Sunday, November 28, 2010

சித்தர்கள் என்பவர் யார்???

முதலில் சித்தர்கள் என்ற சொல்லின் விளக்கத்தை காணலாம்...'உலகியலை துறந்தவர்கள்' , 'உலக நடப்பிலிருந்து வேறுபட்டவர்கள்', 'சித்துக்கள் ஆடுவதில் வல்லவர்கள்'....

சரி சித்துக்கள்,சித்தம் என்றால் என்ன???மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம் ஆகிய நான்கும் 'அந்தக்கரணம்'எனப்படும்.இந்த நான்கில் மனம் ஒன்றை நினைக்கும்,அந்த நினைப்பை புத்தி நிச்சயிக்கும்,அடுத்து அகங்காரம் முனைப்பை ஏற்படுத்தும்...இந்த மூன்றுக்கும் மூலகாரணம் தான் சித்தம்.இவற்றில் அசுத்த மாயையில் தோன்றும் சித்தத்தாலேயே ஐம்பொறிகளும்,தன்மாத்திரைகளும்,கர்மேந்திரியங்களும் இயங்குகின்றன.

ஐம்பொறிகள் - மெய்,வாய்,கண்,மூக்கு.செவி
தன்மாத்திரைகள் - சுவை,ஒளி,ஊறு,ஓசை, நாற்றம்
கர்மேந்திரியங்கள் - வாய்,கை,கால்,கருவாய்,எழுவாய்

சித்தர் நெறி ---->


1) வாதம் (Alchemy)

2) வைத்தியம் (Medicine)

3) யோகம் (Yoga)

4) ஞானம் (Wisdom)

யோகம் சைவ நாற்பாதங்களில் மூன்றாவது படியாகக் கூறப்படுவதாகும். சரியை, கிரியை ஆகிய நெறிகளை விட மேலானதாக இந்நெறி சாத்திர நூல்களில் கூறப்படுகின்றது. இதற்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய அட்டாங்க யோக உறுப்புக்கள் உள்ளன. இவ்வட்டாங்க யோகங்களிலும் பயிற்சி பெற்று படிப்படியாகத் தேறியவரே யோக நெறியை அனுசரிக்க முடியும். இதனை யோகியரிடம் பயின்ற திடசித்த முடையவர்களே அனுட்டித்து ஈடேற முடியும். இந்நெறி நட்பு மார்க்கமாக ஒழுக வேண்டியதால் இந்நெறி மூலம் சாரூப முத்தியும் சிவரூபம் பெறும் பாக்கியமும் பெறுவர். இச்சக மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.

யோகச் சமாதியின் உள்ளே அகலிடம்

யோகச் சமாதியின் உள்ளே உளர் ஒளி

யோகச் சமாதியின் உள்ளே உள சக்தி

யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.

இந்த வரலாற்று உண்மைகளை மறைத்து, யோகா என்கின்ற சொல் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது எனவும் (எந்த காலத்தில் அந்த சொல் தமிழிலிருந்து சென்றது என்பது தெரியவில்லை), யோகாவின் மூலம் ஹிந்து மதம் எனவும் இந்த உலகிற்கு பறை சாற்றுவதை பார்த்தால் வயிற்றெரிச்சலாக இருக்கிறது. இந்த வரலாற்று திரிபை உள்வாங்கிக்கொண்டு, வரலாற்று உண்மையை மறந்து கொண்டு, மறைத்துக் கொண்டு எத்தனை நாள் ஹிந்தியனாக வாழப் போகிறோம்? நமக்கென, நம் இனத்திற்கென, நம் மொழிக்கென, நம் வரலாற்றிற்கென இருக்கும் அடையாளத்தை காக்க நம்மை நாமே தனிமைப்படுத்துவது அவசியம்!!!

சிதம்பரத்தில் வாழ்ந்த சித்தர்களுள் ஒருவரான பதஞ்சலி முனி தான் யோகக் கலை அனைத்தையும் தொகுத்து பதஞ்சலி யோக சூத்திரம் என்கின்ற பெயரில் உலகிற்கு அளிக்கிறார், இன்று உலகில் எந்த மூலையில் யோகக் கலையை கற்றுத்தரும் எவரும் இந்த உண்மையை உரைத்தது இல்லை. யோகாவின் பூர்வீகம் ஹிந்தியா, யோகா என்கின்ற வார்த்தை சமஸ்கிருதத்திலிருந்து வந்தது மேலும் ஹிந்து மதமே யோகாவின் மூலம். இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் ஏன் அண்ணா ஹிந்தி கட்டாயபாடமாக்குவதை ஏன் எதிர்த்தார் என்று.....ஒரு மொழியையும், வரலாற்றையும் அழிப்பது மிகவும் சுலபமான காரியம், ஆதிப்பெருமை கொண்ட நாம் அதற்கு உடன்படுவது மிகவும் வருத்தத்திற்குரியது. யோகாவை கற்றுக் கொண்டு அதன் உண்மை வரலாற்றை உலகறியச் செய்யுங்கள்.

சித்தர்கள் வணங்கியது சிவனை தானே...அவர் ஹிந்து மதத்திற்கு உரிவர் தானே என்று சிலர் நினைக்கலாம். என்னைப் பொறுத்தவரை நான் அறிந்தவரை சித்தர்கள் சிவனை வழிபட்டதும் தமிழர் வழிபாடான முன்னோர் வழிபாட்டை அடிப்ப்டையாகக் கொண்டதே...சிவனும் சித்தர் வடிவில் இருப்பதே அதற்கு சாட்சி.... மேலும் சிவன் என்கின்ற சொல்லாடலே சீவன் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து வருகிறது, அதாவது அனைத்திற்கும் உயிரே மூலம்...சக்தியே மூலம்...சீவனே மூலம்...அந்த சீவனே மருவி சிவனாக ஆகியிருக்கக் கூடும், அந்த சீவனே பிற்காலத்தில் ஜீவனானது. பிற்காலத்தில் அனைத்திற்கும் கதை புனைந்தது போல் சிவனிற்கும் புனைந்து அதில் பல ஆபாச புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டது....புராணத்தில்,இதிகாசத்தில் அவரை இணைத்தது....இதற்கெல்லாம் யார் காரணம்???!!!


சித்தர்கள் பல்வேறு கால கட்டங்களில் ஒரே பெயரிலும் அறியப்பட்டதுமுண்டு.....திருவள்ளுவர் மற்றும் அவ்வையையும் சித்தர்கள் என்றும் சொல்லப்படுவதும் உண்டு.....ஒரு மதத்திற்கு உரியவர்களாக அவர்களை உரைப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல...அவர்களின் மருத்துவ முறை மற்றும் யோக முறை உலகளாவிய அளவில் பெயர் பெறும்பொழுது அவர்களை ஒரு மதத்திற்கு உரியவராக காண்பிப்பது அந்த மதத்தின் பெயரை காப்பாற்றுவதற்கே என்பது தவிர வேறு எதுவும் இல்லை!!!
சாதி,சமய,வழிபாட்டு சடங்குகளை கடுமையாக சாடியதாலும்,பிற்காலத்தில் புகுந்து எண்ணிக்கையில் நிறைந்திருந்த பொய்யான இறை நெறியாளர்களை கண்டித்ததாலும் அவர்களின் வரலாறு எதிர்பாளர்களால் காலப்போக்கில் இருட்டடிப்பு செய்யப்பட்டது.....
கடைசி சித்தரென பெரும்பாலானவர்களால் அறியப்பட்ட வள்ளலாரை பற்றி இந்த நேரத்தில் பேசுவது அவசியமாகும்.அவருடைய 6 திருமறைகளில்...முதல் 5 திருமறை மற்றும் ஆறாவது திருமறையையும் விவாதிப்பது முக்கியமானதாகும்....என்ன தான் முதல் 5 திருமறைகளில் அவர் இறை வழிபாட்டை பற்றி பாடியிருந்தாலும் எந்த திருமறையிலும் அவர் சாதி,சமய சடங்குகளை அவர் பேசியதில்லை...மேலும் 1870க்கு பிறகு அதாவது 6வது திருமறையில் அவர் முற்றிலும் வேறுபட்டு ஜோதி வழிபாடு மற்றும் சுடரை வணங்குவதை குறிப்பிடுகிறார் மேலும் முக்கியமாக சமரச வேத சன்மார்க்க சங்கம் என்பதை சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்று மாற்றுகிறார்,சாதி,மதம்,சாத்திரம்,கோத்திரம் எல்லாவற்றையும் மறுத்திருக்கிறார்.1873க்கு பிறகு தன் கருத்தை நேரிடையாக பின்வருமாறு பதிவு செய்கிறார்...சைவம்,வைணவம் ஆகிய சமயங்களிலும்,சித்தாந்தங்களிலும் லட்சியம் வைக்காதிருங்கள் என்கிறார்,மனித நேயம்,உயிர்களை அரவணைத்துப்போவது இவைகளில் மனம் செலுத்துங்கள் என்கிறார்.அவர் எப்பொழுது சாதி சமயங்களிலிருந்து விடுபட்டு மனித நேயம் அதை ஒட்டி இருக்கிற பகுத்தறிவிற்கு வந்தாரோ அப்பொழுது தான் அவருக்கு நேரடி எதிர்ப்பு கிளம்பியது. தன் நிலையை தெளிவாக சொன்ன 1874 சனவரி 24க்கு பிறகு ..சரியாக 3 மாதங்களுக்கு பிறகு அவர் உள்ளே போனார் வெளியெ வரவில்லை,ஜோதியிலே கலந்தார் என்று சொல்லப்படுகிறது...அதாவது எப்போது இந்த சமயம்,தத்துவ சண்டைகளையெல்லாம் மறுத்தாரோ,எப்போது சைவம்,வைணவத்திற்கு எதிராக ஆழமான கருத்துக்களை சொல்லத் தொடங்கினாரோ ,மூட நம்பிக்கைகளை கொளுத்த வேண்டும் என்றாரோ,எப்போது இந்த சித்து எல்லாம் எனக்கு சிறு பிள்ளை விளையாட்டு என்று அறிவித்தாரோ அப்போடு தான் வள்ளலார் ஜோதியில் கலந்ததாக சொல்லப்படுகிறார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்...இன்று அவரை எதிர்த்தவர்களின் வழி வந்தவர்கள் ,ஜோதியில் அவர் கலந்துவிட்டார் என்று ஊர் உலகை நம்ப வைத்தவர்களின் வழி வந்தவர்கள் தங்களை நடு நிலை வாதிகளாக காண்பித்துக் கொள்ள ஒரு மதம் சார்பாக அவரை தூக்கி வைத்து பேசுவதையும் கரு்த்தில் கொள்வது அவசியம்!!!