்ல...சிந்தனையோட்டம் ஒரெ திசையில் இருக்கும் மக்களின் மூளையில் இந்த எதிர்மறை விமர்சனத்தின் மூலம் பல நேர் மறை விடயங்களை வித்திடும் முயற்சி.

உதாரணமாக Economic Times என்ற இதழ் தோனி தன் குழந்தையை பார்த்து 2 மாதம் ஆகிவிட்டது, இதற்கு என்ன கூறுகிறீர்கள் என்று இணைய செய்தியில் ஆரம்பித்தது. வெட்ட வெளிச்சமாக தெரிவது இது பத்திரிகை வியாபார உக்தி. அதற்கு பதில் அளிக்கு விதமாக அனைவரும் உருக... ஒருவர் மட்டும் சற்று வித்தியசமாக தோனியாவது ஏதாவது வகையில் Computer, Skype போன்ற தொழில் நுட்பத்தில் தன் குழந்தையை பார்க்க முடியும் , ஆனால் நம் எல்லை வீரர்கள் எத்தனை வருடங்கள் தங்கள் குழந்தைகளை பார்க்கும் வழிவகை இல்லாமல், சில நேரம் பார்க்காமலேயே இறந்தும் விடுகிறார்கள் அதனால் இந்த விடயங்களை எல்லாம் பெரிது படுத்தாதீர்கள் என்று பதில் அளித்திருந்தார்.இந்த எதிர் மறை சிந்தனை தான் நேர் மறையான சில விடயத்தை எடுத்துக் காட்டியிருக்கிறது.

# புரியும் படி சொல்வதானால் ஒரெ மாதிரி சிந்தித்தால் நேர்மறை, கொஞ்சம் மாற்றி யோசித்தால் எதிர் மறை! அம்மணமாக திரிபவர்கள் கூட்டத்தில் ஆடை அணிபவன் பைத்தியக்காரன் தான்!!
ஒரெ மாதிரி சிந்தித்து , நேர் மறையாக இருக்கிறேன் என்று அம்மணமாக திரிவதை விட, மாற்றி யோசித்து , எதிர் மறையாக இருக்கிறேன் ஆனால் ஆடை அணிந்திருக்கிறேன் என்பதாகவே இருந்து விட்டு போகலாம். அவர்களின் பார்வையில் அது பைத்தியக்காரத்தனமாகவும் இருந்து விட்டு போகட்டும்!!!

Komban

வீரத்தின் அடையாளமாக மீசையை எந்த இயக்குனர், நடிகர் தமிழ் திரைக்கு கொண்டு வந்தார்கள்?
முறுக்கு மீசை வைத்தால் வீரன், அதுவே கிர்தா தொட்டு தலை மயிரில் இணைந்தால் அவர் பெரிய சண்டியர், பெரிய கொம்பனாமாம்.

தேவர் மகன், நாட்டாமை இவர்கள் இந்த மீசைக்கு சொந்தக்காரர்கள். மீசையை வருடிக் கொண்டு,முறுக்கிக் கொண்டு இவர்கள் சாதிப் பெருமை பேசுவது வீரத்தின் அடையாளமா இல்லை அவமானமா???

இதே திரைப் படங்களில் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு இவர்களுக்கு எதிரே நிற்பவர்கள் யாருக்காவது பெரிய மீசை இருக்குமா என்றால்... இருக்காது!
இந்த போலி திரை பிம்பங்களோ அவர்களால் உருவகப்படுத்தப்படும் நபர்களோ மீசை வளர்த்ததை தவிர என்ன வீர சாகசங்கள் செய்தார்கள்???

# நம் வாழ் நாளில் நாம் பார்த்த நிஜ வீரன் பிரபாகரனுக்கு சில காலங்கள் மீசையே இருந்ததில்லை, கடைசி கால கட்டத்தில் சாதாரண மீசையில் தான் காட்சியளித்தார். முறுக்கவும் இல்லை, நீட்டி முழங்கவும் இல்லை!!!

ஜெய காந்தன்

ஜெய காந்தன் அல்ல ஜெய காந்தம் அவர், படிப்போரை அவர் பக்கம் இழுப்பதால்...

அவர் எனக்கு அறிமுகமாகியது 2002 - 2003 இலயோலா தமிழ் துறையில்.
அங்கு தான் முதன் முதலாக பார்த்தேன் இல்லை படித்தேன்.

கணிப்பொறி முதுகலையில் படித்த பொழுது நான்கு புத்தகங்கள் நூலகத்தில் எடுக்கலாம் என்ற நிலையில் நான்காவதாக அறிமுகமாகி , பிறகு நான்காகவும் ஆக மாட்டாரா என்ற ஆவலை தூண்டியவர்.

ஜெய காந்தன் சிறு கதைகள் ...ஒவ்வொன்றும் சிந்தனையை விதைக்கும் விதைகள்.
அடுத்து என்ன எழுதுவார், எப்படி முடிப்பார் என்கின்ற ஆர்வத்தை விருட்சமாக்கும் விதைகள்.

நான் கிறுக்கிய சில கதைகளில் அவரின் தாக்கம் இருக்கிறது என்றான் நண்பன்.
அவருக்கு முன்னால் அவைகள் எல்லாம் ஒரு ஆக்கமா என்றிருக்க, எப்படி தாக்கம் இருக்கும் என்று நினைத்தேன் இருந்தும் உள்ளுக்குள் மகிழ்ந்தேன்.

அன்று புத்தகமாக அறிமுகமானவர் இன்று என் அலைபேசியில் App-ஆக தொடர்கிறார்.

81 வயதில் இறப்பு இயற்கை தான், ஆனால் அவரின் இடத்தை வேறொருவரால் நிரப்புவது இயற்கையில் சாத்தியமல்ல என்பதால் இன்னமும் வாழ்கிறார்.

அறிவாளிகள்

கிழிந்த சட்டையும், அழுக்கு வேட்டியும் அகத்தில் வெகுளிதனமும், புறத்தில் புன்னகை தவழும் இவரை நீங்கள் கோயிலிலோ, தேவாலயத்திலோ இல்லை தர்காவிலோ பார்த்திருக்கலாம்.
நானும் பார்த்தேன். என்னை சுற்றி சுற்றி வந்தார். என்னிடம் பேசவும் வரவில்லை, என்னிடமிருந்து காசையும் எதிர்பார்க்கவில்லை.

நான் ஒவ்வொருமுறையும் கேள்விக் கணையுடன் அவரை பார்க்கும் பொழுது எனக்கு பதிலாக சிரிப்பை மட்டுமே கொடுத்தார்.

தனிமையில் சிறை பட்டிருக்கும் அவருக்கு கூட்டமும் குடும்பமும் விடுதலையை உணர்த்தியிருக்கக் கூடும்,

அங்கு வரும் மக்கள் அவரை துரத்தி அடிப்பார்கள், அவரோ அங்கிருக்கும் சிறுவர்களை துரத்தி விளையாடுவார்.

கடவுளை காண வருவோர் மத்தியில் கடவுளை பற்றி கண்டு கொள்ளாமல் கடவுள் தலத்தில் குடியிருக்கும் ஒரு புதிர்முரண் அவர்.

மக்கள் எல்லாம் பணம் பகட்டு புகழ் என்று ஒரு திசையில் பயணிக்க இவர் மட்டும் அவருக்கான உலகில் வேறொரு திசையில் பயணித்துக் கொண்டிருப்பார்.

பல விடயங்களில் பைத்தியமாக இருக்கும் நாம் அவரை பைத்தியம் என்போம்.

கிளம்பி வரும் பொழுது அவரிடம் ஒரு 10 ரூபாயை கொடுத்தேன். இதை போன்ற பல பத்து ரூபாய்களை அவர் பார்த்திருக்கலாம், என்னைப் போன்ற பல மனிதர்களை அவர் பார்த்திருக்கலாம்.
நாம் அவரை போன்ற மனிதர்களை பார்ப்பது அரிது. நமக்கு அனுபவத்தையும் சிந்தனையையும்
அவர்கள் அறியாமலே நமக்கு கொடுத்து விடுவார்கள்.

அவர்கள் வாழ்க்கையை நமக்கு உணர்த்தும் அறிவாளிகள். ஆனால் அந்த அறிவு அவர்களுக்கு இருப்பதாக நாமும் உணர்வதில்லை அதை அவர்களும் அறிவதில்லை!

குறும்படம்

குறும்படம் என்பது நிமிடத்தில் நேரத்தில் குறுகியதாகவும், நோக்கத்தில் , தாக்கத்தில் நெடியதாகவும் இருக்க வேண்டும்.

படத்தில் குறைவாக பேசி, படத்தை பற்றி வெளியில் அதிகமாக பேச வைக்க வேண்டும்.
படத்தின் முடிவு நம் சிந்தனையின் தொடக்கமாக இருக்க வேண்டும்.
படத்தின் திருப்பங்களில் நாம் நம்மை திரும்பி பார்க்க வேண்டும்.
படத்தில் வித்தியாசமும், புதுமையும் இருப்பதோடு அந்த படமே வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருக்க வேண்டும்.

மொத்தத்தில் நான் எப்பொழுதோ பார்த்த ஆனால் மனத்தில் இன்றும் பசுமரத்தாணி போல இருக்கும் இந்த இரண்டு படங்களை போல இருக்க வேண்டும்.

1.கால்பந்து ஆட்டம் நடந்து கொண்டிருக்கும், மைதானத்தின் ஓரத்தில் ஒருவன் உட்கார்ந்து கொண்டு அவர்கள் எப்படி ஆட வேண்டும் என்றும் எப்படி ஆடினால் கோல் போட முடியும் என்றும் ஆட்டம் முழுக்க அவ்வளவு ஆர்வமாக நேர் வர்ணனை கொடுத்துக் கொண்டிருப்பான். ஆட்டம் முடியும், அவனுக்கு பக்கத்தில் இருக்கும் தன் காலை தாங்கும் அந்த ஊன்று கோலை எடுத்துக் கொண்டு, ஊன்றி ஊன்றி நடந்து செல்ல படம் முடியும்.

2.வகுப்பறையில் ஆசிரியர் வருகை பதிவு வாசிப்பார். வகுப்பில் இருக்கும் மாணவர்கள் ஆசிரியர் கூறும் ஒவ்வொரு எண்ணுக்கும் வருகையை பதிவு செய்ய, 12 என்று வரும்பொழுது வருகை பதிவு செய்யும் மாணவனின் குரல் வராது அந்த சமயத்தில் ஒரு பேக்கரியை காண்பிப்பார்கள் அங்கு ஒரு சிறுவன் வேலை செய்வது போல...இப்படியாக இரண்டு மூன்று சிறுவர்களை காண்பிப்பதோடு படம் முடியும்.

நேபாளம் - பாவ மன்னிப்பு !!!

இதை எழுத வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன் ஆனால் எழுதாமல் இருக்க முடியவில்லை.

நம்பிக்கையோ நம்பிக்கை இன்மையோ மனித நேயத்தை நோக்கித் தான் நகர வேண்டும் அப்படி நகர வில்லையென்றால் அந்த நம்பிக்கையாலோ நம்பிக்கை இன்மையாலோ என்ன பயன்?

அதாவது பெரியாரின் , இங்கர்சாலின் நம்பிக்கை இன்மை, வள்ளலாரின், நாராயண குருவின், தெரசாவின் நம்பிக்கை கலவரத்தை நோக்கியோ, அழிவை நோக்கியோ பயணிக்க சொல்லவில்லை மாறாக வளர்ச்சியை நோக்கி, மாற்றத்தை நோக்கி பயணிக்க கற்றுக் கொடுத்தது.

அப்படி மனித நேயத்தை நோக்கி நகராமல் சிலர் தடுக்கும் பொழுது , அந்த பாதையை சிலர் மாற்றும் பொழுது அதில் இருக்கும் உண்மை இன்மையை விளக்கும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்கின்ற அடிப்படையில் தான் இதை எழுதுகிறேன்.

நேபாளம்...அழிவின் கோர முகத்தை, அதன் உச்ச கட்டத்தை பார்த்த நேரம்.பிஞ்சு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த வயோதிகர்கள் வரை ஒன்றும் இல்லாமல் உருக்குலைந்த நேரம், இடிபாடுகளில் தவிடு பொடியான நேரம், பூமிப் பந்தின் விளையாட்டில் புதையுண்ட நேரம் மத நம்பிக்கையில் திளைத்த ஒருவர் இப்படி பதிவிடுகிறார்... அங்கு போதனைக்கு சென்ற ஒரு போதகரை எரித்துக் கொன்றார்கள் அதன் பலன் இது என்று.

எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் மனைவியிடத்தில் தனிப்பட்ட முறையில் என் கருத்தை பற்றி விவாதித்தாலும் அவர்களுக்காக எப்பொழுதாவது தேவாலயத்திற்கு செல்வது உண்டு, அந்த நேரத்தில் பிரசங்கத்தை மட்டும் ஆவலாக கவனிப்பேன் ஏதாவது வித்தியாசமாக மக்களுக்கு இந்த பாதிரிமார்கள் கூறுகிறார்களா என்று. அப்படி ஒரு சமயத்தில் உறவினர் உறவில் இருக்கும் ஒரு பாதிரியார் இப்படி கூறினார். விபச்சாரமும், விக்ரக ஆராதனையும் தான் நேபாள அழிவிற்கு காரணம் என்று, அதாவது கடவுள் தான் அதற்கு காரணம் என்கின்ற அடிப்படையில்!(குறைந்தது அங்கு ஒரு 200 மக்களாவது இருந்திருப்பார்கள் அவர்களின் மத்தியில் அந்த பரப்புரையானது அரங்கேற்றப்பட்டது.)கடவுளின் அனைத்து செயலுக்கும் காரணம் இருக்குமாம், அதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டுமாம்

எனக்கு பல விடயங்கள் இங்கு புரியவில்லை... அந்த போதகரை எரித்துக் கொன்ற 10 - 15 பேரை அடையாளம் கண்டுபிடித்து உங்களின் கடவுளால் தண்டிக்க முடியாதா??? குழந்தைகள் செய்த விபச்சாரம் என்ன?? அவரை ஆராதிக்காவிட்டால் கொன்று விடுவாரா??? அதுவும் ஒட்டு மொத்தமாக அழித்து விடுவாரா??? உலகில் உள்ள அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் அங்கு இருப்பவர்கள் யார்?? மதத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரித்து கலவரம் உண்டாக்குவது கடவுளா இல்லை கடவுளின் பெயரால் நீங்களா???

அடுத்து எல்லா உயிர்களையும் தன்னியிர் போல் நேசி என்று கூறியதாக நீங்கள் நம்பும் கடவுள், எதிரியையும் நேசி என்று கூறியதாக நீங்கள் நம்பும் கடவுள், ஒரு கன்னத்தில் அறைந்தால் மற்றொரு கன்னத்தையும் காட்டு என்று கூறியதாக நீங்கள் நம்பும் கடவுள் இப்படி செய்வாரா என்ன!?
சரி கடற்கறை ஓரத்தில் கையை பின்புறமாக கட்டி சுட்டுக் கொன்றார்களே, அவர்களின் செயலுக்கு அவர்களின் கடவுளை இழுப்பார்கள் இரட்டை கோபுரம் தகர்க்கப் பட்டதுக்கு அவர்களின் கடவுளை காரணம் காட்டியதை போல. இந்த மாதிரியான நம்பிக்கைகள் மனித நேயத்தை சிதைக்கவே செய்கின்றன.

குறிப்பு :- உங்கள் கடவுளை நான் மனிதனாக மதிக்கும் அளவிற்கு கூட நீங்கள் அவரை கடவுளாக புரிந்து கொள்ளவில்லை!

என் எழுத்துக்கள் உங்களை காயப்படுத்தினால் எனக்கு கவலை இல்லை ஏனென்றால் உங்களின் இது போன்ற நம்பிக்கைகள் உங்கள் மதத்தார் பலரையே காயப்படுத்தியிருக்கிறது. உங்களின் நம்பிக்கை படி நேபாளத்தில் இறந்தோரின் ஆன்மாவை காயப்படுத்தியிருக்கும், உங்களின் நம்பிக்கை படி உங்களின் கடவுளையும் வேதனை படுத்தியிருக்கும்.

நாளை திருப்பலியில் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்!

The Great Balu - தலைமுறைகள்

படம் ஆரம்பிக்கும் பொழுது அவருக்கு முதல் stroke வந்ததாக காண்பிப்பார்கள், படம் முடிந்து வெளியான பிறகு அவர் இறந்து இரண்டாவது stroke- ஐ நமக்கு கொடுத்து விட்டார்!

அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பல கேள்விகளுக்கு , குழப்பத்திற்கு உரியது அதனால் தான் இந்த கடைசி படத்திலும் தனக்கு இரண்டாவது மனைவி இருந்ததாக காண்பித்தாரோ என்னவோ...

தமிழ் ஆசிரியரான ஒருவர் தன் பேரன் தமிழில் பேச முடியாமல் இருக்கிறான் என்று கேட்கும் பொழுது தன் தலையில் அடித்து என் பேரன் என் பேரன் என்று ஆதங்கப்படும் காட்சி இயலாமையின் உச்சம்.
நம் தலைமுறைக்கு ஆற்றை அறிமுகப் படுத்தும் காட்சி அழகியலின் சாட்சி.

தாத்தாவுக்கு கடவுளாக தெரிவது பேரனுக்கு கல்லாக தெரிகிறது, பேரனுக்கு அவனாக தெரியும் photo தாத்தாவுக்கு சாதாரண paper-ஆக தெரிகிறது. வயது வேறுபாட்டின் , அனுபவத்தின் முரண்கள்.

5 வயதான ஒரு சிறுவன் தன் அம்மாவின் மார்பை பார்த்து இன்னமும் உனக்கு பால் வருமா என்று கேட்பதும், நீ எல்லாவற்றையும் வற்றிப் போக செய்து விட்டாய் என்று அம்மா கூறுவதும், கொஞ்ச தூரம் நடந்து சென்று திரும்பி வந்து அம்மாவை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது நம்மையும் சேர்த்து அரவணைக்கிறது.

தாத்தா சொல்லிக் கொடுத்து நெல் மணியில் பேரன் அ போடுவது ஆகட்டும், சிறு நீர் மூலம் ஆற்று மணலில் பேரன் அ போடுவதை பார்த்து முதலில் கோபக் கனலில் முகத்தை வைத்து அடுத்து அதே போல் தானும் அ போட்டு முயற்சிப்பது ஆகட்டும்...பேரன் அதை பார்த்து உங்களின் அ கொஞ்சம் shaggy-ஆக இருக்கிறது என்று கூறுவது ஆகட்டும்.இது போல் இனி யார் காட்சி அமைக்க முடியும்?

இந்த நாகரிக உலகில் பெரியவர்கள் முன்பு காலுக்கு மேல் கால் போடக் கூடாது என்று எந்த தாத்தா தன் பேரனுக்கு அறிவுறுத்தும் வாய்ப்பு அமையும்!

பிள்ளை(சாதிப் 'பிள்ளை') வாலை நறுக்கி இதையெல்லாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்பதும், எல்லா கடவுளும் ஒண்ணு தான் என்பது இப்ப தான் என் மரமண்டைக்கு புரிந்தது என்பதும் நம் மண்டைக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டியது.

சாவின் அறிமுகத்தை தன் பேரனுக்கு சொல்லி, தன் முகம் வெளுருவது எதார்த்தம்.
உன் தந்தை ஹிந்து, அம்மா கிறிஸ்துவர்... அப்ப நீ யார் என்று ஒரு பாதிரி அந்த சிறுவனிடம் கேட்க, கொஞ்சம் யோசித்து நான் ஆதி என்பானே... செருப்படி அது. ஆமாம் நம் தலைமுறை மதத்தையும் கடக்கும் என்கின்ற ஆவல் அது.

பெரியவர்களிடமிருந்து சிறியவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியதையும், சிறியவர்கள் மூலமாக பெரியவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியதையும் இயல்பாக கூறியிருக்கிறார்.

I dont speak Tamil என்று பேரன் தாத்தாவை சந்திக்கும் பொழுது அவன் தமிழ் பேசவில்லை, அதே பேரன் தனது தாத்தாவை பற்றி எழுதி மேடையில் அவரை பற்றி பேச முயற்சிக்கும் பொழுது அவன் வாயிலிருந்து தமிழ் வரவில்லை. இயக்கத்தின்(direction) வீரியமான வெளிப்பாடு அது.

இவர் போன்ற படைப்பாளிகளின் இழப்பு எல்லாம் இளையராஜா போன்றவர்களின் மூளைக்கு ஓய்வு கொடுக்கும் நிகழ்வுகள் தான்!

அட போங்க பாலு சார்....உங்களின் மூளை எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தது, இந்த படத்தின் ஒவ்வொரு Frame-லும் அது வெளிப்பட்டதே...இன்னும் கொஞ்ச நாள் உயிரோடிருந்து பஞ்சத்தில் இருக்கும் தமிழ் திரையுலகிற்கு மேலும் சிறிது ஊட்டம் கொடுத்திருக்கலாமே..

நாங்கள் தமிழையும் மறக்க மாட்டோம், தாத்தாவையும் (உங்களையும்) மறக்க மாட்டோம்!

இப்படி ஒரு சாட்டையடியை எங்களுக்கு கொடுத்து விட்டு நீங்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
நாங்களோ குற்ற உணர்ச்சியில் செத்துக் கொண்டிருக்கிறோம்!!!

# தலைமுறைகள். Special Thanks to Director M.Sasikumar who produced this Epic.

May 29, 2015

"ஆடிக்கு பின்னால் ஆவணி என் தாடிக்கு பின்னால் தாவணி"
"வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க ஆளுக்கொரு வீடு தருவார்களா"
"வளையும் நாணல் புயற்காற்றிலும் பிழைத்துக் கொள்கிறது, வளையாத் தென்னை ஒடிந்து வீழ்கிறது."

என்னடா சம்பந்தமே இல்லாம பேசுறானேனு பாக்குறீங்களா??? இவை அனைத்தும் என் பள்ளி பருவத்தில் (6 முதல் 12) என் காதில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் யாரோ ஒருவரால் விழுந்தவை. அது என்ன சந்தர்ப்பம் , எவரால் என்பதெல்லாம் எனக்கு நினைவு இல்லை எப்படி முதல் காதல் நமக்கு நினைவில் இருக்கும் ஆனால் அந்த கால க...ட்டம் மங்கலாக தெரியுமோ அது போல.
நம்மை கவரும் நிகழ்வுகள் கடைசி காலம் வரை பசுமையாக நினைவில் நிற்கும், எதற்காக அந்த விடயங்கள் நம்மை கவர்ந்தன என்ற காரணம் புரியாமலேயே...
நான் ஒன்றாம் வகுப்பில் தமிழ் வழியில் படிக்க ஆரம்பித்த , இன்று நாத்திகனாக இருக்கும் எனக்கு பிள்ளையார் சுழி போட்ட என் முதல் பள்ளி, கல்லூரி காலத்தில் மறுமுறையும் அங்கு சென்று கண்ணீர் சிந்த வைத்த என் முதல் பள்ளி Sri மகா கணேச வித்தியா சாலா நடு நிலைப் பள்ளி, அம்பத்தூர்.
முதல் வகுப்பில் எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த இரண்டாவது அம்மா சரஸ்வதி டீச்சர்
3 ஆம் வகுப்பில் லால் பகதூரை பற்றி பேசின என் முதல் பேச்சு போட்டி (அப்பா எழுதி கொடுத்து நான் செய்த ஒப்புவித்தல் போட்டி அது!)
ரஜினிக்கு இருப்பது போல மூக்கின் மேல் கறுப்பு அடையாளம் இருக்க , அதை ரத்தம் வர தேய்த்தது.
நானும் எனக்கு முதல் நண்பனாக மாறிய தேவேந்திரனும் முதலில் சண்டை போட்டு என் வாய் உடை பட்டது!
என்னை ஏதோ விதத்தில் கவர்ந்த பெண்ணின் ஜடையை எவனோ ஒருத்தன் பள்ளி முடிந்ததும் இழுத்துக் கொண்டு ஓட , அவனை அடித்து துவைத்திருக்க வேண்டுமே என்று கோபப்பட்டது.
வீட்டு உணவை நண்பர்களுக்கு கொடுத்து சத்துணவை உண்டது

