Sunday, November 28, 2010

சித்தர்கள் என்பவர் யார்???

முதலில் சித்தர்கள் என்ற சொல்லின் விளக்கத்தை காணலாம்...'உலகியலை துறந்தவர்கள்' , 'உலக நடப்பிலிருந்து வேறுபட்டவர்கள்', 'சித்துக்கள் ஆடுவதில் வல்லவர்கள்'....

சரி சித்துக்கள்,சித்தம் என்றால் என்ன???மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம் ஆகிய நான்கும் 'அந்தக்கரணம்'எனப்படும்.இந்த நான்கில் மனம் ஒன்றை நினைக்கும்,அந்த நினைப்பை புத்தி நிச்சயிக்கும்,அடுத்து அகங்காரம் முனைப்பை ஏற்படுத்தும்...இந்த மூன்றுக்கும் மூலகாரணம் தான் சித்தம்.இவற்றில் அசுத்த மாயையில் தோன்றும் சித்தத்தாலேயே ஐம்பொறிகளும்,தன்மாத்திரைகளும்,கர்மேந்திரியங்களும் இயங்குகின்றன.

ஐம்பொறிகள் - மெய்,வாய்,கண்,மூக்கு.செவி
தன்மாத்திரைகள் - சுவை,ஒளி,ஊறு,ஓசை, நாற்றம்
கர்மேந்திரியங்கள் - வாய்,கை,கால்,கருவாய்,எழுவாய்

சித்தர் நெறி ---->


1) வாதம் (Alchemy)

2) வைத்தியம் (Medicine)

3) யோகம் (Yoga)

4) ஞானம் (Wisdom)

யோகம் சைவ நாற்பாதங்களில் மூன்றாவது படியாகக் கூறப்படுவதாகும். சரியை, கிரியை ஆகிய நெறிகளை விட மேலானதாக இந்நெறி சாத்திர நூல்களில் கூறப்படுகின்றது. இதற்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய அட்டாங்க யோக உறுப்புக்கள் உள்ளன. இவ்வட்டாங்க யோகங்களிலும் பயிற்சி பெற்று படிப்படியாகத் தேறியவரே யோக நெறியை அனுசரிக்க முடியும். இதனை யோகியரிடம் பயின்ற திடசித்த முடையவர்களே அனுட்டித்து ஈடேற முடியும். இந்நெறி நட்பு மார்க்கமாக ஒழுக வேண்டியதால் இந்நெறி மூலம் சாரூப முத்தியும் சிவரூபம் பெறும் பாக்கியமும் பெறுவர். இச்சக மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.

யோகச் சமாதியின் உள்ளே அகலிடம்

யோகச் சமாதியின் உள்ளே உளர் ஒளி

யோகச் சமாதியின் உள்ளே உள சக்தி

யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.

இந்த வரலாற்று உண்மைகளை மறைத்து, யோகா என்கின்ற சொல் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது எனவும் (எந்த காலத்தில் அந்த சொல் தமிழிலிருந்து சென்றது என்பது தெரியவில்லை), யோகாவின் மூலம் ஹிந்து மதம் எனவும் இந்த உலகிற்கு பறை சாற்றுவதை பார்த்தால் வயிற்றெரிச்சலாக இருக்கிறது. இந்த வரலாற்று திரிபை உள்வாங்கிக்கொண்டு, வரலாற்று உண்மையை மறந்து கொண்டு, மறைத்துக் கொண்டு எத்தனை நாள் ஹிந்தியனாக வாழப் போகிறோம்? நமக்கென, நம் இனத்திற்கென, நம் மொழிக்கென, நம் வரலாற்றிற்கென இருக்கும் அடையாளத்தை காக்க நம்மை நாமே தனிமைப்படுத்துவது அவசியம்!!!

சிதம்பரத்தில் வாழ்ந்த சித்தர்களுள் ஒருவரான பதஞ்சலி முனி தான் யோகக் கலை அனைத்தையும் தொகுத்து பதஞ்சலி யோக சூத்திரம் என்கின்ற பெயரில் உலகிற்கு அளிக்கிறார், இன்று உலகில் எந்த மூலையில் யோகக் கலையை கற்றுத்தரும் எவரும் இந்த உண்மையை உரைத்தது இல்லை. யோகாவின் பூர்வீகம் ஹிந்தியா, யோகா என்கின்ற வார்த்தை சமஸ்கிருதத்திலிருந்து வந்தது மேலும் ஹிந்து மதமே யோகாவின் மூலம். இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் ஏன் அண்ணா ஹிந்தி கட்டாயபாடமாக்குவதை ஏன் எதிர்த்தார் என்று.....ஒரு மொழியையும், வரலாற்றையும் அழிப்பது மிகவும் சுலபமான காரியம், ஆதிப்பெருமை கொண்ட நாம் அதற்கு உடன்படுவது மிகவும் வருத்தத்திற்குரியது. யோகாவை கற்றுக் கொண்டு அதன் உண்மை வரலாற்றை உலகறியச் செய்யுங்கள்.

சித்தர்கள் வணங்கியது சிவனை தானே...அவர் ஹிந்து மதத்திற்கு உரிவர் தானே என்று சிலர் நினைக்கலாம். என்னைப் பொறுத்தவரை நான் அறிந்தவரை சித்தர்கள் சிவனை வழிபட்டதும் தமிழர் வழிபாடான முன்னோர் வழிபாட்டை அடிப்ப்டையாகக் கொண்டதே...சிவனும் சித்தர் வடிவில் இருப்பதே அதற்கு சாட்சி.... மேலும் சிவன் என்கின்ற சொல்லாடலே சீவன் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து வருகிறது, அதாவது அனைத்திற்கும் உயிரே மூலம்...சக்தியே மூலம்...சீவனே மூலம்...அந்த சீவனே மருவி சிவனாக ஆகியிருக்கக் கூடும், அந்த சீவனே பிற்காலத்தில் ஜீவனானது. பிற்காலத்தில் அனைத்திற்கும் கதை புனைந்தது போல் சிவனிற்கும் புனைந்து அதில் பல ஆபாச புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டது....புராணத்தில்,இதிகாசத்தில் அவரை இணைத்தது....இதற்கெல்லாம் யார் காரணம்???!!!


சித்தர்கள் பல்வேறு கால கட்டங்களில் ஒரே பெயரிலும் அறியப்பட்டதுமுண்டு.....திருவள்ளுவர் மற்றும் அவ்வையையும் சித்தர்கள் என்றும் சொல்லப்படுவதும் உண்டு.....ஒரு மதத்திற்கு உரியவர்களாக அவர்களை உரைப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல...அவர்களின் மருத்துவ முறை மற்றும் யோக முறை உலகளாவிய அளவில் பெயர் பெறும்பொழுது அவர்களை ஒரு மதத்திற்கு உரியவராக காண்பிப்பது அந்த மதத்தின் பெயரை காப்பாற்றுவதற்கே என்பது தவிர வேறு எதுவும் இல்லை!!!
சாதி,சமய,வழிபாட்டு சடங்குகளை கடுமையாக சாடியதாலும்,பிற்காலத்தில் புகுந்து எண்ணிக்கையில் நிறைந்திருந்த பொய்யான இறை நெறியாளர்களை கண்டித்ததாலும் அவர்களின் வரலாறு எதிர்பாளர்களால் காலப்போக்கில் இருட்டடிப்பு செய்யப்பட்டது.....
கடைசி சித்தரென பெரும்பாலானவர்களால் அறியப்பட்ட வள்ளலாரை பற்றி இந்த நேரத்தில் பேசுவது அவசியமாகும்.அவருடைய 6 திருமறைகளில்...முதல் 5 திருமறை மற்றும் ஆறாவது திருமறையையும் விவாதிப்பது முக்கியமானதாகும்....என்ன தான் முதல் 5 திருமறைகளில் அவர் இறை வழிபாட்டை பற்றி பாடியிருந்தாலும் எந்த திருமறையிலும் அவர் சாதி,சமய சடங்குகளை அவர் பேசியதில்லை...மேலும் 1870க்கு பிறகு அதாவது 6வது திருமறையில் அவர் முற்றிலும் வேறுபட்டு ஜோதி வழிபாடு மற்றும் சுடரை வணங்குவதை குறிப்பிடுகிறார் மேலும் முக்கியமாக சமரச வேத சன்மார்க்க சங்கம் என்பதை சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்று மாற்றுகிறார்,சாதி,மதம்,சாத்திரம்,கோத்திரம் எல்லாவற்றையும் மறுத்திருக்கிறார்.1873க்கு பிறகு தன் கருத்தை நேரிடையாக பின்வருமாறு பதிவு செய்கிறார்...சைவம்,வைணவம் ஆகிய சமயங்களிலும்,சித்தாந்தங்களிலும் லட்சியம் வைக்காதிருங்கள் என்கிறார்,மனித நேயம்,உயிர்களை அரவணைத்துப்போவது இவைகளில் மனம் செலுத்துங்கள் என்கிறார்.அவர் எப்பொழுது சாதி சமயங்களிலிருந்து விடுபட்டு மனித நேயம் அதை ஒட்டி இருக்கிற பகுத்தறிவிற்கு வந்தாரோ அப்பொழுது தான் அவருக்கு நேரடி எதிர்ப்பு கிளம்பியது. தன் நிலையை தெளிவாக சொன்ன 1874 சனவரி 24க்கு பிறகு ..சரியாக 3 மாதங்களுக்கு பிறகு அவர் உள்ளே போனார் வெளியெ வரவில்லை,ஜோதியிலே கலந்தார் என்று சொல்லப்படுகிறது...அதாவது எப்போது இந்த சமயம்,தத்துவ சண்டைகளையெல்லாம் மறுத்தாரோ,எப்போது சைவம்,வைணவத்திற்கு எதிராக ஆழமான கருத்துக்களை சொல்லத் தொடங்கினாரோ ,மூட நம்பிக்கைகளை கொளுத்த வேண்டும் என்றாரோ,எப்போது இந்த சித்து எல்லாம் எனக்கு சிறு பிள்ளை விளையாட்டு என்று அறிவித்தாரோ அப்போடு தான் வள்ளலார் ஜோதியில் கலந்ததாக சொல்லப்படுகிறார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்...இன்று அவரை எதிர்த்தவர்களின் வழி வந்தவர்கள் ,ஜோதியில் அவர் கலந்துவிட்டார் என்று ஊர் உலகை நம்ப வைத்தவர்களின் வழி வந்தவர்கள் தங்களை நடு நிலை வாதிகளாக காண்பித்துக் கொள்ள ஒரு மதம் சார்பாக அவரை தூக்கி வைத்து பேசுவதையும் கரு்த்தில் கொள்வது அவசியம்!!!

