என்னைப் பொறுத்தவரை ஏன் இயேசு மற்றும் நபியிலிருந்து புத்தர் வேறுபடுகிறார், தனியாக தெரிகிறார்.
புத்தர் தன்னை எப்பொழுதும் ஒரு தீர்க்கதரிசியாகவோ, கடவுளாகவோ வெளிப்படுத்தியதில்லை. தன்னை பின்பற்றுபவர்களையும் அவ்வண்ணமே தன்னை பார்க்கவும் செய்திருக்கிறார்.
புத்தர் என்னதான் சார்வாகர் மற்றும் மாதவாச்சாரியார் பரப்பிய சார்வாக(முதல் நாத்திக கோட்பாடு) தாக்கம் கொண்டிருந்தாலும், அந்த தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டு அதே நேரம் சாதி, மூட நம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்களை எதிர்த்து கடவுள் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத ஒரு ஆன்மீக சமூக சீர்திருத்தவாதியாக வாழ்ந்திருக்கிறார்.
தண்ணீருக்காக இரத்தம் சிந்தாதீர்கள் என்று இன்றைய நிலையை அன்றே படம் பிடித்து காட்டியவர் புத்தர். வேள்விகளுக்கு பயன்படுத்தப்படும் விலங்கினங்கள் நேரடியாக சொர்க்கம் செல்லும் என்று பிராமணர்கள் கூறிய பொழுது அதை ஏன் நீங்கள் கடை பிடித்து சொர்க்கம் செல்லக் கூடாது என்று அன்றே கேள்வி கேட்டவர் புத்தர்.(மகாபாரதத்தில் தீயவன் ஒருவனுக்கு சார்வாகன் என்று பெயரிட்டதையும், நாத்திகம் பேசுபவர்கள் புத்தரை வழிபடுவதாகவும் அவர்களை இராமாயணத்தில் தாழ்மை படுத்துவதையும் இங்கு கருத்தில் கொள்க...)
நம் சமூகத்தில் தோன்றிய, நம் சமூகத்தை சீர்திருத்த முயன்ற, தனி மனித வாழ்க்கைக்கு ஏற்றம் தர முயன்ற(அதே சமயம் அந்த கருத்துக்கள் உலகம் முழுமைக்கும் பொருந்தியது.) ஒரு வேறுபட்ட / மாறுபட்ட மனிதர் புத்தர் என்கின்ற அளவில் முதலில் கூறிய அந்த இருவர்களை விட புத்தர் எனக்கு வித்தியாசமாக தெரிகிறார், புத்தர் தான் இன்னமும் நமக்கு தேவையும் படுகிறார்.
No comments:
Post a Comment