Wednesday, July 15, 2015

மழை

மழையும் மழை சார்ந்த விடயங்களை ரசிக்கும் ரசனை மிகவும் சுவாரசியமானது.
நாம் மழையையும் ரசிப்பதில்லை, அதை சார்ந்த விடயங்களையும் ரசிப்பதில்லை... ஏன் என்று கேட்டால் , அதற்கெல்லாம் இப்பொழுது நேரமேது என்று மிகவும் சவுகரியமான ஒரு சவப் பெட்டிக்குள் அடைபட்டு கிடக்கவே நாம் பிரியப்படுகிறோம்!
ரசிப்பதால் மட்டுமே மனிதன் மதிக்கப்படுகிறான், மனிதனாகிறான்.
...
கொஞ்சம் பின்னோக்கி நானும் நீங்களும் படித்த பள்ளிக்கு செல்வோம். அந்தப் பள்ளி ஒரு அரசு பள்ளியாக இருக்க வேண்டும் , அப்பொழுது மட்டுமே அந்த ரசனை முழுமை அடையும்!
நம் பள்ளியறைக்கு கதவில்லாத வாயிலும், செங்கலின் இடைவெளியால் உருவான சன்னலும் இருக்கும். மழை அளவுக்கதிகமாக அடிக்கும் பட்சத்தில் சாரல், உள்ளே இருந்தும் நம் அனைவரையும் நனைக்கும். நாம் அனைவரும் புத்தகப் பையுடன் சன்னலுக்கு எதிர்புறம் ஒரு சேர குவிந்திருப்போம். நம் கவனங்கள் மழையும் மழை சார்ந்த விடயங்களில் பெரும் பகுதியும், மிச்ச சொச்ச கவனம் பாடத்தில் ஒன்றுபடாமல் அன்றைய பொழுது கழியும்.

மழை நம்மை நனைக்கும், நம்மை நம்முடன் இணைக்கும்.

மழை என்றாலே யாராவது ஒன்றிரண்டு ஆசிரியர்கள் வர மாட்டார்கள், அப்பொழுது இரு வகுப்புகளை ஒன்றிணைத்து பாடம் நடத்துவர், அந்த சமயங்களில் எல்லாம் நம் ராஜாங்கம் தான். ஒரு மாணவன் பேசினால், சத்தம் போட்டால் தண்டனை கொடுக்கலாம், ஒட்டு மொத்தமாக அனைவரும் சத்தம் போட்டால் என்ன செய்ய முடியும்? வெளியிலும் அனுப்ப முடியாது, அப்படி அனுப்பினால்... அந்த மழையில் அதை விட சிறந்த தண்டனையை எவரும் நமக்கு கொடுக்கவும் முடியாது!
மணி அடிக்கும் திசையை நோக்கி காத்துக் கொண்டிருப்போம்... நிச்சயமாக பள்ளி முடியும் முன்னரே மணி அடிப்பார்கள்(long bell)... மழையையும் மழை சார்ந்த விடயங்களையும் ரசித்துக் கொண்டே வீட்டிற்கு சீக்கிரம் சென்று விடலாம், வீட்டில் அம்மா தேனீரும் , வடை ,பஜ்ஜி செய்து வைத்திருக்கலாம் என்கின்ற ஆசையுடன் பயணப்படுவோம், நாம் விளையாட காகிதக் கப்பலும், ரயில் பூச்சியும் காத்திருக்கும் என்கின்ற ஆவலுடனும்...

சரி... மறுபடியும் சவப் பெட்டிக்குள் போய் அடைபடுவோம்!?

No comments: