உங்கள் வாழ்க்கையில் இவரை போன்றதொரு நபரை கடந்த நபராகவும் இவர் இருக்கலாம்!!!
டேய் முருகன் வரான்டா...இப்படி தான் அவரை விளிப்போம், நாங்கள் மட்டுமல்ல எங்கள் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் வரை... (அது வரை தான் எங்கள் பள்ளியில் இருந்தது.)
அப்பொழுது அவருக்கு வயது 70 இருக்கலாம். எப்பொழுதும் ஒரு குச்சியை கையில் வைத்திருப்பார். எங்கள் பள்ளியில் அவருக்கு என்ன வேலை என்றெல்லாம் அப்பொழுது நாங்கள் சிந்தித்தது இல்லை.பள்ளியில் இருந்தார், பள்ளியிலேயே தான் இருந்தார்.
நல்ல கரிய உயரமான உருவம். எப்பொழுதும் வெள்ளை சட்டை,வெள்ளை வேட்டியில் தான் இருப்பார்,அவரைப் பார்த்தாலே ஒரு வித பயம் தொற்றிக் கொள்ளும் உருவம்.அந்த பயத்திற்கு காரணம் அவரின் உருவத்தை விட, அவரின் செய்கைகளில் இருந்தது. எப்பொழுதும் உக்கிரமான கோபத்துடனும்,அதட்டலுடனும் தான் இருப்பார்.
எவரையும் அவர் அருகில் மிக நெருக்கமாக பார்த்ததில்லை. ஆசிரியர்கள் நெருக்கமாக வராததற்கு என்ன காரணம் என்று அப்பொழுது புரியவில்லை, நாங்கள் போகாததற்கு காரணம் பயம் ஒன்று தான். ஆனால் சமயத்தில் பய உணச்சி கூட கேலி செய்யும் செயலாக போய்விடும் கடவுள் போல! அது போல அவரிடம் வம்பிழுத்து ,அவர் துரத்தி வரும்பொழுது பிடிபடாமல் ஓடுவது எங்களுக்கு ஒரு வேடிக்கை/வாடிக்கை!
காலமும், சூழலும் எங்களை வேறொரு பள்ளிக்கு தள்ளியது... நானும் நண்பனும் ஒரு சந்தர்ப்பத்தில் எங்களின் பழைய பள்ளிக்கு சென்றோம். அன்று சனிக்கிழமை என்பதாக நினைவு. எங்கள் பள்ளியை பார்த்தோம், இப்பொழுது நாத்திகனாக இருக்கும் என்னுடைய பிள்ளையார் சுழியை பார்த்தேன்.அந்த சுழிக்குள் என் நினைவுகள் சுழன்றது. எங்கள் வகுப்பறைகள், சத்துணவு அறை, இறை வணக்க மேடை, தலைமை ஆசிரியர் அறை, குடி தண்ணீர் குடிக்கும் இடம், பள்ளியை போலவே வறண்டு கிடக்கும் அந்த கிணறு. அவைகள் எல்லாம் அளவில் சிறியவைகளாக தெரிந்தன... இல்லை வயதில், அனுபவத்தில் நாங்கள் வளர்ந்திருந்தோம்.
அவரையும் பார்த்தோம்... அவரே தான் முருகன்.
அருகில் சென்று "என்ன தாத்தா எப்படி இருக்கீங்க..." என்று விளித்தோம்!
"யாருப்பா..." என்றார் மிகவும் சாந்தமான குரலில்.
"இந்த ஸ்கூல்ல தான் தாத்தா படிச்சோம், சும்மா பாக்க வந்தோம்..." என்றோம்.
"அப்படியாப்பா..." என்றார். மேலும் சில விடயங்கள் பேசினோம், நினைவில் இல்லை அவரைத்தவிர...
நாங்கள் அவரிடம் மிகவும் நெருக்கமாக இருந்தோம், பயம் இல்லை, பரிதாபம் இருந்தது. அப்பொழுது அவரின் கையில் குச்சி இல்லை... இப்பொழுது நினைத்து பார்க்கிறேன்... பழைய நாட்களில் அவர் அந்த குச்சியை வைத்து எங்களை அடித்ததாகவும் நினைவில் இல்லை! மனிதர் என்ன ஒரு பொய்யான அதட்டலுடனும், கோபத்துடனும் வாழ்ந்திருக்கிறார்....ஒரு வேளை அது அவருக்கு பள்ளி நிர்வாகம் விதித்த கட்டளையாக இருக்கலாம், வயிற்றிற்காக அவரும் ஏற்றுக் கொண்ட வேடமாகவும் இருக்கலாம்.
விடை பெற்றோம்... நினைவுகளை அங்கேயே மற்றுமொருமுறை விட்டுவிட்டு.....அந்த நினைவுகளில் முருகன் தாத்தாவுக்கு முக்கியமான இடம் இருந்தது.
இப்பொழுது இங்கு அமெரிக்காவிலிருந்து அம்பத்தூரில் இருக்கும் அந்த பள்ளியையும் அங்கு இருந்த முருகன் தாத்தாவையும் நினைக்கிறேன். நம் வாழ் நாளில் நாம் சந்திக்கும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் பெயர், நினைவுகள் அப்படியே நாம் இறக்கும் வரையில் தங்கிப் போகும் காரணம் தெரியாமலேயே... முருகன் தாத்தா அப்படி ஒரு கதாபாத்திரம்.
No comments:
Post a Comment