Monday, July 18, 2011

சத்திய சோதனை - 2 (காந்தியும் - நாராயண குருவும்)

காந்தியாரும் - நாராயண குருவும்

காந்தியார் சமூக விடுதலையை விட அரசியல் விடுதலையே பெரிதென நினைத்தார் அதாவது சமுதாய சீர்திருத்தப் பணியை விட ஆங்கிலேயரின் ஆட்சியை எதிர்ப்பதில் மிகுதியான நாட்டம் செலுத்தினார்.

குமாரசாமி சன்னியாசி அவர்கள் உலக குரு திரு நாராயணர்(World Guru Sree Narayana) எனும் நூலை எழுதியிருக்கிறார்,அதில் அவர் பின்வரும் நிகழ்வை விவரிக்கிறார்.வைக்கம் போராட்டத்தின் பொழுது வர்காவில் அமைந்திருக்கும் சிவகிரி மடத்துக்குச் சென்று குருவை சந்தித்து உரையாடிக்கொண்டிருந்த காந்தியடிகள் ஆங்கிலேயரை குறை கூறினார்.அதற்கு குரு பின்வருமாறு பதிலளித்தார்."இந்து அரசர்கள் காலத்தில் மறுக்கப்பட்ட உரிமைகளை,ஆங்கிலேயர் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி,தாழ்த்தப்பட்டவர்களின் வழிகாட்டிகள் ஆங்கிலேயர்களே என்றும்,அப்படிப்பட்டவர்களை பழ்த்துரைக்க தாம் விரும்பவில்லை"
நாராயண குரு கொண்டிருந்த கருத்தையே 19ஆம் நூற்றாண்டில் ஜோதிபா பூலேயும்,20ஆம் நூற்றாண்டில் பெரியாரும்,அம்பேத்காரும் கொண்டிருந்தனர்,அதனால் தான் பொது வாழ்வில் சமூக விடுதலையை முதன்மையாக வலியுறுத்திய முந்தைய மூவருக்கும், அரசியல் விடுதலையை மட்டும் முன்னிறுத்திய காந்தியிடம் வேறுபாடுகள் எழுவது இயல்பானதே!!!

இந்த நேரத்தில் வைக்கம் போராட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தையும் நினைவு கூறுவது தவிர்க்க முடியாதது.
1932 இல் யங் இந்தியாவில் காந்தி பின்வருமாறு எழுதுகிறார்..."கோயில் நுழைவு என்பது மத உரிமை ஆகையால் இதில் வேறு யாரும் (மற்ற மதக்காரர்கள்) நுழைவது சத்தியாகிரகம் என்று சொல்ல முடியாது.வைக்கம் சத்தியாகிரக காலத்தில், ஜார்ஜ் ஜோசப் சிறைக்கு சென்ற பொழுது,அவர் செய்தது தவறு என்று சொல்லியனுப்பினேன்.அவர் அதை ஏற்றுக்கொண்டு,உடனே மன்னிப்புக்கோரி,ஜெயிலிலுருந்து வெளியே வந்தார்.கோயில் நுழைவு சத்தியாகிரகம் என்பது ஜாதி இந்துக்களுக்கு ஒரு தபசு போன்றது"

அதற்கு ஜார்ஜ் ஜோசப் பின்வருமாறு பதில் எழுதினார்,அவரின் பதில் கல்கத்தாவில் இருந்து வந்த Indian Social Reformer என்ற பத்திரிகையில் பிரசுரம் ஆனது."வைக்கம் சத்தியாகிரகத்திற்கும் கோயில் நுழைவிற்கும் சம்பந்தம் கிடையாது.பொதுப் பணத்தால் நிர்வகிக்கக்கூடிய ஒரு பொதுத்தெருவில் 'தீண்டத்தகாத' மக்கள் நடப்பதற்கு உரிமை இல்லை என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும் என்பதே பிரச்சினை.அந்தத் தெரு கோயிலிற்கு அருகாமையில் இருந்தது என்பதை தவிர வேறொன்றும் இல்லை,இதை திரும்ப திரும்ப நாங்கள் தெளிவுபடுத்தியிருக்கிறோம். நாங்கள் போராடியது குடியுரிமைக்கு மட்டுமே!போராட்டம் நீண்ட காலம் நடந்தது,இறுதி வெற்றி தீண்டத்தகாதவர்களுக்கு கிடைத்தது. நான் ஒரு கிறித்துவன் என்பதால் அந்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று காந்தியார் சொன்னது உண்மை. நான் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சொல்லியனுப்பியதும் உண்மை,ஆனால் நான் மன்னிப்பு கேட்கவில்லை"

கோயில் நுழைவு போராட்டம் அல்ல என்று காந்தியாருக்கு தெரிந்திருந்தும்,அதை கோயில் நுழைவு போராட்டமாக எழுதியதன் பின்னணியும்,மன்னிப்பு கேட்காதவரை,மன்னிப்பு கேட்டார் என்று திரித்துக் கூறியதன் பின்னணியும் நாம் கருத்தில் கொள்ளவேண்டியதே!!!

No comments: