Thursday, March 7, 2013

சரஸ்வதி டீச்சர்

என் வாழ்வின் முதல் அத்தியாயத்தில் பயணித்த அவர்களும், அவர்கள் வாழ்க்கையின் இறுதி அத்தியாயத்தில் பயணித்த நானும்!!!

நாவில் குடி இருக்கும் சரஸ்வதியை பற்றியெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக நெஞ்சில் நிறைந்திருக்கும் இந்த சரஸ்வதியை என் வாழ் நாள் முழுக்க மறக்க முடியாது.

என்ன தான் அம்மாவின் மூலம் தமிழ் எனக்கு அறிமுகம் ஆனாலும் அது என் அகத்தினுள் நுழைந்தது இவர்களின் மூலமே...

LKG,UKG போன்ற KG-க்களை எல்லாம் நான் தூக்கியதே இல்லை, இன்னும் சொல்லப் போனால் அவையெல்லாம் என்னவென்றே எனக்கு அப்பொழுது தெரியாது. பள்ளிப்படிப்பு ஆரம்பித்தது முதலாம் வகுப்பிலிருந்து தமிழ் வழிக் கல்வியில் தான், அப்பொழுது எனக்கு வயது 5. படித்த பள்ளி ஸ்ரீ மகா கணேசா வித்தியா சாலா நடு நிலை பள்ளி, அம்பத்தூர். இப்பொழுது அப்படி ஒரு பள்ளி இருந்ததற்கான அடையாளத்தை கூட தேடித்தான் பெற முடியும்.



என் அம்மா என்னை பள்ளியில் விட்டுச் செல்லும் ஒவ்வொரு காலையிலும் என் கண்ணை நனைக்கும் கண்ணீருக்கும்,இதயத்தில் கனக்கும் சோகத்திற்கும் வடிகாலாக இருந்தது எனக்கு அப்பொழுது பரிச்சயமான இந்த இரண்டாவது அம்மா தான்.

என் முதல் வகுப்பின் ஆசிரியர் சரஸ்வதி , பிராமண சமூகத்தை சேர்ந்தவர்,பிறரிடம் பழகுவதில் எந்தவித ஆச்சாரமும் பார்க்காத பிராமணர். திருமணமாகாதவர் ஆனால் குழந்தைகள் ஏராளம் நான் உட்பட...ஆம் அவர் பெற்றெடுக்காத குழந்தைகள், அவர் பெயர் சொல்லும் குழந்தைகள். ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் மாறிக் கொண்டே இருக்கும்!

என் தமிழ் ,என் பேச்சு, என் எழுத்து அனைத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டது அவர் தான். அவரின் நினைவுகளை அசை போடும் ஒவ்வொரு சமயத்திலும் ஏதோ ஒரு சுமை வந்து இறங்குவது போன்றதொரு உணர்வு என்னை பிடித்து ஆட்கொள்ளும். சுகமான சுமை!   தினமும் அவர்கள் வீட்டில் சமைத்த காலை உணவில் சிறிதளவை எங்கள் எல்லோருக்கும் கொஞ்சம் பகிர்வது, கை நீள குச்சி வைத்திருந்தாலும் அதன் மூலம் ஒரு அடி கூட எங்கள் மீது படாமல் இருந்தது, அவர்களின் வகுப்பில் நடந்த மாறு வேட போட்டியில் புலி வேடமிட்டது,ஒன்றாம் வகுப்பை கடந்த பின்னரும் நேரம் கிடைக்குப்போதெல்லாம் வணக்கம் சொல்லி அவர்களின் வகுப்பை கடந்து செல்வது.....இவை மட்டுமே என் நினைவில் இருக்கின்றன மற்றவையெல்லாம் கால ஓட்டத்தில் கரைந்து விட்டன.

6 வது வகுப்பிற்காக நான் வேறு பள்ளிக்கு செல்லும் அதே கால கட்டத்தில் அவர்களும் பணியிலிருந்து முழு ஓய்வு பெற்றார் என்பதை கேள்விப்பட்டேன்,அதற்கு பிறகு அவர்களை பார்க்க வாய்ப்பே கிடைக்கவில்லை,மறுபடியும் பார்ப்பேன் என்றும் நினைக்கவில்லை மீண்டும் அவர்களை பார்க்கும் வரை...   மதிய வேளை, கல்லூரியிலிருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். பேருந்திலிருந்து இறங்கி வீட்டை நோக்கி நடந்து செல்கையில் அவர்களை மீண்டும் சந்தித்தேன். எனக்கு எதிராக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்ததும் மீண்டும் 12 வருடம் பின்னோக்கி சென்றதை போன்றதொரு உணர்வு. அவர்களின் வயது, நடை, உடை, பாவனைகளில் எந்த மாற்றத்தையும் நான் காணவில்லை, அவர்கள் அப்படியே தான் இருந்தார்கள்.

அவர்களிடம் சென்று, "எப்படியிருக்கீங்க டீச்சர்?" என்றேன்.

"??????????????"

"மில்டன் டீச்சர்,உங்களிடம் ஒண்ணாம் வகுப்பு படித்தேனே" என்றேன்.

":-):-):-):-):-)"

ஆம். இப்பொழுது அவர்கள் முகத்தில் கேள்விக் கணைகள் புன்னைகைகளாக மாறி இருந்தன. நான் அவர்களுக்கு தனித்தன்மை வாய்ந்த மாணவன் தான், என்னை மறக்காமல் இருக்கிறார்களே என்பதை நினைத்து எனக்கும் மகிழ்ச்சி.

என்னை விசாரித்தார்கள், அம்மாவை விசாரித்தார்கள். வீட்டிற்கு வரச் சொன்னார்கள்.

நானும்,அம்மாவும் சில முறை அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தோம்,உபசரிப்பதிலும், உறவாடுவதிலும் அவர்கள் மாறவேயில்லை. என்னை பற்றி அவர்கள் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லும்போதெல்லாம் இவன் என் மாணவன் இப்பொழுது இந்தக் கல்லூரியில் படிக்கிறான் என்று பெருமை பொங்க சொல்வார்கள்.அப்பொழுதெல்லாம் அவர்களிடம் இருந்த குழந்தை தனத்தை ரசிப்பேன், அவர்கள் எப்பொழுதுமே குழந்தை தான். நான் குழந்தையாக அவர்களிடம் படித்த பொழுது அதை ரசிக்கும் பக்குவம் அப்பொழுது எனக்கில்லை போலும்.

மறுபடியும் காலம் ஓடத் தொடங்கியது. அவர்கள் அந்த வீட்டிலிருந்து வேறு வீட்டிற்கு மாறினார்கள். புதிய வீட்டின் முகவரியையும் எங்களிடம் கொடுத்தார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் அம்மாவிடம் "டீச்சரை பார்க்க போகலாம்" என்றேன்.

"இல்ல அவங்க எறந்துட்டாங்க..." என்று அம்மா சொன்னார்கள்.

அதிர்ச்சியை விட எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

"ஏன் என்கிட்ட சொல்லலமா?" என்று கேட்டேன்.

"எனக்கே தெரியாதுடா, அவங்க வீட்ல வேல பாக்குற அம்மா தான் சொன்னாங்க, நான் கூட போய் பாக்கல..." என்றார்கள்.

என் முதிர்ச்சியின் மீது என் அம்மாவிற்கு சந்தேகம் வந்திருக்கலாம்.அதனால் சொல்லாமல் இருந்திருக்கலாம்.

"சரி எதுனால எறந்தார்கள்?" என்று கேட்டேன்.

"வாயிலெ கேன்சராம்..." என்றார்கள்.

என்னால் நம்பவே முடியவில்லை. என்னைப் போன்ற பல பேருக்கு பாடம் சொல்லிக்கொடுத்த அவர்களின் வாயிலா இந்த புற்று நோய் பற்று கொள்ள வேண்டும்.

கிட்டத்தட்ட 12 வருட காலம் ஓடோடி விட்டது...எத்தனையோ ஆசிரியர்களை கடந்திருக்கிறேன், அவர்கள் மட்டும் நினைவில் என்றும் நிழலாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் அவர்கள் எனக்கு ஒரு ஆசிரியராக மட்டும் இருக்கவில்லை...சமயத்தில் அம்மாவாக இருந்தார்கள், சமயத்தில் அப்பாவாகவும் இருந்தார்கள்,

பின்குறிப்பு :- இந்தப் படத்தில் உள்ளது என் பள்ளியும் அல்ல, அவர்களும் என் சரஸ்வதி டீச்சரும் அல்ல...அவர்களையொத்த படங்கள். அந்த காலத்தில் என்னிடம் புகைப்படக் கருவியும் இல்லை வாடகைக்கு வாங்கி எடுக்கும் யோசனையும் வரவில்லை... இப்பொழுது எடுக்கலாம் என்றால் அவர்களே என்னிடம் இல்லை!

No comments: