Thursday, May 16, 2013

போராட்டம் தொடரட்டும், போய் சேரும் இடம் வரை!!!



இவர்களுக்கு சைட் அடிக்கவும் தெரியும்,


சாட்டையால் அடிக்கவும் தெரியும்.


விசிலடிச்சான் குஞ்சுகள் இப்பொழுது

வீரியமெடுத்த பிஞ்சுகளாக...


தோரணம் கட்டிய கரங்களில்

தமிழீழ பதாகைகள்.


நடிகர்களுக்கு கட்-அவுட் வைத்ததும் இவர்களே...

அரசியல்வாதிகளுக்கு கெட்-அவுட் கூறியதும் இவர்களே...



விடுமுறைக்கு விடுமுறை அளித்தனர்.


தூங்கியும் உண்டும் களிக்கும் விடுமுறையை

தூக்கம் தொலைத்த உறவுகளுக்காக உண்ணாமல் கழித்தனர்.


கவிதை மட்டுமே எழுத முடியும்.

சிலரால் தான் கூட விதையும் தூவ முடியும்!


புதைக்கப்பட்டது உடல்கள் தான்

அவர்கள் ஊட்டிய உணர்வுகள் இன்னமும் உயிர்ப்போடு இருக்கின்றன

இவர்களின் மத்தியில்...


உண்டு கொழுத்த சில பிண்டங்கள் உயிரோடு மட்டும் வாழும் நிலையில்

உணவை மறுத்து சில உயிர்கள் உணர்வோடு வாழ்கின்றன.


அடுத்த வேளை சாப்பாட்டிற்கே பசி எடுக்கும்,

ஆறு வேளைக்கு பிறகும் அசராமல் இருந்தது எப்படி?


பசியும் ஓர் உணர்வு தான்...

பலருக்கு வயிற்றில் பசி, சிலருக்கு வாழ்க்கையில் பசி... அது விடுதலைப் பசி.


உங்களின் உடல் குடலை சுருக்கி,

உணர்வுக் கடலை பெருக்கி விட்டீர்கள்...


வீட்டை மீட்டெடுக்க இவர்கள் போராடவில்லை,

நமக்கான நாட்டை மீட்டெடுக்க போராடுகிறார்கள்!


அன்னா ஹசாரேக்கு கொடி பிடித்த மாணவர்களே, நடிகர்களே

நம் அண்ணன், தம்பியின் பக்கமும் திரும்புங்கள்.



மாணவர்களே நீங்கள் தனியாக திணறவில்லை

உங்களின் பின்னால் அணியாக திரண்டிருக்கிறோம்.


தமிழ் ஈழம் வென்றெடுக்க நீங்கள் உண்ணவில்லை...

தமிழ் தாகம் தோற்குமென நாங்கள் எண்ணவில்லை.





Monday, May 13, 2013

மாட்டுக்கறி தின்னும் சாமிகள்

எலும்பில்லாத கறி என்று என் அம்மா வழி மாமாவால் அறிமுகப்படுத்தப்பட்டு பல வருடங்கள் பிறகு நான் அதுவரை சுவைத்துக் கொண்டிருந்தது மாட்டுக் கறி என்று தெரிந்தது... அதற்கு பிறகு என்ன... அதுவே பழக்கமாகிவிட்டது!!!



"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்..." இந்த பாரதியின் வரியை இந்த தலைப்புக்கேற்றவாறு மாற்றி பாட சொன்னால் பின்வருமாறு தான் பாடுவேன்.

"யாம் சுவைத்த கறிகளிலே மாட்டின் கறி போல் சுவையானதெங்கும் காணோம்!!!"


கோழி,ஆடு,பன்றி, வான் கோழி,காடை,மீன், நண்டு,இறால், முயல் என்று ஒரு கை (ஒரு வாய் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்!)பார்த்தாகிவிட்டது, மாட்டின் சுவைக்கு ஈடு இணை இல்லை.
(பாம்பை வலை வீசி தேடிக்கொண்டிருக்கிறேன், சீக்கிரம் என் வாய் பொந்தில் அகப்படும்!)


இங்கு அமெரிக்காவிற்கு வந்த புதிதில் ஒரு ஆர்வக் கோளாறில் அலுவலக உணவகத்தில் மாட்டின் கறித்துண்டை சாப்பிட வாங்கினேன், பச்சையாக ஒரு துண்டை எடுத்து வாணலியில் 3 முதல் 5 நிமிடம் மட்டும் மட்டும் வேக வைத்துக் கொடுத்தான்.(மாட்டுக் கறி மற்ற கறி போன்று இல்லை நன்றாக வேக வைக்க வேண்டும்,அதனால் Cook it Well என்று கூறினேன், அது அவனுக்கு புரியவில்லை,Cook செய்து தானே தருகிறோம் என்று அவன் நினைத்திருக்கக் கூடும், பின்பு தான் தெரிந்து கொண்டேன் அதை நாம் Well Done என்று சொல்ல வேண்டும் என்று!),டாலர் கொடுத்து வாங்கிவிட்டொமே என்று மிகவும் வருத்திக் கொண்டு சாப்பிட்டு வேறு வழியின்றி மீதமுள்ளதை தூக்கி போட்டேன். அமெரிக்காவில் மாட்டுக் கறியை Beef என்று சொல்ல மாட்டார்கள், Steak என்று தான் சொல்வார்கள். Steak Burger சாப்பிட முடிந்ததாக இருக்கும்.



அதே நேரத்தில் தாய் அல்லது வியட்னாம் Beef Fried Rice வித்தியாசமானதாகவும் , சுவையானதாகவும் இருக்கும். ஆனால் நம்மூர் Beef உணவு வகைகளை அடித்துக் கொள்ள முடியாது அது Gravy ஆக இருக்கட்டும், Fry ஆக இருக்கட்டும், முக்கியமாக தேங்காய் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் கேரள வகை Beef Fry அருமையாக இருக்கும்! (என்ன பொறுமையாக கொழுப்பை எடுத்து நன்றாக வேக வைக்க வேண்டும்...)


சிறு வயதில் மாட்டுக்கறியை என் அம்மாவோ இல்லை ஆச்சியோ தயாரித்தால் குதூகலமே பிறந்துவிடும், மாட்டுக்கறி சாப்பிட போகிறேன் என்று கத்த ஆரம்பித்துவிடுவேன்...என் ஆச்சியும், அம்மாவும் டேய் கத்தாதே, பக்கத்துலெ கேக்க போறாங்க என்பார்கள், கேட்டா கொஞ்சம் கொடுக்கலாமே என்று நக்கலடிப்பேன். தப்பா நெனைப்பாங்கடா என்பார்கள். அதன் காரணம் எனக்கு புலப்பட வெகுகாலம் பிடித்தது, அந்த காரணம் புலப்பட்டவுடன் அதை வெளிப்ப்டையாக சொல்லிக் கொள்வதில் எனக்குள் பெருமை பிறந்தது.


உழைக்கும் மக்கள் அதிகமாக சாப்பிடும் ,மிக சாதாரணமாக கிடைக்கும், பிற கறிகளை விட மலிவான ஆனால் சக்தி மிகுத்த உணவு என்பதில் அதன் மீது மதிப்பும் பிறந்தது.


உங்க சாமியவே நாங்க சாப்பிடுறோம்யா... என்று பெரியாரின் நக்கல், நையாண்டி கருத்துக்களை கேட்க ஆரம்பித்த பொழுது ஒரு இனம் புரியாத கர்வமும் தலைக்கேறியது!?


மாட்டுக் கறி சாப்பிட்டால் உடல் வலுப்பெறுவது சரி, ஆனால் மனதும்,உடலும் மாட்டைப் போன்று கரடுமுரடாகும் என்று ஒரு கருத்து நிலவுவதுண்டு, (கோழி சாப்பிடுறவன் பறப்பானா, மீன் சாப்பிடுறவன் நீச்சல் கற்றுக் கொள்ளாமல் நீந்துவானா என்றெல்லாம் கேட்கப்படாது!!!) இதை ஒரு வாதத்துக்கு ஒத்துக் கொண்டால் கூட... நாங்கள் சைவம் தான் உண்ணுவோம்,உயிர்களை கொல்ல மாட்டோம் என்று சக மனிதர்களை மதிக்காதவர்களை விட, சூதும், வாதும் கொண்டு உலாவருபவர்களை விட, மனத்தில் வஞ்சம் எதுவும் இல்லாமல் பழகும், கோபத்தை முகத்திற்கு எதிரே காட்டும் கரடு முரடானவர்கள் என இந்த சமூகத்தால் குறிப்பிடப்படும் இவர்கள் உயர்ந்தவர்கள், மேன்மையானவர்கள், மென்மையானவர்கள்.


மாட்டுக்கறி தின்னும் சாமிகள் இவர்கள்!!!


ஒரு முறை சுவைத்து பாருங்கள், விட மாட்டீர்கள் :-)