Friday, March 20, 2015

மனித நேயத்தை சிதைக்கும் மதங்கள்!!!

ஒரு இசுலாமிய நண்பர் கூறினார் இசுலாமியர்கள் உடல் தானம் செய்ய மார்க்கத்தில் அனுமதி இல்லையாம்... இறந்த பின்பு உடல்கள் சிதைக்கப்படுகிறது மேலும் வெட்க தலம் பாதுக்காக்கப்படுவதில்லை அதனால் அனுமதி இல்லையாம்.

சில காலம் முன்பு சங்கராச்சாரியார் கண் தானத்திற்கு எதிரான தன் கருத்தை கூறியிருந்தார்...கண் தானம் செய்யக் கூடாது ஏனென்றால் அப்படி தானம் செய்பவர்கள் சொர்க்கலோகத்தை காண முடியாதாம்.

ஏன் கிறித்துவத்தில் தீவிரமாக நம்பிக்கை கொண்டவர்களும் உடல், உறுப்பு தானத்தை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

# இறந்த பின்பும் நம்மை மூட நம்பிக்கையில் கட்டிப் போட்டு, மனித நேயத்தை சிதைக்கும் மதங்கள்!!!

அமெரிக்கா சொல்லித் தந்த அறிவு

அமெரிக்கா அத்தியாவசியமான சில தேவைகளை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் அவசியமான சில விடயங்களையும் கற்றுத்தந்திருக்கிறது.

ஊரே குப்பை காடாக இருந்தாலும் கையில் இருக்கும் குப்பையை வெளியில் போடுவதற்கு இன்னமும் மனம் வரவில்லை.

சின்ன உதவிகள் யாராவது செய்த போதிலும் , சின்ன தவறுகள் நாம் செய்த போதிலும் நன்றி, மன்னிக்கவும் என்று கூறுவதில் கூச்சம், வெட்கம் வரவில்லை.

எங்கு சென்றாலும் வரிசையாக நிற்காமல் ஆடு மாடுகளை போல கூட்டமாக நிற்கும் மனம் வரவில்லை.

நமக்கு பின்பு வரும் நபரை கருத்தில் கொள்ளாமல் , கதவை திறந்து விட்டு திரும்பி பார்க்காமல் செல்லும் மனமும் வரவில்லை.

மொத்தத்தில் நாம் இருக்கும் சூழ் நிலையை, நம்மை சுற்றியிருக்கும் சுற்றத்தாரை கணக்கில் கொள்ள வேண்டும் என்கின்ற அறிவு ... ஆங்கிலேயனிடம் விடுதலை பெற்று விட்டோம் என்று தம்பட்டம் அடித்து இவ்வளவு ஆண்டு காலம் நம் அரசியல் வாதிகள் நமக்கு சொல்லித்தராத அறிவு சிறிது வந்திருக்கிறது!!!

தலைமுறைகள் கடந்து...

கடந்த 1 மாத காலமாக பாலு மகேந்திராவை அதிகமாக ரசித்துக் கொண்டிருந்தேன்...

நீங்கள் கேட்டவை, ராமன் அப்துல்லா,சந்தியா ராகத்தை மறுமுறை பார்த்தேன்
தலைமுறைகளுக்கு பிறகு அவரின் பேட்டியை பார்த்தேன்...அவர் கூறிய 3 விடயங்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது இப்பொழுது அதனுடன் அவரது இறப்பும்......

எனக்காக நான் எடுத்த படங்கள் என்று வீடு, சந்தியா ராகம், தலைமுறைகளை குறிப்பிட்டார்,மற்றவை அனைத்துமே adjustment என்றார். ஒன்று சினிமா இல்லையென்றால் ஒன்றும் இல்லை இந்த நினைப்பில் தான் சினிமாவுக்கு முயற்சி செய்தேன் என்று கூறினார்.

அதற்கடுத்து...என்னிடம் இருக்கும் அனைத்து கதைகளையும் எடுக்காமல் செத்து விட மாட்டேன் என்று கூறினார்... சாவின் வாயிலில் அவர் இருக்கும் பொழுது அந்த 3-ஆவது விடயம் அவரின் மனத்தை என்ன பாடு படுத்தியிருக்கும்? மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கலாம்.


தலைமுறைகள் படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் இதுவரை அமையவில்லை. பல காலங்களாக தன்னை தொப்பியுடனும், கறுப்பு கண்ணாடியுடனும் அடையாளப்படுத்திய பாலு மகேந்திரா தலைமுறைகள் படத்தில் அந்த அடையாளம் இல்லாமல் இயல்பாக தன்னை வெளிப்படுத்தி , நடித்தும் இருந்தார். இயற்கையான அடையாளமான அது தான் இறப்பின் அடையாளமும் கூட என்று அவருக்கு முன்னரே தெரிந்திருக்கக் கூடும் போல!!!

அந்தப் படத்தில் ஒரு காட்சி...ஆதி என்கின்ற சிறுவனிடம் ஒரு பாதிரியார் கேட்பார். தம்பி உன் அப்பா ஒரு ஹிந்து, அம்மா ஒரு கிறித்துவர், அப்படியென்றால் நீ யார் என்று.அந்த சிறுவன் கொஞ்சம் யோசித்து வெகுளியாக நான் ஆதி என்பான்.

அடுத்த தலைமுறைகளுக்கு மத அடையாளம் தேவையில்லை பெயர் அடையாளமே போதுமானது (சில கழிசடைகள் பெயரிலும் மத, சாதி அடையாளத்தை தேட முயலும் என்பது வேறு விடயம்!?)என்பதை இவ்வளவு எளிமையாக அதே சமயம் அழுத்தமாக எத்தனை இயக்குனர்களால் புரிய வைக்க முடியும்?????

# இயற்கையோ அல்லது கடவுளோ கொஞ்சம் காலம் தாழ்த்தியிருக்கலாம்...
அவரின் படங்கள், புகழ் தலைமுறைகள் கடந்து வாழும், பேசப்படும்.....


மதம் சீர்படும், மனிதம் மேம்படும்!!!

ஒரு பாதிரியார்... என் உறவினர். எந்த வித மதமாற்ற செயலும் புரியாமல் பெங்களூருவில் குடிசை வாழ் குழந்தைகளுக்காக இலவச கல்வியை அவரது அமைப்பின் மூலம் கொடுக்கிறார். தன் பிரசங்கத்திலும் பைபிள் வாசகங்களை இக்கால சமூக பிரச்சினையுடன் கலந்து பேசி புரிய வைப்பார்.

மற்றொரு பாதிரியார்... அப்பாவின் மாணவர். வேடந்தாங்கல் பங்கில் பணியாற்றிய பொழுது தலித் கிறித்துவர்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் வன்னிய கிறித்துவர்கள் தடுத்த பொழுது அந்த தலித் மக்களுக்காக போராடி உள்ளே நுழைய செய்தார்.

இவர்கள் இருவரும் மத நம்பிக்கை உடைய மத வாதிகள் தான். கடவுள் நம்பிக்கை உடையவர்கள் தான். ஆனால் எதார்த்த வாதிகள், கண்மூடித்தனமாக எதையும் நம்பாத பகுத்தறிவு ஆன்மீக வாதிகள்.

இவர்களை போன்று இக்காலத்திற்கு தேவையான மதக் கருத்துக்களை தற்கால பிரச்சினையுடன் தொடர்பு படுத்தி அதை தீர்க்க முயலுபவர்கள் தான் மதத்திற்கு தேவையானவர்கள்.

இவர்களால் தான் மதம் சீர்படும், மனிதம் மேம்படும்!!!

சைக்கோக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

சமீபத்திய மிஷ்கின் படத்தின் ஆரம்ப காட்சி இது... சாலையில் அடிபட்டு இருப்பவரை அந்த வ்ழியாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஒரு நபர் படம் பிடிப்பார், ஏன் என்று அவர் நண்பர் கேட்கும் பொழுது Facebook-இல் போடலாம் மச்சி, நிறைய லைக் வரும் என்பார்.

இது போன்று தான் முன்பு ஆட்டோவிற்குள் இருக்கும் ஒருவரை சரமாரியாக வெட்டுவதை மொபைலில் எடுத்து You Tube-இல் விட்டனர்.இப்பொழுது புலி தூக்கி செல்லும் நபரை மொபைலில் எடுத்து Facebook-இல் பரவ விடுகின்றனர்.

இதற்கு தங்களால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று அங்கு பதட்டமாக பரிதவிப்பவர்கள் எவ்வளவோ மேல்.

# தொழில் நுட்பமும், வளர்ச்சியும் மனிதர்களை உருவாக்கவில்லை மாறாக சைக்கோக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

நில நடுக்கமும், இறை நடுக்கமும்!!!

கிட்டத்தட்ட 11 வது முறையாக( நேற்று மதியத்திலிருந்து) நில நடுக்கத்தை இன்று காலை வரை வரை உணர்ந்துள்ளோம். நில நடுக்கம் சார்ந்த சில பதிவுகளில் கடவுளை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று சிலர் கூறுகிறார்கள்.

எனக்கு இந்த நிமிடம் வரை... கடவுளை இதற்காக பிரார்த்திக்க வேண்டும் என்று தோன்றவில்லை, இந்த எண்ணம் சில ஆத்திகர்களுக்கு கூட தோன்றியிருக்காது இதையெல்லாம் எவராலும் தடுக்க முடியாது என்ற நிதர்சனமான உண்மை அவர்களுக்கும் தெரிந்திருக்கும். ஒரு வேளை அந்த நடுக்கத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது என்னையும், என் குடும்பத்தையும் எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது, அதற்கான வழிகளை என் மகனுக்கு எப்படி புரிய வைப்பது என்பது மட்டுமே என் கண் முன்பு இருக்கிறது.

எப்படி பயம் சூழ்ந்த சூழ் நிலையிலும் உங்களால் கடவுளின் எண்ணம் வராமல் இருக்க 
முடிகிறது என்று சிலர் கேட்கிறார்கள். பய சூழ் நிலையில் மட்டும் தான் ஒருவருக்கு கடவுள் எண்ணம் வர வேண்டுமா??? அவர் அந்த சூழ் நிலையில் உனக்கு உதவினால் மட்டுமே நீ அவர் இருத்தலை உணர்வாயா ??? நம்புவாயா??? ஒரு வேளை உனக்கு உதவ வில்லையென்றால் அவரை நம்ப மாட்டாயா??? (இந்த கேள்விகள் எல்லாம் எந்த காலத்திலும் தொடர்பவை!)

சரி இது ஒரு புறம் இருக்கட்டும்....ஒரு வேளை பெரிய நடுக்கம் வந்தால் என்ன செய்வது என்று என்னுடன் Wallet மற்றும் Car Key-ஐ வைத்துக் கொண்டு படுத்திருந்தேன். என் மனைவியோ Passport மற்றும் மகனுக்கு தேவையான சில உணவுப் பொருட்களை அருகில் வைத்துக் கொண்டாள். என் மகனோ புதிதாக வாங்கிய சில விளையாட்டுப் பொருட்களை காண்பித்து இதை என்னுடன் கொண்டு வரட்டுமா என்று அப்பாவியாக கேட்டுக் கொண்டிருந்தான்!!!

பிகெவும் பிசாசும்!!!

சமீபத்தில் நான் பார்த்த படங்கள் என்பதை தாண்டி சில ஒற்றுமைகள் இந்த படங்களுக்கு உண்டு.

முதலாவது கடவுள் சார்ந்த ஒன்று, இரண்டாவது சாத்தான் சார்ந்த ஒன்று.

முதலாவது கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, ஒருவேளை அப்படி ஒன்று இருந்து அதை நீங்கள் அணுக நினைத்தால் சரியான பாதையில் செல்லுங்கள் என்றது.
இரண்டாவது பிசாசு என்று ஒன்று இருக்கிறது என்று ஆராயவில்லை , ஒரு வேளை அப்படி ஒன்று இருந்தால் அதற்கும் கடவுள் தன்மை இருக்கலாம் என்றது.

முதலாவது கடவுள் தன்மை கொண்டதாக தன்னை சித்தரித்து உலா வருபவரின் அருவெறுப்பான முகத்தை காட்டியது. இரண்டாவது பிசாசு தன்மை கொண்ட ஒரு பெண்ணின் அழகிய முகத்தை காட்டியது.

முதலாவது மதம் மற்றும் போதகர்கள் இவற்றின் மாய, போலி வலையில் சிக்காமல் கடவுளை காண சொன்னது.இரண்டாவது பயம்,பீதி இவற்றிற்கு அப்பாற்பட்ட பிசாசை காண சொன்னது.

மொத்தத்தில் பிகெ.....பிசாசு என்கின்ற ஒன்று இருந்தால் அதன் ஒரு பக்கம்.
பிசாசு.....கடவுள் என்கின்ற ஒன்று இருந்தால் அதன் ஒரு பக்கம்.

Bye Bye America!!!

கிட்டத்தட்ட 3 வருடங்கள் 3 மாதங்கள் கழித்து அமெரிக்காவிலிருந்து விடை பெறப் போகிறேன். அமெரிக்காவானாலும், அமைந்தகரையானாலும் ஒரு இடத்திலிருந்து சில நாட்கள் கழித்து நகர்ந்தால் ஒரு வெறுமை வரத்தான் செய்யும்...

இங்கு வந்ததற்கான நோக்கம் (கடன்) நிறைவேறினாலும், இங்கு வந்த பிறகு நான் ஆரம்பித்த சில விருப்பங்களை(தற்காப்பு கலை) முழுமையாக முடிக்காமல் கிளம்ப நேரிடுகிறதே என்கின்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.

விசா சிக்கல் காரணமாக இந்த 3 வருடங்கள் கழித்து முதல் முறையாக இப்பொழுது தான் சென்னை செல்லப் போகிறேன் என்கின்ற பொழுது வெறுமைகளும், வருத்தங்களும் சற்று மறையத்தான் செய்கிறது.

அமெரிக்கா எனக்கு கனவாகவோ , இலட்சியமாகவோ இருந்ததில்லை. 2009 பொருளாதார தேக்க நிலை காரணமாக அலுவலகத்தில் திட்ட பணிக்காக(Project Work) காத்திருந்த பொழுது அந்த திட்ட பணியும் கிடைத்து அதற்காக அமெரிக்காவும் செல்ல வேண்டும் என்ற பொழுது அந்த டீலிங் பிடித்து முதல் முறையாக 6 மாதம் இங்கு வந்தேன், அதற்கு பிறகு ஒன்றரை வருடம் கழித்து கடன் காரணமாக மறுமுறை நானே டீலிங் செய்து கொண்டு வந்தேன்!

அடுத்து இங்கு வரப் போகிறேனா இல்லையா என்பதை காலத்தின் கையில் ஒப்படைத்து விட்டேன் என்பதை விட , என் கையில் கொடுக்கப்பட்ட காலத்தை தீர்மானிக்க நான் பல விடயங்களை முன்னிறுத்தி சென்னை சென்ற பிறகு தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்த அமெரிக்கா பல மனிதர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது அதன் மூலமாக பல விடயங்களை , பல அனுபவங்களை கற்றுத்தந்திருக்கிறது.

என்னதான் இங்கு பல வருடங்கள் இருந்தாலும் நம் அடையாளத்துடன் , உதவி மனப்பான்மையுடன் இருக்க விரும்பும் மனிதர்கள், இங்கு வந்த சில நாட்களிலேயே நம் அடையாளத்தை மறைக்க நினைத்து மறைக்க முடியாமல் கொண்டையை வெளிக்காட்டும் மனிதர்கள். அமெரிக்கா தான் சொர்க்கம், அமெரிக்கா தான் உலகம் என்று இருக்கும் மனிதர்கள்.( இவர்களின் பார்வையில் நம் ஊர் ஒரு நரகம்!!!)

இவர்களாவது பரவாயில்லை... என்ன சார் கிளம்புறீங்களா... நான் இங்கு குடியுரிமையுடன் இருக்கிறேன், வந்து 25, 30 வருடங்கள் ஆகிவிட்டது. உங்கள் குழந்தையை வேண்டுமானால் நான் தத்து எடுத்துக் கொள்ளட்டுமா என்று ஒருவர் கேட்டாரே பார்க்கலாம். அவர் மீது எனக்கு கோவம் வரவில்லை, பரிதாபம் தான் வந்தது. அவரின் மன நிலை என்ன.... அமெரிக்காவில் வாழ்வது மட்டும் தான் வாழ்க்கை என்று நினைக்கிறாரா இல்லை பணம் இருப்பதால் எந்த உறவு முறையையும் வாங்கி விடலாம் என்று நினைக்கிறாரா.... இவர்களை போன்றோரை அமெரிக்கா காப்பாற்றட்டும், இவர்களை போன்றோரிடமிருந்து அமெரிக்கா காப்பாற்றப்படட்டும்!!!

மத வா(வியா)திகளின் வேலை!!!

பூமி நிற்கத் தான் செய்கிறது. அது நகரவில்லை. தனது பதிலை நியாயப்படுத்த அவர் ஒரு உதாரணமும் அளித்தார்.

ஒரு டம்ப்ளரை கையில் எடுத்துக் கொண்ட அவர், நாம் எல்லாம் தற்போது எங்கு உள்ளோம்? நாம் ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனாவுக்கு விமானத்தில் செல்கிறோம். இது தான் பூமி என்று வைத்துக் கொள்வோம் என அந்த டம்ப்ளரை காண்பித்தார். பூமி ஒரு பக்கம் சுற்றுகிறது என்றால் விமானம் வானிலேயே நின்று கொண்டிருந்தால் கூட சீனா விமானத்தை நோக்கி வரும்.

பூமி மறுபக்கமாக சுற்றுகிறது என்றால் விமானம் சீனாவை அடையவே முடியாது. ஏனென்றால் சீனாவும் சுற்றிக் கொண்டிருக்கும் அல்லவா. அதனால் சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்றார் சவுதி அரேபியாவைச் சேர்ந்த மத குரு ஷேக் அல் கைபாரி.

# அந்த காலத்திலிருந்தே நம்மை குழப்புவது தான் இந்த மத வா(வியா)திகளின் வேலை.
சாதாரணமாக பூமியோடு சேர்ந்து அதனை சார்ந்த வளி மண்டலமும் பூமி சுற்றும் வேகத்திலேயே சுற்றுகிறது. அதனால் தான் அந்த வளி மண்டலத்தோடு சேர்ந்து விமானமும் நகர்கிறது அதற்கான வேகத்தையும் கணக்கில் கொண்டு.இவையனைத்தும் ஒரு சேர இருப்பதால் தான் நம்மால் நாம் சேர விரும்பும் இடத்தை அடைய முடிகிறது. வளி மண்டலத்திற்கு மேலே இதே போல் இருப்பதில்லை ஏனென்றால் அங்கு வளி மண்டலமும் இல்லை, அதுவும் பூமியின் வேகத்தில் சுற்றாது மேலும் புவி ஈர்ப்பு விசையும் இல்லை.(பூமி தன்னை தானே சுற்றும் வேகம் கிட்டத்தட்ட 1040 mph , ஒரு விமானத்தின் சராசரி வேகம் 500 - 600 mph.)

நாம் கொஞ்சம் சுதாரித்துக் கொள்ளவில்லையென்றால் ஒரு காலத்தில் பூமி இந்த வேகத்தில் சுற்றினால் நாம் விழுந்து விட மாட்டோமா, பூமி உருண்டை என்றால் அதன் அடி பாகத்தில் இருப்பவர்கள் ஏன் கீழே விழாமல் இருக்கிறார்கள் என்று புவி ஈர்ப்பு விசையை உள்வாங்காமல் நம்மை முட்டாளாக்கியது போல இன்றும் நம்மை முட்டாளாக்குவதற்கு மத வியாதிக் கூட்டம் தயாராக நின்று கொண்டிருக்கிறது!!!

புத்தர் தான் இன்னமும் நமக்கு தேவை படுகிறார்

என்னைப் பொறுத்தவரை ஏன் இயேசு மற்றும் நபியிலிருந்து புத்தர் வேறுபடுகிறார், தனியாக தெரிகிறார்.

புத்தர் தன்னை எப்பொழுதும் ஒரு தீர்க்கதரிசியாகவோ, கடவுளாகவோ வெளிப்படுத்தியதில்லை. தன்னை பின்பற்றுபவர்களையும் அவ்வண்ணமே தன்னை பார்க்கவும் செய்திருக்கிறார்.

புத்தர் என்னதான் சார்வாகர் மற்றும் மாதவாச்சாரியார் பரப்பிய சார்வாக(முதல் நாத்திக கோட்பாடு) தாக்கம் கொண்டிருந்தாலும், அந்த தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டு அதே நேரம் சாதி, மூட நம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்களை எதிர்த்து கடவுள் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத ஒரு ஆன்மீக சமூக சீர்திருத்தவாதியாக வாழ்ந்திருக்கிறார்.

தண்ணீருக்காக இரத்தம் சிந்தாதீர்கள் என்று இன்றைய நிலையை அன்றே படம் பிடித்து காட்டியவர் புத்தர். வேள்விகளுக்கு பயன்படுத்தப்படும் விலங்கினங்கள் நேரடியாக சொர்க்கம் செல்லும் என்று பிராமணர்கள் கூறிய பொழுது அதை ஏன் நீங்கள் கடை பிடித்து சொர்க்கம் செல்லக் கூடாது என்று அன்றே கேள்வி கேட்டவர் புத்தர்.(மகாபாரதத்தில் தீயவன் ஒருவனுக்கு சார்வாகன் என்று பெயரிட்டதையும், நாத்திகம் பேசுபவர்கள் புத்தரை வழிபடுவதாகவும் அவர்களை இராமாயணத்தில் தாழ்மை படுத்துவதையும் இங்கு கருத்தில் கொள்க...)

நம் சமூகத்தில் தோன்றிய, நம் சமூகத்தை சீர்திருத்த முயன்ற, தனி மனித வாழ்க்கைக்கு ஏற்றம் தர முயன்ற(அதே சமயம் அந்த கருத்துக்கள் உலகம் முழுமைக்கும் பொருந்தியது.) ஒரு வேறுபட்ட / மாறுபட்ட மனிதர் புத்தர் என்கின்ற அளவில் முதலில் கூறிய அந்த இருவர்களை விட புத்தர் எனக்கு வித்தியாசமாக தெரிகிறார், புத்தர் தான் இன்னமும் நமக்கு தேவையும் படுகிறார்.

Bangalore Days!!!

காலை 6 30 - 7 மணி இருக்கும். சென்னையிலிருந்து பெங்களூர் வந்து இறங்கினேன்.தங்கும் விடுதிக்கு வந்து அதற்கு பிறகு அலுவலகம் செல்ல வேண்டும் என்கின்ற அவசரத்தில் ஒரு பேருந்தில் ஏறினேன். 20 ரூ கொடுத்து பயணச்சீட்டு பெற்றுக் கொண்டு மீதி சில்லறையை நடத்துனர் தருவார் என்று எதிர்பார்த்திருந்தேன். 10 ரூ அல்லது அதற்கு குறைவாகத்தான் அந்த பயணத் தொகை இருந்திருக்க வேண்டும், நான் என்னவோ அவருக்கு நான் கொடுத்த கடன் தொகையை திருப்பி கேட்பது போல நடத்துனர் என்னை கண்டு கொள்ளவேயில்லை. அலைச்சலில் / அவசரத்தில் நானும் கேட்காமல் இறங்கி விட்டேன். இறங்கியதும் என் மனத்திற்குள் தோன்றியது இது தான்..."இந்த கன்னடக் காரங்களே இப்படி தான் போல"

அடுத்த சில நாட்களுக்குப் பிறகு...மற்றொரு பேருந்தில் 5ரூ பயணச்சீட்டிற்கு 10ரூ கொடுத்து விட்டு மறுபடியும் ஏமாறுவதற்கு காத்திருந்தேன், ஆனால் இந்த முறை மீதி சில்லறையை கேட்டு விட வேண்டும் என்று நினைத்திருந்தேன். சற்றும் எதிர்பாராத விதமாக அவரே வந்து 5ரூ சில்லறையை கொடுத்து விட்டு சென்றார்.

இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு இள நீர் கடையில் தண்ணியா கொடுங்க என்று ஒரு இள நீரை வாங்கி குடித்தேன், குடிக்கும் பொழுது தண்ணீர் மிகவும் குறைவாக இருந்ததை உணர முடிந்தது... சரி என்று 25ரூ பணத்தை கொடுப்பதற்கு முன்பே அவர் மற்றொரு இள நீரை வெட்டி கொடுத்தார். எதற்காக.. என்று கேட்கும் முன்னரே அதுல தண்ணி கம்மியா இருந்துச்சு என்றார் கன்னட தமிழில்...எனக்கும் தெரிஞ்சது சொல்லலாம்னு நெனெச்சேன் என்றேன் தமிழ் கன்னடத்தில்...புன்னகை பரிமாற்றத்திற்கு நடுவில் 25ரூ பணத்தை கொடுத்து விட்டு வந்தேன்.

இருவரும் கன்னடர்கள் தான். இந்த சாதிக்காரன் இப்படித்தான் இருப்பான், இந்த மதக்காரன் இப்படித்தான் இருப்பான் என்பது போலத்தானே இதுவும் ஒரு மூட நம்பிக்கை அல்லது குருட்டு நம்பிக்கை. மனிதம் சாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு, இன/மொழிக்கு அப்பாற்பட்டு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது. உணர்வதற்கு தான் நம்மிடம் நேரமும் இல்லை மனமும் இல்லை!!!