Sunday, September 9, 2012

வாழ்வின் அர்த்தம் என்ன?????


இந்த கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க முடியாமலும், பதில் தெரியாமலும் 100 க்கு 98 சதவீத பிணங்கள் மயானத்திலும்,கல்லறையிலும் தினம் தினம் நிம்மதியில்லாமல் செத்துக்கொண்டிருக்கின்றன!!!


இந்த கேள்வியைப் பற்றி கவலைபடாமலும்..., இதற்கு பதில் தேடியும் பல நடைபிணங்கள் நம்மிடையே அனுதினம் உலாவிக்கொண்டிருக்கின்றன... நானாகவும், நீங்களாகவும்!!!


இதற்கான பதில் நம் வாழ்வின் ஒவ்வொரு கால கட்டத்திலும் நம் அனுபவத்திற்கும், வயதிற்கும் ஏற்றவாறு மாறிக்கொண்டே வந்திருக்கும்.


நான் ஆறாவது வகுப்பு படிக்கையில் என்னைவிட ஒரு வயது மூத்த இளங்குமரன் தமிழ் பேச்சுப்போட்டியில் தனக்கே உரித்தான பாணியில் உச்சரிப்பையும், கருத்துச் செறிவையும் அள்ளி வீசும்பொழுது, தள்ளி நின்று ரசித்து அவனைபோல பேசி இந்த பார் ஏட்டிடம் பாராட்டை வாங்கிவிட வேண்டுமென்பது வாழ்வின் அர்த்தமாக இருந்தது.


மாடு மேய்க்கதான் போகனும்,பிச்ச தான் எடுக்கனும் நல்ல மார்க் எடுக்கலைனா... என்று அப்பா அடிக்கடி வயிற்றில் புளியை(புளி மட்டுமா...மிளகு,கடுகு என்று அனைத்தையும் தான்!) கரைக்கும்பொழுது,எப்படியாவது நல்ல மதிப்பெண் எடுத்து விட வேண்டுமே என்பது பத்தாம் வகுப்பு படிக்கையில் வாழ்வின் அர்த்தமாக இருந்தது.


டேய் ஒரு 100 ரூவா உன்னால ரெடி பண்ண முடியாதாடா... என்று மதுபானக்கடையில் அமர்ந்து கொண்டு, இங்க பாருங்கடா இனிமே மாசத்துல ஒரு தடவையாவது கண்டிப்பா தண்ணி அடிக்கனும். சரக்கு, சைடிஷுக்கெல்லாம் சேத்து 100 ரூவா போதும்,எப்படியாவது ரெடி பண்ணிடுங்க என்று பள்ளித்தோழர்களிடம் வியாக்கியானம் பேசி வரையறையை முடிவு செய்தது அந்த நேரத்தில் வாழ்வின் அர்த்தமாக இருந்தது.


முதல் முறையாக கல்லூரியில் இடம்...முதல் காதல்...முதல் வேலை...திருமணம்...முதல் வெளி நாட்டு பயணம் இப்படியாக அனைத்து முதலுமே முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும், வாழ்வின் அர்த்தத்ததிற்கான பதிலாகவும் அந்தந்த கால கட்டத்தில் இருந்திருக்கிறது.


இதற்கு அப்பாற்பட்டு சிறு வயதிலிருந்து நான் சந்தித்த சில விடயங்கள், நபர்கள் என் கவனத்தை இப்பொழுது அதன் பக்கம் ஈர்க்க வைக்கிறது.....சற்றே கவனத்தை சிதற வைக்கிறது.


வாரம் ஒரு முறை தவறாமல் வீட்டு வாசலில் கை ஏந்தி நிற்கும் தொழு நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்.


பசியின் கொடுமையால் தன்மானத்தை மறந்து தன் மானத்தை மறைக்க ஏதும் இல்லாது என்னை கும்பிட்ட வறியவர்.


வெயிலில் நடந்தாலே நொந்து போகும் நமக்கு மத்தியில் உடல் வெந்து போனாலும் தார் சாலையில் படுத்துறங்கும் பெரியவர்.


வேலை, வேலை என்று அலைந்து தனக்கும் தன் குடும்பத்திற்கும் சொத்து மேல் சொத்து சேர்த்து , மூன்று வேலையும் நன்றாக உண்டு அதில் சிறிது உடலுக்குள் சேர்த்து,கழிவை வெளித்தள்ளியே காலம் தள்ளும் நமக்கு இதை பற்றிய சிந்தனை,செயலெல்லாம் மிகவும் அரிதென்பதை என்னவென்று சொல்ல.


என்ன தான் நல்ல வேலை கிடைத்ததும் சில சமுதாய சேவையில் நேரத்தையும் , சிந்தனையையும், செயலையும் நான் செலவழித்தாலும் காலம் போகிற போக்கில் சுய நல புதை குழிக்குள் சிக்கி பழகிக்கொண்ட இந்த மூளை கடிவாளம் போட்ட குதிரையாகவும் , கீ கொடுத்த எந்திரமாகவும் பயணிப்பதிலேயே வழக்கமாகக் கொண்டு விட்டது.


இந்த நேரத்தில் தான் எதேச்சையாக இந்த வீடியோவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சிலருக்கு இவர் கடவுள். வேறு பலருக்கோ இவர் பிழைக்க தெரியாதவர்,முட்டாள்,பைத்தியம்...இவருக்கு முன்பு நாம் ஒன்றுமில்லை ஆனால் இது போல் ஏதாவது ஒன்றை நம்மால் முடிந்த அளவிலாவது நாம் செய்யாமலிருந்தால் நம் வாழ்விற்கு அர்த்தமுமில்லை... இப்படியாக வாழ்வின் அர்த்தம் தேடிக்கொண்டும், தேடிய அர்த்தம் கிடைத்தாலும் அதில் முழுமையாக ஈடுபடாத குற்ற உணர்ச்சி கொண்ட மனத்துடன் பயணிக்கும் உங்களுடன் சேர்ந்த நானும், என் மூளையும்!!!!!!


http://ibnlive.in.com/news/real-hero-krishnan-gets-international-recognition/243324-62-128.html

Monday, September 3, 2012

இன்றைய அனுபவம் (01.09.2012) - தலைமுறை படிப்பினை


என் மகனுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க எப்பொழுதும் போல இந்த வாரமும் நீச்சல் குளத்திற்கு சென்றிருந்தேன். (குறிப்பு :- அவனுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் அளவிற்கு நான் ஒன்றும் கை தேர்ந்த..... கால் தேர்ந்த பயிற்ச...ியாளன் எல்லாம் ஒன்றும் இல்லை,3 வயதை நெருங்கும் அவன் கற்றுக்கொள்ளும் அதே நீச்சலை நான் 30 வயதில் கற்றுக் கொண்டு அவனுக்கும் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன் அவ்வளவு தான்!)

அங்கு ஒரு மெக்ஸிகன் குடும்பம். 35 அல்லது 40 வயதையொத்த ஒருவர் 5 சிறுவர்களோடு(10 வயதிற்கு கீழ் தான் அனைவர் வயதும் இருக்கும்) ,அதில் இளைய வயதுடைய சிறுவனுக்கு நீச்சல் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். நான் இதுவரை நீச்சலில் கற்றுக்கொண்டது சாதாரண நீச்சல்,தண்ணீருள் மூழ்கி நீந்துவது,தண்ணீரில் மிதப்பது(தலை கீழ் நோக்கி). நான் மிதப்பதை அந்த சிறுவர்களில் ஒருவன் ஆச்சரியமாக பார்த்து எப்படி மிதக்கிறீர்கள் என்று கேட்டான், அவனுக்கு ஒரு 7 வயது இருக்கலாம். நானும் அவனுக்கு மூச்சை அடக்கிக்கொண்டால் இவ்விதம் மிதப்பது சுலமபென விளக்கினேன். அடுத்த நிமிடமே அந்த சிறுவன் அவ்வாறு மிதந்து காண்பித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்புறமாக மிதந்து செல்வது எப்படி என்பதை எனக்கு செய்து காண்பித்தான்,மேலும் த்லை மேல் நோக்கி மிதப்பதை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்.

என்னிடம் நீச்சலில் போட்டி போடலாமா என்று கேட்டான். நானும் உன்னை போல் தான்... இப்பொழுது தான் நீச்சல் கற்றுக்கொண்டிருக்கிறேன்,உன்னளவிற்கு கூட நீச்சலில் நான் சிறந்தவன் அல்ல என்று விளையாட்டாகக் கூறினேன் அது ஒரு விதத்தில் உண்மையும் கூட. அந்த சிறுவர்களின் நீச்சல் நேர்த்தி அவ்வளவு அற்புதமாக இருந்தது.என்னை அவன் நீச்சலில் சிறந்தவனாக தவறுதலாக நினைத்திருக்கக் கூடும்! நான் தண்ணீருக்குள் நீந்துவதை பார்த்தும், மிதப்பதை பார்த்தும் அவன் எனக்கு கொடுத்த பாராட்டு பத்திரம்... நீங்கள் சிறப்பாக நீந்துபவராக இருக்க முடியும் என்பது.....அவனின் பாராட்டு மகிழ்ச்சி அளித்தாலும்,அவன் கூறிய மறு நிமிடம் என்னை சற்றே பின்னோக்கி பார்த்தேன்...கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத பின்னோக்கிய பயணம் அது, கிட்டத்தட்ட 25 வருட பின்னோக்கிய பயணம்.

