Tuesday, January 22, 2013

ரிசானாக்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்...

ஒரு உயிரை அநியாயமான முறையில் நீங்கள் கொலை செய்தால், இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களையும் கொலை செய்த குற்றத்திற்கு நீங்கள் ஆளாகிறீர்கள் - திரு குர் ஆன்


நபிகள் நாயகம் எதிரிகளை மன்னித்தார். போரில் சிறைப்பிடிக்கப் பட்ட கைதிகளை கூட, கருணையாக நடத்தினர்.அடிமைகளைகூட அவர்கள்
ஒரு போதும் இழிவாக நடத்தவில்லை.




ஒரு குழந்தை இறக்கிறது... அந்தக் குழந்தையின் தாய் தன் குழந்தை இறந்ததற்கு பணிப்பெண்ணே காரணம் என்கிறாள், அவள் தான் குழந்தை கழுத்தை நெறித்து கொன்றாள் என்று ஆணித்தரமாக தெரிவிக்கிறாள். அந்தப் பணிப்பெண்ணோ தான் குழந்தையை கொல்லவில்லை என்கிறாள், பால் புகட்டும் பொழுது மூச்சு தவறி இறந்ததாக கூறுகிறாள். 7 வருடம் நீடித்த இந்த வழக்கில் அந்தப் பணிப்பெண்ணிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்படுகிறது அதுவும் பொது இடத்தில் கழுத்தை அறுத்து தண்டனை நிகழ்ந்தேறுகிறது.



அந்தக் குழந்தையின் தாயின் வார்த்தைக்கு மட்டுமே இங்கு மதிப்பளிக்கப்பட்டு இருக்கிறது. அந்தப் பணிப்பெண் தான் குழந்தையை கொன்றாள் என்பதற்கான ஆதாரம் மெய்ப்பிக்கப்படாத நிலையில் தரப்பட்ட இந்த தண்டனை அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் முட்டாள்தனமாக, காட்டுமிராண்டிதனமாகவே தெரிகிறது.


இதை விமர்சித்தால் இசுலாமிய தோழர்களுக்கு கோவம் வருகிறது, எங்கள் மத நம்பிக்கையில்,சட்ட திட்டங்களில் தலையிடும் உரிமை எவருக்கும் இல்லை என்கிறார்கள்.விமர்சிப்பவரின் மீது தனிமனித கருத்து தாக்குதல்கள் நடத்துகிறார்கள், உருவத்தை பற்றியும், ஊனத்தை பற்றியும்,பிறப்பை பற்றியும் கொச்சையாக விமர்சிக்கிறார்கள்(உங்களின் கடவுள் சொல்லிக் கொடுத்த எதை தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள்...இதை பின்பற்ற!!!) அனைத்து இசுலாமியர்களும் ஷரியா சட்டத்தின் மூலம் கொடுக்கப்பட்ட இந்த தண்டனையை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.


அன்பையும்,சகோதரத்துவத்தையும்,மத நல்லிணக்கத்தையும் போதித்த மார்க்கமானதே இசுலாம், நபிகள் எதிரிகளை கூட மன்னிக்கத்தானே கூறினார், கொலை செய்ய தூண்டியதில்லையே...ஷரியா சட்டம் என்பதின் மூலம் இது போன்ற குற்றங்கள் புரிய யார் இவர்களுக்கு உரிமையும் அதிகாரமும் கொடுத்தது?


ஒரு சிலர் இசுலாமிய தோழர்கள்(அமீர் அப்பாஸ் போன்றோர்)இந்த செயலை துணிவாக கண்டிக்கிறார்கள், மனிதாபிமானம் துளியளவு வாய்க்கப்பெற்ற சில இசுலாமிய தோழர்களோ இந்த செயலுக்கு வருந்துகிறார்கள் ஆனால் ஷரியா சட்டத்தின் படி இதை வேறு வழியின்றி ஏற்றுக் கொள்வதாகவும் , ஒரு வேளை அந்தப் பணிப்பெண் குழந்தையை கொன்றிருக்கும் பட்சத்தில் மரண தண்டனைக்கு தகுதியானவளே என்றும் இல்லாத பட்சத்தில் மறுமையில் அதற்கான நற்பலனை பணிப்பெண்ணும், தண்டனையை அவளுக்கு மரண தண்டனை வழங்கியோர் அனுபவிப்பார்கள் என்றும் பிதற்றுகிறார்கள். மத விடம் ஏறிய மனித நாக்கிடமிருந்து நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?, அவர்களால் இருப்பதாகச் சொல்லப்படும் மறுமையில் அந்தப் பெண்ணிற்கு வழி காட்டுவோர் இம்மையில் அந்தப் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை பற்றியும், அவளின் வருமானத்தை நம்பியிருக்கும் குடும்பத்தை பற்றியும் கவலைபடுபவர்களாக தெரியவில்லை.


எது எப்படியோ ஒன்று மதத்தின் மேல் கொண்ட மதத்திலிருந்து இவர்கள் விடுபட வேண்டும், மனித நேய, பகுத்தறிவு சிந்தனையை வளர்த்து குறைந்த பட்சம் இவர்கள் மதக் கருத்துக்களை தெளிவாக கற்றுத் தெளிய வேண்டும். மதமானது மூட நம்பிக்கையை, முட்டாள்தனத்தை, காட்டுமிராண்டி செயல்களை வளர்க்கும் பட்சத்தில் அதிலிருந்தே அவர்கள் வெளி வர வேண்டும் இல்லையென்றால் ரிசானாக்கள் நம் நாகரிக(!?)சமூகத்திலிருந்து இன்னும் இன்னும் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்...