Sunday, February 3, 2013

இன்றைய அனுபவம் (12.1.2013) - மத போதனையும் மரண தண்டனையும்

23.1.1999.

1965 முதல் ஒரிசா மானிலம் மனோகர்பூரில் தொழு நோயாளிகளுக்கு சேவை செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதிரியார் கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் (வயது 58),அவரது மகன்கள் பிலிப்ஸ் (வயது 9)மற்றும் திமோத்தி (வயது 6)ஆகியோர் தங்கள் சேவைகளை முடித்து விட்டு இரவு நேரத்தில் ஜீப்பில் தூங்கிக்கொண்டிருந்த போது ஒரு கூட்டம் அவர்களை ஜீப்போடு கொளுத்தி தமது வெறியை தீர்த்துக் கொண்டது. தாங்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டோம் என்கின்ற குற்றச்சாட்டை மறுத்ததோடு,2004 வரை தொழு நோயாளிகளுக்கான பணியை தொடர்ந்து செய்து அதன் பிறகு தான் ஆஸ்திரேலியா திரும்பினார் ஸ்டெய்ன்ஸின் மனைவியான கிளேடியஸ் ஸ்டெயின்ஸ்.



இந்த குற்றத்திற்காக கீழ் நீதிமன்றம் பஜ்ரங்தள் கூட்டத்தலைவன் தாராசிங் மற்றும் 11 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனை உய்ர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்த விடயம் பற்றிய இருவரின் பேச்சு கவனிக்கத்தக்கது, ஒருவர் கிளேடியஸ் ஸ்டெயின்ஸ் மற்றொருவர் பஜ்ரங்தள் அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் சுரேந்திர ஜெயின். முதலாமவரின் கருத்து மனித நேயத்தின் மணிமகுடமாக திகழ்ந்தது, இரண்டாமவரின் கருத்தோ மனித நேயத்தின் ஆணிவேரையே தகர்த்தது.

கிளேடியஸ் இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு கொடுத்து விடுதலை அளிக்க கோரினார். சுரேந்திர ஜெயினோ இந்துக்களை அழிக்க நினைப்பவர்கள் எங்களை நினைத்துக் கதி கலங்க வேண்டும். அவர்கள் எங்களை நினைத்துப் பீதி அடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று நச்சை கக்கினார்.

இதில் கொடுமையான விடயம் என்னவென்றால் ஹிந்து அடிப்படைவாதிகளில் பலர் சுரேந்திர ஜெயினின் கருத்தையே பிரதிபலித்தார்கள். உண்மையான தொண்டூழியம் மற்றும் சேவையில் ஈடுபட்டவர்களை மதமாற்றத்தில் ஈடுபடுவதாக இந்த சமூகம் சித்தரித்தது, அவர்களுக்கு இந்த தண்டனை அவசியம் என்று ஈவு இரக்கமின்றி அங்கீகரித்தது. அன்னை தெரசா போன்றவர்கள் எப்படி இந்த சமூகத்திலிருந்து தப்பித்தார்கள் என்று நினைத்து பார்க்க கூட முடியவில்லை. வியாபாரத்திற்காக நடத்தப்படும் கட்டாய மதமாற்றத்தை நாம் என்னாளும் அங்கீகரிக்கவில்லை அதே சமயம் உங்களின் மதம் அன்பையும்,சாதி பேதமற்ற சமத்துவத்தையும் போதிக்கும் பட்சத்தில் அந்த மதத்தை யார் வந்தாலும் அசைக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை என்பதையும் நாம் மறுப்பதிற்கில்லை.

சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம்...

12.1.2013.

சனிக்கிழமை காலை 11 மணி இருக்கலாம். வீட்டை தட்டும் கதவு சத்தம் கேட்டு திறந்தேன், என் வயதையொத்த இருவர் வாசலில் நின்று கொண்டிருந்தனர், பார்த்த மாத்திரத்திலேயே என்னால் அவர்களை வட ஹிந்தியர்கள் என்று அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அவர்களை வரவேற்று அறிமுகம் செய்து கொண்ட பிறகு அவர்கள் வந்ததற்கான காரணத்தை கேட்டேன். என் கேள்விக்கான அவர்களின் பதில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

இந்த பகுதியில் ஹிந்தியர்கள் யாரென்று அடையாளம் கண்டறிந்து அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு உரையாடிச் செல்வோம் என்றனர். சரி உங்களின் நோக்கம் என்ன, உங்களுக்கென்று அமைப்பென்று ஏதாவது இருக்கிறதா, அப்படி இருந்தால் அதன் மூலம் என்னவெல்லாம் செய்வீர்கள் என்று கேட்டேன்.

அப்படி எல்லாம் குறிப்பாக எதுவும் இல்லை என்றார்கள். என்ன தான் எங்கள் குடும்பம் மற்றும் தலைமுறை கிறித்துவ மதத்தில் இருந்தாலும் எனக்கு இந்த சாதி,மதம் மற்றும் கடவுள் போன்றவற்றில் ஈடுபாடு இல்லை எனவும்,அவர்களால் நமக்கு ஏதாவது பயன்,பலன் கிடைக்கட்டுமே என்கின்ற அடிப்படையில் நாங்கள் எங்களால் முடிந்த அளவு இந்த சமூகத்திற்கு செய்யும் சில விடயங்கள் பற்றியும் முக்கியமாக இப்பொழுது நாங்கள் பணம் திரட்டிக் கொண்டிருக்கும் CHILD இல்ல கட்டுமானப் பணி பற்றியும், எங்களின் இணையத்தளம் பற்றியும் நாங்கள் செய்யும் சில செயல்களுக்கு உங்களால் முடிந்த உதவியை நீங்கள் செய்யலாம் என்றும் கூறினேன்.

சிறிது நேரம் பேசிவிட்டு அவர்களின் நோக்கத்தை அறிந்து கொள்ளாமலேயே அவர்களிடமிருந்து விடை பெற்றேன், பிறகு இங்கு அமெரிக்காவில் வெகு நாளாக இருக்கும் நண்பர் ஒருவரிடம் அவர்களை பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.என் நண்பரின் அளித்த விளக்கம் அவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

ஹிந்தியர்கள் மட்டுமல்லாது அவர்கள் அமெரிக்கர் வீட்டுக்கும் செல்வார்கள் என்றும், பகவத் கீதை பற்றியும் ஹிந்து மதம் பற்றியும் நேரடியான மத போதனை மற்றும் மத பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்றும் , ஒரு வேளை என்னைப்பற்றி நான் தெளிவாக நான் அவர்களிடம் முன்பே தெரிவித்து விட்டமையால் என்னிடம் அவர்களின் நோக்கம் பற்றி சொல்லாமல் சென்றிருக்கக் கூடும் என்றும் அந்த நண்பர் என்னிடம் கூறினார்.

அவர்களை நான் சந்தித்த 2 வாரம் கழித்து ஸ்டெயின்ஸ் மற்றும் அவரின் மகன்கள் கொல்லப்பட்ட 14 ஆம் வருட நினைவு நாள் வந்தது.

No comments: