Sunday, December 8, 2013

புரிதல்களுக்காக...

தம்மை தமிழர்களாக முழுமையாக நினைத்து சாதியிலிருந்து தங்களை தனிமைப்படுத்த விரும்பும் ஆனால் அதே சமயம் மதம் மற்றும் கடவுள் நம்பிக்கை கொண்டிருப்பவர்களின் 
புரிதல்களுக்காக...

1.ஏன் நாத்திகர்கள் ஹிந்து மதத்தை மட்டும் எதிர்க்கிறார்கள் ? - 

பெரியாரிய (அண்ணலும் அடக்கம்) நாத்திக வாதம் சாதியை அடிப்படையாகக் கொண்டது, மேலை நாடுகளைப் போன்று பொருள் - கருத்து முதல் வாத எதிர்ப்பு அல்ல, அதனால் ஹிந்து (அதாவது சமஸ்கிருத, வேத, புராண, இதிகாசங்களை கொண்ட ஆரிய அல்லது பார்ப்பனிய அல்லது வர்ணாசிரம வாழ்க்கை முறை) மதத்தை விமர்சிப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது...

2.பிற மதங்களில் சாதிப்பிரிவுகள் இல்லையா என்ன??? - 

இருக்கிறது... கிறித்துவத்தில் கிறித்துவ வேளாளர், கிறித்துவ வன்னியர் என்றும் இருக்கிறது.... ஆனால் இதற்கு மூலம் ஹிந்து மதம் தானே, மதம் மாறியவர்கள் சாதியை விட்டு மாறாததால் ஏற்பட்டவை அவை, மற்றபடி கத்தோலிக்க - பிராட்டஸ்டண்ட், ஷியா - சன்னி என்பவை வழிப்பாட்டின் அடிப்படையில் ஏற்பட்ட நேர்க்கோட்டு பிரிவுகள், உயர்வு - தாழ்வின் அடிப்படையில் தீண்டாமைக்கு வழிகோலிய செங்குத்து பேதங்கள் அல்ல.

3.வர்ணாசிரமம் தான் சாதிப் பிரிவுகளுக்கு மூலம் என்று எப்படி கூற முடியும்? மேலும் மனுதர்மம் என்பது ஹிந்து தர்மத்துக்குள் அடங்கும் என்றும் கூற முடியாதெ... - 
வர்ணாசிரமம் தான் ஆரம்ப கட்ட சாதிப் பிரிவுகளுக்கு மூலம், அதற்கு பிறகு சாதி கிளைகளாக பரவி விரவியதற்கு அந்தந்த சாதிகளின் பரிணாம வளர்ச்சி காரணமாக இருக்கலாம்.

வர்ணாசிரமம் எப்படி சாதிப் பிரிவுகளுக்கு மூலம்???
1.மருத்துவன் என்பது ஒரு சாதியாக இப்பொழுது இணைக்கப்பட்டிருக்கிறது, வர்ணாசிரம பிரிவுக்கும் தொழில் முறை பிரிவுகள் காரணம் என்பதை இங்கு கருத்திக் கொள்க.
2.வர்ணாசிரம பிரிவுகளில் முதலாவதாக சொல்லப்படும் பிராமண என்கின்ற வர்ணம் இன்றும் வழக்கில் உள்ளதையும், அதற்கு கீழ் அய்யர், அய்யங்கார் என்கின்ற சாதிகள் பரிணமித்ததையும் கருத்தில் கொள்க. ஷத்திரிய குல வன்னியர் என்று வர்ண வழி சாதி உருவாக்கமும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
மனு ஹிந்து தரமத்துள் அடங்காது என்பவர்கள், அதை கொளுத்தி போடலாமே... மனுவை பேசும் ஹிந்து மதவாதிகளை விமர்சிக்க கிளம்பலாமே...


என்ன தான் மனுதர்மம் சாதி பிரிவினையையும் அதற்கான பணிகளையும், தண்டனைகளையும் கூறினாலும்...' நால் வர்ணத்தையும் நானே படைத்தேன்' என்ற கீத வார்த்தையையும், ரிக் வேதத்தில் புருஷ சூக்தம் 'ஆதி புருஷனின்/ கடவுளின் முகம் பிராமணனாக ஆயிற்று, கைகள் க்ஷத்திரியனாக ஆயின, தொடைகள் வைசியனாக ஆயின அவரது பாதங்களிலிருந்து சூத்திரன் தோன்றினான்.' என்று வர்ண பாகுபாட்டை கூறுவதையும் கருத்தில் கொள்க.

Friday, August 30, 2013

அவனை மறுபடியும் பார்ப்பேன் என்கின்ற சிந்தனையில், ஏக்கத்தில்..... நானும், அவனின் நினைவுகளும்.

படித்தவர்களை பற்றி எழுதுவதை விட நாம் பழகியவர்களை பற்றி எழுதுவது சுவாரசியமானது மட்டுமல்ல சமூகத்திற்கு தேவையானதும் கூட...

எனக்கும் அவனுக்குமான அறிமுகம் ஆறாவது வகுப்பில் ஏற்பட்டது. அவனின் சுருட்டை முடியும், துரு துரு நடையும் என்னை வெகுவாக கவர்ந்தது.கணக்கு பாடத்தில் எனக்கு கிலி ஏற்படுத்திய புலி அவன்..

மிகவும் ஏழ்மையான குடும்பம். 2 தம்பிகள்... அப்பா ஒரு தொழிற்சாலையில் துப்புரவு தொழிலாளி. வகுப்பில் ஒவ்வொரு முறையும் உன் பெயர் என்ன, அப்பா என்ன செய்கிறார் என்று ஆசிரியர்கள் கேட்கும் பொழுது, அவன் முறை வரும் போதெல்லாம் என் மனம் வலிக்கும்...சில மாணவர்கள் சிரிப்பார்கள்...அந்த சமயத்தில் அவன் முகத்தை பார்த்திருக்கிறேன், எந்த விதமான சலனமும், சோகமும் இருக்காது , எப்பொழுதும் போல மெல்லிய புன்னகையுடன் இருப்பான்...மதியம் சத்துணவு வாங்குவதற்காக செல்லும் பொழுது கூட அவன் பிறரைப் போல தன்னை மறைத்து சென்றதில்லை, அவனின் துணிவும், நம்பிக்கையும் என்னை வசீகரித்தது. பல முறை என் மதிய உணவை இருவரும் பகிர்ந்து அவன் வாங்கும் சத்துணவை நானும் ருசித்திருக்கிறேன்... அவனின் மகிழ்ச்சியை ரசித்திருக்கிறேன்,

அவன் வீட்டிற்கு அடிக்கடி சென்று உணவருந்தும் நேரத்திலும்... அவன் என் வீட்டிற்கு வந்து உணவருந்தும் நேரத்திலும் எங்களை மறந்திருக்கிறோம்.

நாங்கள் பழகிய ஆரம்பத்திலிருந்து பகிர்ந்து கொண்டது எங்கள் நட்பை மட்டுமல்ல கேவலமாக கிறுக்கி தள்ளும் எங்கள் கதை, கவிதைகளையும் தான்...என் கிறுக்கல்களை அவன் பாராட்டும் அழகு இருக்கிறதே...
ஆறாம் வகுப்பில் காதலும், கவிதையும் தெரியாத அந்த வயதில் கவிதை போல நான் கிறுக்கிய ஒரு காதல் கவிதையை வகுப்பாசிரியையிடம் காண்பித்ததும் அவன் தான்....அதை கூட கவிதை என அங்கீகரித்த என் எழுத்தின் முதல் ரசிகனும் அவன் தான்!!!

என்னை விட 2 வயது மூத்தவனான அவனுக்கும் எனக்கும் தான் 10 ஆம் வகுப்பு வரை வகுப்பில் முதல் 2 இடங்களுக்கு போட்டியும் கொஞ்சம் பொறாமையுமாக இருந்தது! (ஆமாம் எட்டாம் வகுப்பு படிக்கையில் ஒரு வகுப்பு தேர்வில் நான் முதலாம் மாணவனாக வந்த பொழுது, எதேச்சையாக ஒரு பாடத்தில் மதிப்பெண் திருத்தம் செய்து முதல் இடத்திற்கு அவன் சென்றதை நினைத்து அவனிடம் 2 வருடம் பேசவேயில்லை!?)

பத்தால் வகுப்பில் தான் மறுமுறை பேசினோம். அடுத்து நான் உயர் நிலை கல்வியில், அவனோ தொழில் நுட்ப பயிலகத்தில் வேதியியல் தொழில் நுட்பத்தில்...காலங்கள் கண்மூடித்தனமாக கரைந்தோடியது, அதில் அவன் நினைவுகளும் மறைந்தோடியது.

மறுபடியும் பார்த்தேன்...அவன் படித்ததற்கு சம்பந்தமில்லாத வேலையில் இருப்பதாக கூறினான்... முன்பு போல இல்லாவிட்டாலும் மறுபடியும் எங்கள் நட்பு மறுபடியும் முலை விட்டது. கல்லூரியில் அவன் ஆராய்ந்து செய்த ஒரு செய்முறை ஆராய்ச்சியை ஓரு தொழிற் சாலைக்கு கொடுக்க சென்று அவர்கள் பணம் தராமல் ஏமாற்றி விட்டதாக கூறி வருத்தப்பட்டான். அப்பொழுது எனக்கு தோணவில்லை அவர்கள் செய்த அதே வேலையை இவனும் பிற்காலத்தில் செய்ய முற்படுவான் என்று!!!

பணம் சம்பாதிப்பது மட்டுமே அவனின் மனத்தில் அப்போது ஓடிக் கொண்டிருந்தது... நியாயமாக இருந்தால் ஏமாற்றப்படுகிறோம் என்கின்ற ஒரு அனுபவத்தை வைத்து அவனின் வாழ்க்கைப் பாதையை இப்படி மாற்றிக் கொள்வான் என்று நான் நினைக்கவில்லை.

ஆம். இத்தனை பேரை பிடித்தால் நமக்கு இவ்வளவு பணம் வரும் என்கின்ற தொழில் முறையில் அவன் அகப்பட்டிருந்தான்... நானும் என் நண்பர்களும் அவனுக்கு அறிவுரை சொல்லும் நிலையில் அதை கேட்கும் மன நிலையில் அவன் இல்லை. சம்பாதித்தான்... பிறகு  தனியாக அதே போல் தொழில் தொடங்கி பணம் திருப்பி தர முடியாமல் இறுதியாக காவல் துறை மூலம் தன் முகத்தை தொலைக்காட்சிக்கும் அவன் பற்றிய செய்திகளை பத்திரிகைக்கும் தரும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

அவன் கட்டிக் கொண்டிருந்த வீடு மட்டுமல்ல அவனும் முடக்கப்பட்டான். சிறிது காலம் கழித்து வெளியே வந்து விட்டான் எனவும், மொட்டை அடித்துக் கொண்டு தன் உருவத்தை மாற்றிக் கொண்டு இருப்பதாகவும் நண்பர்கள் மூலமாக கேள்விப்பட்டேன்.

சந்தர்ப்பம் , சூழ் நிலை அவனின் வாழ்வை முற்றிலும் மாற்றி விட்டது. பேராசை பெரு நட்டமாக முடிந்து விட்டது. அவனை போன்ற ஒரு அறிவாளியை  என் வாழ்வில் நான் கண்டு பழகியதில்லைஅவனை போன்று வாழ்வை தொலைத்தவர்களையும் என் வாழ்வில் நான் கடந்ததில்லை.

அவனை மறுபடியும் பார்ப்பேன் என்கின்ற சிந்தனையில், ஏக்கத்தில்..... நானும், அவனின் நினைவுகளும்.

Tuesday, August 20, 2013

சுதந்திரம்


1997 சுதந்திரப் பொன்விழா ஆண்டு. அப்பொழுது நான் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதே சுதந்திரம் பற்றிய எனது பார்வை மாறுபட்டிருந்தது ஆனால் அதை சரியாக என்னால் வெளிப்படுத்த முடியா வண்ணம் என் வயதும், அனுபவமும் இருந்தது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி பள்ளி கொடியேற்றும் நிகழ்ச்சியில் சுதந்திரம் பற்றிய எனது பார்வையை பதிவு செய்ய விரும்பினேன்.....என் அப்பாவின் நண்பர் சுபவீயிடம் நான் பேசுவதற்கு உரிய குறிப்புகளை தருமாறு கேட்டேன். அந்த குறிப்புகளை வைத்து நான் பேசிய சில வரிகள் இன்னமும் மனத்தில் அப்படியே இருக்கிறது ஏனென்றால் நாம் இன்னமும் அந்தக் காரணங்களுக்கு விடை கிடைக்காமல் தான் இருக்கிறோம்.....

பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அங்கிருந்த பலரை கடுப்பேற்றிய அந்த வரிகள்...

"சுதந்திரப் பொன்விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் தான் உத்திரப் பிரதேசத்தில் அதுலா தேவி என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண்ணின் கணவர் கோயிலிக்குள் சென்ற காரணத்தால் அவரை அடித்து உதைத்து அந்தப் பெண்ணை மானபங்கப் படுத்திய கொடுமையும் நடக்கிறது.




கே.ஆர். நாராயணன் என்ற தாழ்த்தப்பட்டவரை குடியரசுத்தலைவராக்கி பெருமை படும் இதே நேரத்தில் தான் மேற் குறிப்பிட்ட கொடுமைகளும் நடக்கிறது...ஏன்...ஆர்.வெங்கட்ராமன் வரை காஞ்சி சங்கர மடத்தில் இருந்த சிவப்பு கம்பள வரவேற்பு கே.ஆர் நாராயணன் குடியரசுத் தலைவரானது முதல் அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த வேறுபாடுகளை வைத்துக் கொண்டு சுதந்திரத்தை நாம் கொண்டாட முடியாது"

# வேறுபாடுகள் தொடர்கின்றன...

சுதந்திரம் கிடைத்தவர்களுக்கு வாழ்த்துகள்...அது தடுக்கப் பெற்றவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும், வருத்தங்களும்... உண்மையான சமூக விடுதலையை அனைவரும் பெறுவதற்கு வாழ்த்துகளும்!!!

Independence Day!!!

Independence Day-வை உங்கள் நாட்டில்... எப்படி அழைப்பார்கள் என்று ஒரு அமெரிக்கன் கேட்க... அதற்கு சுற்றியிருந்த ஹிந்தி(ய) கூட்டம் சுவதந்திரா என்று அழைப்போம் என்றது.(அப்படியென்றால் வேறெந்த மொழியிலும் சுதந்திரத்தை அழைக்கக் கூடாதா!?)

இங்கு அமெரிக்காவில் நடைபெறும் ஹிந்திய சுதந்திர தின விழாவில் ஹிந்திப் பாட்டும் கும்மாளமும் தான்.

# யார் யாரை புறக்கணிக்கிறார்கள்??? நீங்கள் புறக்கணிப்பதால் நாங்கள் உங்களை புறந்தள்ளிவிடுகிறோம், எங்களுக்கான எல்லையை வரையறுக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம்...
கடந்த இரு முறையை விட இம்முறை பொங்கல் திருவிழாவை இங்கு அலுவலகத்தில் வெகு சிறப்பாக கொண்டாடி நாம் யார் என்பதை எடுத்துக் காட்டிட வேண்டும்/ தனித்துக் காட்டிட வேண்டும் என்பதிலே தான் நாட்டம் அதிகரிக்கிறது.
------
சனாதன தர்மம் கெடுகிறது அதனால் வெள்ளையன் வெளியேற வேண்டும் , சுதந்திரம் வேண்டும் என்று நேரடியாகப் பேசிய திலகர் & கோ சுதந்திரம் கேட்க அருகதையற்றவர்கள் என்றால்,

வர்ணாசிரமத்தை வைத்துக் கொண்டே தீண்டாமையை எதிர்க்க வேண்டும் என்கின்ற நிலையில் இருந்த காந்தி & கோ அதற்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள்.

பகத் சிங் மற்றும் நேதாஜி சற்றே வித்தியாசமானவர்கள் ஆனால் முழுமையாக அல்ல...அவர்களும் சமூக விடுதலையை தொட்டதாக தெரியவில்லை ஆனால் திலகர் போன்று அதற்கு எதிராகவும் இல்லை.

அண்ணல் அரசியல் விடுதலையோடு சமூக விடுதலையும் வேண்டுமென்று வலியுறுத்தினார், வடக்கே ஜோதிபா பூலே, கேரளத்தின் நாராயண குருவும் இதையே வலியுறுத்தினார்கள்.

#இப்பொழுது புரிகிறதா ஏன் நம் முப்பாட்டன் பெரியார் ஆகஸ்ட் 15 ஐ கறுப்பு தினம் - துக்க நாள் என்றார் என்று!!!

-----

பால்ய விவாகத்தை ஆதரித்த
வினாயகனின் வாகனமான எலியை ஒழிப்பதா என்று கலவரம் ஏற்படுத்திய
சூத்திரர்களும் பஞ்சமர்களும் கல்வியே கற்கக் கூடாது என்று வெளிப்படையாகப் பேசிய
கலப்பு மணச் சட்டத்தை எதிர்த்த
சூத்திரர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களே தவிர சட்டத்தை இயற்றுபவர்கள் அல்ல என்று திமிராகப் பேசிய

திலகர் உயர்ந்தவரா இல்லை மேற்கூறிய விடயத்திற்கெல்லாம் ஆதரவாக செயல்பட்டவர்கள் உயர்ந்தவர்களா???

# இந்தத் திலகரும் அவர் கோஷ்டிகளும் வேண்டிய சுதந்திரம் யாருக்காக, எதற்காக???

-----

அவன் பல்கலைக் கழகங்கள் நிறுவி அனைவருக்கும் கல்வி கொடுப்பான், தபால் துறை, நீதித் துறை, சாலைப் போக்குவரத்து கொண்டு வருவான், அணை கட்டுவான், கட்டுமானத்தில், தொழில் நுட்பத்தில் மேம்படுத்துவான், இரயில் போக்குவரத்து அமைப்பான்.

இவனோ...அய்யோ அனைவருக்கும் கல்வியா அது தவறானதே... இரயில் போக்குவரத்தா... இதனால் பேருந்தில் ஒரு சாதி ஒரு பக்கம் பிற சாதிகள் இன்னொரு பக்கம் உட்காரும் நிலைமை மாறுமே... சனாதன தர்மம் சிதையுமே என்று அவனை எதிர்ப்பான்.

இவன் சுதந்திரப் போராட்ட வீரனாம்...இது சுதந்திரமாம்.....

# இது நமக்கான சுதந்திரமா இல்லை இவனுக்கான தந்திரமா???

-----

திலகரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக படித்தவர்களுக்கு மட்டுமே விளங்கும்...திலகரும் அவர் வழி வந்தவர்களும் ஏன் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள் என்று!

சனாதன தர்மம் ஆங்கிலேயனால் கெடுகிறது அதிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்பதே அவர்களின் பார்வையில் பிறப்புரிமை!!!

அந்த சனாதன தர்மத்தை உடைத்து சமூக விடுதலை பெறுவதற்காகவாவது நாம் ஆங்கிலேயர் ஆட்சியில் சிறிது காலத்திற்கு இருந்திருக்க வேண்டும்.

-----

ஹிந்தியாவை இன்னமும் குறைந்தது 50 வருடம் ஆங்கிலேயன் ஆண்டிருக்கக் கூடாதா என்கின்ற ஏக்கம் மட்டுமே ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் எஞ்சி நிற்கிறது!!!

காங்கிரசால் 
நாடு பிடிக்க 
செய்யப்பட்ட 
தந்திரம்,

காந்தியால் 
வாங்கியதாக 
சொல்லப்படும்
சுதந்திரம்!

அரசியலோடு
சமூக விடுதலையும்
வேண்டுமென்றார்
அண்ணல்,

அது கிடைக்காமல் தான்
இன்று வரை
தொடர்கிறது
இன்னல்!!!

Tuesday, August 13, 2013

கிறித்துவ நண்பர்களுக்கு...

1.தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்.
நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால் நினைத்தது நடக்கும், நடக்காவிட்டால் ஆண்டவனின் திட்டம் வேறு மாதிரி இருக்கிறது என்று அர்த்தம்!

2.நாம் பிரார்த்திக்காவிட்டாலும் நம் நண்பர்கள், உறவினர்கள், வேறு யாராகினும் பிரார்த்தித்தாலும் நடக்கலாம், நடக்காவிட்டால் அதற்கும் ஒரு காரணம் நம்மிடம் இருக்கும்!

3.மாதந்தோறும் கடவுளுக்கென்று காணிக்கை வைத்து விட வேண்டும் இல்லையென்றால் வேறு வழியில் நமக்கு நட்டம் வரும்.

4.கடவுளை மறந்து விட்டால் அதை நமக்கு உணர்த்துவதற்காக நமக்கு ஒரு சின்ன இன்னல்/துக்கத்தை கடவுள் கொடுப்பார் அதற்கு பிறகாவது அவரை வணங்கி விட வேண்டும்.

# சத்தியமாக இதுவெல்லாம் என் போதனைகள் அல்ல... போதித்தவர்களிடமிருந்து கேட்டது. இதை படித்தாலே தெளிவாக விளங்கும் இவையெல்லாம் மனிதனால் பல்வேறு காலங்களில் சந்தர்ப்ப சூழ் நிலைக்கு ஏற்றவாறு புனையப்பட்டது மதத்தை நிலை நிறுத்துவதற்காக என்று. 

கடைசி இரண்டு வாக்கியங்கள்(3 & 4) மிகவும் முக்கியமானவை... அன்பே உருவான கடவுள் அப்படி சொல்லியிருக்க முடியுமா??? அவரை ஒரு சாதாரண கூலியாக, வில்லனாக ஆத்திகர்களே கேவலப்படுத்துகிறார்களே....



கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ரூ 2500-இலிருந்து தொடங்கி 4000 வரை சம்பள உயர்வு பெற்று அடுத்து தான் நல்ல வேலை கிடைத்தது.

பொருளாதார தேக்க நிலையில், திருமண நேரத்தில் கிட்டத்தட்ட மூன்று மாதம் பாதி சம்பளம் பெற்று பிறகு புது வேலைப்பணி அதுவும் வெளி நாட்டில் கிடைத்தது.

புது வீடு வாங்கி கடனை அடைத்து முடிக்க வேண்டுமே என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுதே இரண்டாவது வெளி நாட்டு வாய்ப்பு அமைந்தது.

அடுத்து...சமையலறை அடுக்கில் தலை இடித்து குணமானது, தற்காப்பு கலையில் நெஞ்செலும்பில் வலி ஏற்பட்டு குணமானது,கை பந்து விளையாட்டில் இடுப்பில் வலி ஏற்பட்டும் சரியானது  .....etc etc

இதற்கெல்லாம் நான் சாட்சிகளாக இருந்திருக்கக் கூடும்..... பெரியார் என்ற கிழவனை என் அப்பா எனக்கு அறிமுகப்படுத்தாமல் இருந்திருந்தால்...

# உன் நம்பிக்கை உன் கடவுளை வாழ வைக்கிறது, என் நம்பிக்கை என்னை வாழ வைக்கிறது!!!


---

என்னால் பேருந்தில் செல்ல முடியவில்லை, அதனால் கார் வேண்டுமென்று கடவுளிடம் பிராத்தித்தேன். ஒரு பெரும் பணக்காரர் மூலமாக எனக்கும் , இந்த பிராத்தனை அமைப்புக்குமாக ஒரு கார் கிடைத்தது, என் தேவனுக்கு மகிமை... கோடானு கோடி நன்றிகள். - ஒரு பிராத்தனை அமைப்பின் சகோதரி.
(அவர் கொடுத்தது இயற்கையாக அமைந்ததா... இவர்கள் கோரிக்கை பல பேருக்கும் வைத்தார்களா... என்றெல்லாம் ஆராய்ந்தால் நீங்களும் நானும் பகுத்தறிவாளர்களே!!!)

# நம் நாட்டில் நடைபெறும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு கடவுளிடம் பிராத்தித்து தீர்வு காணலாமே.. உதாரணத்திற்கு ஈழத்தமிழர் பிரச்சினை!!! கார் கொடுத்த கடவுள் இதையெல்லாம் சரி செய்ய மாட்டாரா???


---

அவனுக்கு சரியா பணத்தை செட்டில் செஞ்சா போதும் காரியத்த கணக்கா முடிச்சுடுவான்.

கடவுளுக்கு மாதந்தோறும் நம்மால் முடிந்த பங்கை ஒதுக்கி விட வேண்டும், நாம் நினைத்த காரியம் நிறைவேறிவிடும்.

# உங்க கடவுள உங்கள விட நாங்களாய்யா கேவலப்படுத்துறோம்??? இறைவா இவர்களின் பிழைகளை மன்னியும்!!!


---

என் அரிப்பை குணமாக்கினார், காய்ச்சலை குணப்படுத்தினார், தலைவலியை போக்கினார் என்று பல பேர் சாட்சி கூறினார்கள்...

காட்சிகள் முடிந்ததும்...என் அருகில் கால் வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நண்பரின் தலையில் கை வைத்தும் பாதிரியார் செபம் செய்தார்.

என் தோள் தாங்கி வெளியில் நடந்து வந்த நண்பரிடம் கேட்டேன்... உங்களுக்கு இன்னேரம் வலி குறைந்திருக்க வேண்டுமே என்று...

அவர் சிரித்தார்.

# நம்மை சமாதானம் செய்து கடவுளை பிழைக்க வைக்கும் சாட்சிகள்!!!


---

ஒளிக் கீற்றாகவும், வெளிச்ச திரளாகவும், பால் குடித்தும், இரத்தம் வடிந்தும் உனக்கு தெரியும் கடவுள் எனக்கு இதுவரை தெரிந்ததேயில்லை... உன்னிடம் இருட்டு நேரத்திலும்,ரகசியமாகவும் பேசும் கடவுள் என்னிடம் இதுவரை பேசியதேயில்லை......

ஒரு வேளை இதுவெல்லாம் எனக்கு நடந்தால்.....

# இதற்கான பதிலை என் முப்பாட்டன் ஈ.வே.ரா(பெரியார் என்று சொன்னாலே பல பேருக்கும் இன்றும் பேதி புடுங்குகிறதே...அவர்களின் நலன் கருதி!)முன்பே சொல்லிவிட்டான் கடவுள் இருக்கிறான் என்று சொல்லிவிட்டுப் போகிறேன் என்று!?


---

உன் நம்பிக்கை உன்னை முட்டாளாக்கினால் பரவாயில்லை, அது சூது வாதறியா, படிப்பறிவில்லா, பட்டறிவில்லா மக்களையும் சேர்த்து முட்டாளாக்கும் பொழுது தான்... அந்த நம்பிக்கையின் மீதான விமர்சனம் எழுவதும், விவாதிப்பதும் இன்றியமையாததாகிறது!!!

# கடவுள், மத நம்பிக்கைகள்!