6 ஆம் வகுப்பில் என் முதல் கவிதை!
என் ஆச்சியுடன் கடவுளை பற்றி நக்கல் செய்து அவரை உசுப்பேற்றுவது
பேருந்து நிறுத்ததில் குச்சி ஐஸை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வகுப்பு தோழனின் கையை தட்டி விட்டு அவனிடம் அகப்படாமல் ஓடியது.
Maggi Cover-ஐ சாலை சாலையாக அண்ணனுடன் சேர்ந்து பொறுக்கியது!
உயிர் நண்பனுடன் காரணமில்லாமல் சண்டை ,,,அதற்கு பிறகு இணைதல்.
8 ஆம் வகுப்பில் சமூக அறிவியல் ஆசிரியரை பற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தது அதற்கு பிறகு அந்த ஆசிரியருடன் நெருக்கமானது.
9ஆம் வகுப்பின் ஆண்டு தேர்வில் ஆங்கில தேர்வில்
தேர்ச்சி ஆக முடியுமா என்கின்ற பயத்தில் கடவுளை கும்பிட்டு அதற்கு பிறகு எனக்கு தன் நம்பிக்கை இல்லையா என்று சுய ஆய்வு செய்து எந்தவொரு நெருக்கடியான கால கட்டத்திலும் எவரையும் நம்பாமல் முழு நாத்திகன் ஆனது

11 அல்லது 12 ஆம் வகுப்பில் சுபவீ எழுதி கொடுத்த குறிப்பை அடிப்படையாகக் கொண்டு சுதந்திரம் பற்றி 50 ஆண்டு சுதந்திர பொன்விழாவில் பேசி சர்ச்சையானது.
கல்லூரி படிக்கும் பொழுது எதேச்சையாக சரஸ்வதி டீச்சரை சந்தித்து என் வாழ்வின் ஆரம்பத்தில் பயணித்த அவர்களுடன் அவர்கள் வாழ்வின் கடைசி கால கட்டத்தில் பயணித்து அவர்களின் மரணத்தையும் நான் சந்தித்தது!

# நாளை அடி எடுத்து வைக்கப் போகும் 33ஆம் அகவையில் இந்த நிகழ்வுகள் எவ்வளவு பசுமையாக இருக்கின்றன.
இன்று இறந்தால் காலச்சக்கரம் பின்னோக்கி சுழன்று நான் அந்த காலத்திற்கு செல்ல முடியும் என்றால் நான் அதற்கு முழு மனதாக தயாராக இருக்கிறேன் !!!

யான் பெற்ற இன்பம் பெறுக எம் பெற்றோர்

Escalator - இல் எப்படி ஏறி இறங்க வேண்டும் என்பதில் இன்னமும் தடு மாற்றம் அவர்களுக்கு...
என் மகனுக்கு பழக்கமாகிப் போன பல உணவு வகைகள் அவர்களுக்கு இன்னமும் புதியது...
2D என்கின்ற தொழில் நுட்பத்தையே அவர்களால் இப்பொழுது தான் உள்வாங்கிக் கொள்ள முடிகிற பொழுது 3D, 7D மற்றும் 8D என்பதெல்லாம் அவர்களுக்கு அபூர்வமான ஒன்று.
Faloota ,Cold Coffee இவற்றையெல்லாம் இப்படியெல்லாம் இருக்கிறதா என்று அவர்கள் அதிசயமாக பார்க்கக் கூடும்.
என் மகன் விளையாடும் Video Game-ஐ அவர்கள் பெரிய விடயமாக பார்க்கிறா...ர்கள்.

இது போன்று பலப் பல....

அவர்களை நாம் சாதாரணமாக கூறிவிடுகிறோம் நீங்கள் அறியாமையில் இருக்கிறீர்கள் என்று. அவர்கள் அறிவிலிகளா????? இல்லை அப்பாவிகள்!

நாம் நல்ல நிலையை அடைய அவர்கள் பல விடயங்களை துறந்தார்கள், இழந்தார்கள் , மறந்தார்கள். நாம் இன்று நல்ல நிலையை அடைந்த பிறகு அவர்களையே நாம் துறக்கிறோம், இழக்கிறோம், மறக்கிறோம்,அறியாமையில் இருப்பதாக வேறு குற்றம் சுமத்துகிறோம்.

# யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு முன்னால் யான் பெற்ற இன்பம் பெறுக எம் பெற்றோர் என்று நினைப்பதே சிறந்த பொது நலமாக இருக்க முடியும்!