Monday, July 18, 2011

சத்திய சோதனை - 2 (காந்தியும் - நாராயண குருவும்)

காந்தியாரும் - நாராயண குருவும்

காந்தியார் சமூக விடுதலையை விட அரசியல் விடுதலையே பெரிதென நினைத்தார் அதாவது சமுதாய சீர்திருத்தப் பணியை விட ஆங்கிலேயரின் ஆட்சியை எதிர்ப்பதில் மிகுதியான நாட்டம் செலுத்தினார்.

குமாரசாமி சன்னியாசி அவர்கள் உலக குரு திரு நாராயணர்(World Guru Sree Narayana) எனும் நூலை எழுதியிருக்கிறார்,அதில் அவர் பின்வரும் நிகழ்வை விவரிக்கிறார்.வைக்கம் போராட்டத்தின் பொழுது வர்காவில் அமைந்திருக்கும் சிவகிரி மடத்துக்குச் சென்று குருவை சந்தித்து உரையாடிக்கொண்டிருந்த காந்தியடிகள் ஆங்கிலேயரை குறை கூறினார்.அதற்கு குரு பின்வருமாறு பதிலளித்தார்."இந்து அரசர்கள் காலத்தில் மறுக்கப்பட்ட உரிமைகளை,ஆங்கிலேயர் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி,தாழ்த்தப்பட்டவர்களின் வழிகாட்டிகள் ஆங்கிலேயர்களே என்றும்,அப்படிப்பட்டவர்களை பழ்த்துரைக்க தாம் விரும்பவில்லை"
நாராயண குரு கொண்டிருந்த கருத்தையே 19ஆம் நூற்றாண்டில் ஜோதிபா பூலேயும்,20ஆம் நூற்றாண்டில் பெரியாரும்,அம்பேத்காரும் கொண்டிருந்தனர்,அதனால் தான் பொது வாழ்வில் சமூக விடுதலையை முதன்மையாக வலியுறுத்திய முந்தைய மூவருக்கும், அரசியல் விடுதலையை மட்டும் முன்னிறுத்திய காந்தியிடம் வேறுபாடுகள் எழுவது இயல்பானதே!!!

இந்த நேரத்தில் வைக்கம் போராட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தையும் நினைவு கூறுவது தவிர்க்க முடியாதது.
1932 இல் யங் இந்தியாவில் காந்தி பின்வருமாறு எழுதுகிறார்..."கோயில் நுழைவு என்பது மத உரிமை ஆகையால் இதில் வேறு யாரும் (மற்ற மதக்காரர்கள்) நுழைவது சத்தியாகிரகம் என்று சொல்ல முடியாது.வைக்கம் சத்தியாகிரக காலத்தில், ஜார்ஜ் ஜோசப் சிறைக்கு சென்ற பொழுது,அவர் செய்தது தவறு என்று சொல்லியனுப்பினேன்.அவர் அதை ஏற்றுக்கொண்டு,உடனே மன்னிப்புக்கோரி,ஜெயிலிலுருந்து வெளியே வந்தார்.கோயில் நுழைவு சத்தியாகிரகம் என்பது ஜாதி இந்துக்களுக்கு ஒரு தபசு போன்றது"

அதற்கு ஜார்ஜ் ஜோசப் பின்வருமாறு பதில் எழுதினார்,அவரின் பதில் கல்கத்தாவில் இருந்து வந்த Indian Social Reformer என்ற பத்திரிகையில் பிரசுரம் ஆனது."வைக்கம் சத்தியாகிரகத்திற்கும் கோயில் நுழைவிற்கும் சம்பந்தம் கிடையாது.பொதுப் பணத்தால் நிர்வகிக்கக்கூடிய ஒரு பொதுத்தெருவில் 'தீண்டத்தகாத' மக்கள் நடப்பதற்கு உரிமை இல்லை என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும் என்பதே பிரச்சினை.அந்தத் தெரு கோயிலிற்கு அருகாமையில் இருந்தது என்பதை தவிர வேறொன்றும் இல்லை,இதை திரும்ப திரும்ப நாங்கள் தெளிவுபடுத்தியிருக்கிறோம். நாங்கள் போராடியது குடியுரிமைக்கு மட்டுமே!போராட்டம் நீண்ட காலம் நடந்தது,இறுதி வெற்றி தீண்டத்தகாதவர்களுக்கு கிடைத்தது. நான் ஒரு கிறித்துவன் என்பதால் அந்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று காந்தியார் சொன்னது உண்மை. நான் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சொல்லியனுப்பியதும் உண்மை,ஆனால் நான் மன்னிப்பு கேட்கவில்லை"

கோயில் நுழைவு போராட்டம் அல்ல என்று காந்தியாருக்கு தெரிந்திருந்தும்,அதை கோயில் நுழைவு போராட்டமாக எழுதியதன் பின்னணியும்,மன்னிப்பு கேட்காதவரை,மன்னிப்பு கேட்டார் என்று திரித்துக் கூறியதன் பின்னணியும் நாம் கருத்தில் கொள்ளவேண்டியதே!!!

Friday, July 1, 2011

சத்திய சோதனை - 1 (காந்தியும்-அம்பேத்காரும்)

சத்திய சோதனை - 1

இது காந்தியின் சத்திய சோதனை அல்ல,காந்திக்கு ஏற்பட்ட சத்திய சோதனை. இந்த உலகில் எவரும்,எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல... நான் காந்தியை பற்றி விமர்சிக்கும் இந்த கட்டுரை உட்பட! விமர்சனம் என்றாலே தனிமனித தாக்குதல்கள் என்று பழக்கமாகிப் போய்விட்ட இந்த சமூகத்தில்,இந்த விமர்சனம் அந்த வரைமுறைக்கு உட்படாது,தனிமனித,தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்காது,அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த விமர்சனமாகவே அமையும்.ஒரு மேம்பட்ட, நாகரிக சமுதாயத்தில் விமர்சனம் என்று சொல்லப்படுவத்தும் மேற்கூறிய அரசியல் மற்றும் சமூகம் சார்ந்தே அமைய வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமும் கூட! காந்தியை பற்றிய அவரின் பார்வையோ,வேறு சிலரின் பார்வையோ அவர் சரி என்று முடிவுக்கு வரலாம்,என் பார்வையில் அது தவறு என்ற முடிவுக்கு நான் வரலாம்.எது சரி,எது தவறு,எது நல்லது,எது கெட்டது என்பவைகளை எல்லாம் உங்களின் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.

காந்தியும்-அம்பேத்காரும்

1931 ஆம் ஆண்டு இரண்டாவது வட்ட மேசை மாநாட்டிற்கு செல்வதற்கு முன்பு சந்தித்த காந்தி மற்றும் அம்பேத்காரின் உரையாடல் பின்வருமாறு செல்கிறது.
அம்பேத்கார் - வணக்கம் காந்திஜி
காந்தி - வணக்கம் டாக்டர். தீண்டாமை பிரச்சினை குறித்து நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.அது ஒரு சமுதாய பிரச்சினை.அதை அரசியல் பிரச்சினையோடு முடிச்சு போட்டு பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
அம்பேத்கார் - அப்படியென்றால் தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினை பற்றிய அக்கறை எதுவும் உங்களுக்கும்,காங்கிரசுக்கும் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு.
காந்தி - அது இந்துக்களை பிளவுபடுத்தும் செயல்.அதற்கு நான் அனுமதிக்க முடியாது.
அம்பேத்கார் - உங்களுடைய கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தமைக்கு நன்றி.

