1997 சுதந்திரப் பொன்விழா ஆண்டு. அப்பொழுது நான் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதே சுதந்திரம் பற்றிய எனது பார்வை மாறுபட்டிருந்தது ஆனால் அதை சரியாக என்னால் வெளிப்படுத்த முடியா வண்ணம் என் வயதும், அனுபவமும் இருந்தது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி பள்ளி கொடியேற்றும் நிகழ்ச்சியில் சுதந்திரம் பற்றிய எனது பார்வையை பதிவு செய்ய விரும்பினேன்.....என் அப்பாவின் நண்பர் சுபவீயிடம் நான் பேசுவதற்கு உரிய குறிப்புகளை தருமாறு கேட்டேன். அந்த குறிப்புகளை வைத்து நான் பேசிய சில வரிகள் இன்னமும் மனத்தில் அப்படியே இருக்கிறது ஏனென்றால் நாம் இன்னமும் அந்தக் காரணங்களுக்கு விடை கிடைக்காமல் தான் இருக்கிறோம்.....
பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அங்கிருந்த பலரை கடுப்பேற்றிய அந்த வரிகள்...
"சுதந்திரப் பொன்விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் தான் உத்திரப் பிரதேசத்தில் அதுலா தேவி என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண்ணின் கணவர் கோயிலிக்குள் சென்ற காரணத்தால் அவரை அடித்து உதைத்து அந்தப் பெண்ணை மானபங்கப் படுத்திய கொடுமையும் நடக்கிறது.
கே.ஆர். நாராயணன் என்ற தாழ்த்தப்பட்டவரை குடியரசுத்தலைவராக்கி பெருமை படும் இதே நேரத்தில் தான் மேற் குறிப்பிட்ட கொடுமைகளும் நடக்கிறது...ஏன்...ஆர்.வெங்கட்ராமன் வரை காஞ்சி சங்கர மடத்தில் இருந்த சிவப்பு கம்பள வரவேற்பு கே.ஆர் நாராயணன் குடியரசுத் தலைவரானது முதல் அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த வேறுபாடுகளை வைத்துக் கொண்டு சுதந்திரத்தை நாம் கொண்டாட முடியாது"
# வேறுபாடுகள் தொடர்கின்றன...
சுதந்திரம் கிடைத்தவர்களுக்கு வாழ்த்துகள்...அது தடுக்கப் பெற்றவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும், வருத்தங்களும்... உண்மையான சமூக விடுதலையை அனைவரும் பெறுவதற்கு வாழ்த்துகளும்!!!
No comments:
Post a Comment