நான் கற்றுக்கொள்ள விரும்பும் எந்தவொரு விடயத்திற்கும் அது கவிதையாகட்டும்,உடற்பயிற்சியாகட்டும்,தற்காப்பு கலையாகட்டும்,விளையாட்டாகட்டும் என் பெற்றோர் தரும் விமர்சனம்... முதல்ல படிக்குற வழிய பாரு, படிக்கும் போது வேறெங்கையும் கவனம் சிதறக்கூடாது என்பது. நான் என் பெற்றோரை குறை சொல்லவில்லை அவர்களை போல இருக்கும் பல பெற்றோர்களின் மன நிலைக்காக வருத்தப்படுகிறேன் முக்கியமாக நமது நாட்டில்...

ஒரு கோடைக்காலத்தில் நான் கற்றுக்கொள்ள சென்ற கைப்பந்தாட்டம் கூட சூட்டோடு சூடாக கோடை முடிந்ததமும் சோடை போனது!

பிற்காலத்தில் நான் வேலைக்கு சென்றதும் நான் கற்றுக்கொள்ள நினைத்த விடயங்களை கற்றுக்கொள்ளும்போதும் கூட அவர்கள் வைத்த விமர்சனம்...இதெல்லாம் கத்துட்டு என்ன பண்ண போற என்பது. அவர்கள் மன நிலை மாறவில்லை,அவர்களை குற்றம் சொல்வதை விட என் தலைமுறைக்கு மாறிய மன நிலையை நான் தருவதே சரியானதாகும்.

ஆரம்பகாலத்தில் அவர்களின் உந்துசக்தி கிடைக்காததால்தான் என்னவோ,பிற்காலத்தில் எனக்கு உந்து சக்திகளாக கிடைத்த நபர்கள் பலரை சந்தர்ப்ப சூழ்னிலை காரணமாக இழக்கும்பொழுது மிகவும் வருந்தியிருக்கிறேன்.

நம் தலைமுறைக்கு படிப்பிற்கு அப்பாற்பட்டு அனைத்து விடயங்களையும் நாம் சொல்லித்தர வேண்டும், அவர்களின் விருப்பமும், ஆர்வமும் எதில் இருக்கிறதோ அதை ஊக்கப்படுத்த வேண்டும், நிச்சயமாக அதில் அவர்கள் சிறந்தவர்களாக வர முடியும்,வருவார்கள். படிப்பை எந்த விதத்திலும் அந்த விடயங்கள் தடை செய்யாது, இன்னும் சொல்லப்போனால் அவர்களின் மன நிலை,உடல் திறன் மேம்பட்டு படிப்பில் சாதிக்க அந்த விடயங்கள் உறுதுணையாகவே அமையும்.

என் வாழ்க்கை 30 வயதை கடந்து விட்டது,இப்பொழுது என் மகனை திரும்பி பார்த்தேன். பாதுகாப்பு வளையத்தின் உள்ளே தன் கை ,கால்களின் மூலம் நீச்சலுக்கான அச்சாணியை அடித்துக்கொண்டிருந்தான்.ஒரு 25 அல்லது 30 வருடங்கள் கழித்து அவன் தன் வாழ்வை பின்னோக்கி திரும்பி பார்த்து வருத்தப்படும் நிலையில் இருக்கக்கூடாது என்பதிலேயே எனது கவனம் அதிகமாக இருந்தது.

குழந்தைகள் நம் மூலமாகப் பிறந்தவர்கள், நமக்காகப் பிறந்தவர்கள் அல்ல. இந்த உலகை அவர்கள் கண்கள் மூலமாகவே பார்க்கட்டும், உங்களின் கண்கள் மூலமாக பார்க்க நீங்கள் வற்புறுத்தாதீர்கள். அவர்களின் பார்வைக்கு உறுதுணையாகவும்,உந்து சக்தியாகவும் இருங்கள்... எனக்கு பிகவும் பிடித்த,பரிச்சயமான வரிகள் இவை. இந்த உலகை காணும் வாசல் அனைத்தையும் திறந்து வைத்துக்கொண்டிருக்கிறேன் என் மகனுக்காக...அவனின் கண்கள் மூலமாக எந்த வாசலில் இந்த உலகை காண விருப்பபடுகிறானோ அது அவன் விருப்பம். அந்த வாசலில் அவனுக்கு உறுதுணையாகவும்,உந்து சக்தியாகவும் என் தோள்களும்,விமர்சனங்களும் இருக்கும்.....