ஆகஸ்ட் 4,1932 ஆம் ஆண்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பற்றிய பிரிட்டிஷாரின் அறிக்கையில் அம்பேத்தார் வலியுறுத்திய தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி ஒதுக்குவதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
ஏர்வாடா சிறையில் இருந்த காந்தி இதை கேட்டு அதிர்ந்து இந்துக்கள் துண்டாடப்படுவதை காட்டிலும் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறப்பதே மேல் என்று அறிவித்து உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார்.
விடயம் அறிந்து ஆத்திரம் அடைந்த அம்பேத்கார்,'காந்தி உயிருடன் இருக்க வேண்டியது அவசியம்.அதற்காக தாழ்த்தப் பட்டவர்கள் எல்லோரும் குழியில் புதைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.எனக்கான மக்களின் நியாயமான உரிமைகளை எதற்காகவும் விட்டுக்கொடுக்க தயாரில்லை,இதற்காக தூக்கு மேடைக்கு செல்லவும் தயார்' என்று அறிவித்தார்.(அதற்கு பிறகு அந்த ஒப்பந்தம் செப்டம்பர் 24,1932 ஆம் ஆண்டு புனேவில் அம்பேத்காரின் அரை மனத்துடன்,காந்தியுடன் இணைந்து கையெழுத்தானது)

1935 ஆம் ஆண்டிற்கு பிறகு நடைபெற்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கான மாநாட்டில் அம்பேத்கார் பின்வருமாறு பேசினார்.'பொதுக்குளத்தில் நீர் எடுக்க முடியவில்லை.காலாராம் ஆலையத்திற்குள் நுழைவதற்கு அனுமதியில்லை.அடிப்ப்டை உரிமைகள் அனைத்துமே தயவு தாட்சண்யமின்றி மறுக்கப்படுகின்றன.இந்து மதம் என்ற குடையின் கீழ் இருக்க வேண்டும் என்பதற்காக, நாயை விடவும்,பூனையை விடவும் கேவலமாக நடத்தப்படுகிறோம்.இந்து மதத்தில் இருக்க வேண்டும் என்றால்,இத்தகைய அவமானங்களை கண்டிப்பாக எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்றால் நம்மை சுய மரியாதையுடன் நடத்துகின்ற வேறு மதத்துக்கு போவதில் தவறில்லை'சற்று இடைவெளிவிட்டு பேசினார்...' நான் இந்துவாக பிறந்து விட்டேன்,ஆனால் நிச்சயமாக இந்துவாக சாகமாட்டேன்'.
இந்த பேச்சை கேட்டு 'அம்பேத்காரின் பேச்சு துரதிஷ்டவசமானது'என்று சீறினார் காந்தி.(இதனை தொடர்ந்து அக்டோபர் 4,1956 இல் நாக்பூரில் நடைபெற்ற விழா ஒன்றில் தன்னோடு சேர்த்து 2 இலட்சம் இந்துக்களை பவுத்த மதத்தில் இணைத்துக் கொண்டார்)

கடவுளின் குழந்தைகள்(ஹரிஜன்) என்று தாழ்த்தப்பட்ட மக்களை அழைக்கச் சொன்னால் மட்டும் விடயம் முடிந்ததா????? வேறு மதத்திற்கு மாறுவதை துரதிஷ்டம் என்று கூறிய காந்தி,தன் மதத்துக்குள்ளேயே தாழ்த்தப்பட்ட மக்களை சுய மரியாதையுடன் நடத்துவதற்கு என்னென்ன வழிமுறைகள் மேற்கொண்டார்????? தீண்டாமை பற்றி அம்பேத்கார் பிறப்பதற்கு முன்பிருந்தே சிந்தித்து கொண்டிருந்தது மட்டும் தான் அவருடைய பணியாக இருந்ததா???வைக்கம் போராட்டத்தில் காங்கிரஸ்காரர்கள் கூட வேகம் காட்டிய போது காந்தி மட்டும் மென்மையான போக்கை கடைபிடித்தது ஏன்??? (இதை பற்றி காந்தியும்-பெரியாரும் தலைப்பில் விரிவாக காணலாம்)இவை போன்ற கேள்விகள் எல்லாம் தவிர்க்க முடியாததாகிறது...காந்தியின் தீண்டாமை பற்றிய அரசிய்ல்,சமூக பார்வையை பற்றி விமர்சனம் செய்கையில்!