சாதி - படிப்பறிவும், பகுத்து அறியும் அறிவும் கிடைக்கப்பெறாத மக்களின் கோபக் கனலாக அவர்களின் அரிவாளில் மட்டுமே தெறிக்கும் என்பதில்லை, நன்கு படித்து, பகுத்து அறியும் அறிவு பெற்ற மக்களின் நயவஞ்சகத்தனமான சிரிப்பாக அவர்களின் நாக்கிலிருந்து கூட வெளிப்படலாம்.
முதலாமாவதை கூட நாம் சகித்துக்கொள்ள முடியும், மாற்றிவிட முடியும். இரண்டாமாவதை பொறுத்துக்கொள்வதே கடினம்.
நேற்று மதிய உணவு வேளையில் அலுவலகத்தில் நான் சந்தித்த ஒரு நபரே என்னுடைய மேற்குறிப்பிட்ட சிந்தனைக்கு காரணமாக அமைந்தவர், அவரது பெயர் ஸ்ரீனாத் சக்கரவர்த்தி, வயது 40 இருக்கலாம். அமெரிக்காவிலேயே படித்து இங்கேயே வேலை பார்ப்பவர். எங்களைப் பற்றின தகவல்களை பரிமாறிக்கொண்ட பிறகு பின்வருமாறு அவர் ஆரம்பித்தார்.
"நீங்கள் கத்தோலிக்கரா இல்லை வேறு பிரிவா..."
என் மூதாதையர்கள் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள் தான் என்று கூறிவிட்டு கிறித்துவத்தின் வேறு பிரிவுகள் பற்றியும் விவாதித்தோம். பொதுவாக என்னை கிறித்துவன் என்று குறிப்பிடுவதை நான் விரும்ப மாட்டேன் ஆதலால் அவரிடம் பின்வருமாறு கூறினேன்.
"நான் கடவுள் மறுப்பாளன்,பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவன்" என்று சொல்லிவிட்டு பெரியாரை தெரியுமா என்று கேட்டேன்.
தெரியும்,தி.க வரலாற்றையும் படித்திருக்கிறேன் என்றார். யாரும் பெரியாரை பின்பற்றுபவர் என்று வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள் என்றார்.
அவ்விதம் மறைக்கும் அளவிற்கு அவர் தவறு எதுவும்,செய்யக்கூடாத எதையும் செய்யவில்லையே என்றேன்.
அவருடைய குற்றச்சாட்டு.. He is aggressive என்பது.
அந்த காலத்தில் அப்படிப்பட்ட aggressiveness தேவைப்பட்டது, இப்பொழுது அந்த அளவிற்கு அதற்கு தேவை இல்லாமல் இருக்கலாம் என்று தெளிவுபடுத்தினேன்.
பிறகு எங்களின் பேச்சு எப்படியோ சாதியின் பக்கம் சென்றது. கிறித்துவத்தில் கூட சாதி இருக்கிறது என்றும், மதம் மாறியவர்கள் சாதியையும் பிடித்துக் கொண்டு வந்தால் எதற்கு மதம் மாற வேண்டும் என்பதாக விவாதம் சென்றது.
பிறகு அவர் கேட்ட ஒரு கேள்வி அவரின் உண்மை முகத்தை கொஞ்சம் வெளிப்படுத்தியது.
எதற்காக சாதி இருக்கக் கூடாது என்கிறீர்கள் என்றார்.
எதற்காக இருக்க வேண்டும் என்கிறீர் என்று கேட்டுவிட்டு சமூக ஏற்றத்தாழ்வை நீக்க மனிதனுக்குள்ள பேதத்தை போக்க சாதி களையப்பட வேண்டும் என்றேன் அதன் வேர் மனுவிலிருந்து வந்தது என்றும் கூறினேன்.
வேறுபாடு இல்லாத இடமில்லை என்று நியாயப்படுத்த முயன்றார், மேலும் அதற்கு உதாரண்மாக நானும் என் மனைவியும் கூட வேறுபடுவதாகவும் ஒரு அறிவுப்பூர்வ உதாரணத்தை அளித்தார்!
நேர்க்கோட்டு பிரிவிற்கும் (வழிபாடு அடிப்படையில் அல்லது இனத்தின் அடிப்படையில்), செங்குத்து அடிப்படையிலான பேதத்திற்கு வேறுபாடு உள்ளது என்று கூறினேன். நீங்கள் உங்கள் மனைவியை விட உயர்ந்தவர் என்று நினைத்தாலும் பிரச்சினை ஆரம்பிக்குமே என்றேன்.
மனுவில் குறிப்பாக எந்த இடத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று இருக்கிறது என்று கேட்டார்.
நிச்சயமாக இருக்கிறது என்றேன். நேரடையாகவும் சரி, குற்றங்களுக்கான தண்டனைகளின் வேறுபாடு என்கின்ற அடிப்படையில் மறைமுகமாகவும் இருக்கிறது என்றேன். குறிப்பாக எங்கே இருக்கிறது(சட்ட எண்)என்று மின்னஞ்சல் அனுப்புவதாகவும் கூறினேன்.
அவரிடம் உங்களிடம் ஒரு நேரடி கேள்வியை கேட்க வேண்டுமென்று கூறி பின்வருமாறு கேட்டேன்.
"இது பேதமல்ல வெறும் சமூகப்பிரிவு தானென்றால் கோயில் கர்ப்பக்கிரகத்தில் அனைவரையும் உள்ளே விட உங்களுக்கு சம்மதமா..."
அவர் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை...அடுத்த அறிவுப்பூர்வ உதாரணக் கேள்வியை கேட்டார். அந்த கேள்வி அவரின் உண்மை முகத்தை மேலும் தோலுரித்துக் காட்டியது மேலும் இவர் இங்கு படித்தவர் தானா என்கின்ற சந்தேகத்தையும் எழுப்பியது!?
அவரின் கேள்வி...உங்களின் source code- இல் கை வைக்க உங்கள் மகனை அனுமதிப்பீர்களா என்று...
கண்டிப்பாக அவன் கை வைத்து கற்றுக்கொள்ள எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றேன், நீங்கள் அனுமதிப்பீர்களா என்று மறுபடியும் கேட்டேன்.
அதற்கு கோயில் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டுமென்று கூறி நழுவ முயன்றார். அந்த நிர்வாகம் முடிவெடுத்தாலும் சிலர் சம்மதிக்க மாட்டார்களே என்றேன்.
இதற்கு பதில் இருக்கிறது, முதலில் மனுவில் இருக்கும் உயர்ந்தவர்,தாழ்ந்தவர் என்ற வரிகளை பற்றி விவாதிக்கலாம் இதை பிறகு பார்க்க்கலாம் என்றார்.
நானும் சரி என்று விடைபெற்றேன்.
அவரிடமிருந்து எழுந்து வரும்பொழுது இந்த கட்டுரையின் முதலில் நான் எழுதிய கருத்துகள் தான் என் மனத்தில் ஓடியது. மேலும் பெரியார் அப்படி என்ன செய்து கிழித்தார் என்று பலன் அனுபவித்த சில தமிழர்களே கேட்கிறார்களே அதற்கான ஒரு சிறு பதிலும் கிடைத்தது.
அவருக்கு எதிரில் அமர்ந்து தைரியமாக பேசும் துணிச்சலையும், பகுத்து அறிந்து விவாதிக்கும் ஆற்றலையும் கொடுத்ததே அந்தப் பெரியார் தானே...அவரும் அம்பேத்காரும் இல்லை என்றால் நாமும் இல்லை நாம் தின்னும் சோறும் இல்லை.....அவர்கள் எதிர்த்த சாதித்திமிரின் மிச்சங்கள் இன்றும் எச்சங்களை உமிழ்ந்து கொண்டு நம்மிடையே உலாவிக்கொண்டிருக்கின்றன என்பது வேதனைக்குரிய விடயமே...