Monday, March 8, 2010

நாம் இந்துக்களா?

இந்திய பழங்குடி வம்சா வழியைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்களான நாகர்களுக்கு,திராவிடர்களுக்கு,தமிழர்களுக்கு கற்பனைக் கடவுளர்களோ,அதன் மூலம் எழுந்த மதங்களோ,அதன் மூலம் பிரிந்த சாதிகளோ கிடையாது.தமக்கு உணவளித்த சூரியனையும்,மழையையும் வணங்கினார்கள்(மரியாதை நிமித்தமாக...)தமிழர் பண்டிகையான பொங்கலும் அதை பறை சாற்றுவதை காணாலாம்.முன்னோர்களை வணங்கினார்கள்,அந்த வழிப்பாட்டின் வெளிப்பாடு தான் அய்யனார் வழிபாடும்,காளி,அம்மன் மற்றும் முனீஸ்வர வழிபாடும்.இதுவே சிறு தெய்வ வழிபாடென பிற்காலத்தில் அறியப்பட்டது.

அதன் பிறகு கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு முன்னர் கைபர்,போலன் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள்,தாங்கள் இந்த சமுதாயத்தில் உயர்ந்த மற்றும் மேம்பட்ட நிலையில் நிலை நிறுத்திக் கொள்ள அவர்கள் கையிலெடுத்த ஆயுதமே கற்பனைக் கடவுளர்களும்,சாதியும்.அவர்களின் சிவந்த நிறமும் நம் மன்னர்களின் மத்தியில் உயர் நிலையை அடைவதற்கு உறுதுணையாக இருந்தது.முதலில் பெண்களை மன்னர்களுக்கு கூட்டிக் கொடுக்கும்(பார்ப்பு என்பது பெண்களை கூட்டிக் கொடுத்தல் என்பதாகும்,அதுவே பிற்காலத்தில் பார்ப்பனர்கள் என்று ஆயிற்று) வேலையை செய்த அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மன்னர்களின் நம்பிக்கைக்குரியவராகி அவர்களுக்கு நிரந்தர ஆலோசகராகவும் ஆயினர்,மன்னர்கள் மூலமாக நிலம் மற்றும் இதர வசதிகளையும் பெற்றனர்.குளிர் பிரதேசத்தில் நெருப்பை அவர்கள் தங்களின் உடம்பை சூடேற்றுவதற்கு பயன்படுத்தியமையால் அந்த நெருப்பின் பயன்பாடு அவ்ர்களின் சராசரி வாழ்க்கையிலும் தொடர்ந்து வருகிறது அதற்கான சிறந்த உதாரணம் அவர்களின் திருமண முறையில் அக்னி வளர்ப்பது.திராவிடர்கள் போலவே அவர்களுக்கும் ஆரம்பத்தில் கற்பனைக் கடவுளர்களோ,மதமோ கிடையாது.ஆனால் கடவுளர்களையும்,சாதியையும் உருவாக்கினர் நான் ஏற்கனவே கூறியது போல் அவர்கள் இந்த சமுதாயத்தில் தங்களை மேம்பட்ட,உயர்ந்த நிலையில் நிறுத்திக் கொள்வதற்காக...

அவர்கள் பயன்பாட்டில் இருந்த நெருப்பை அக்னி பகவான் என்றனர், திராவிடர்கள் வணங்கிய சூரியன் சூரிய பகவான் ஆனது, நீர் வருண பகவான் ஆனது அதற்கு பல கதைகளும் உருவாக்கப்பட்டது,கடவுளர்கள் உருவாயினர்.4 ரிக்,யஜுர்,சாம,அதர்வண) வேதங்கள்,6 வேதாந்தங்கள் மற்றும் 108 உப நிடதங்கள் உருவாயின.4 வேதஙகள் மூலம் 6(சிஷ்யை,கல்பகம்,வியாகரனம், நிருத்தம்,சந்தஸ்,ஜோதிடம்) உப நிடதங்கள் உருவாயின.இராமயண,மகாபாரத புராண இதிகாசங்கள் எழுதப்பட்டது இதற்கெல்லாம் அடி நாதமாக முதலில் எழுந்த நூல் ஆரிய மன்னன் மனு எழுதிய மனுதர்மம்.படைக்கும் கடவுள்,காக்கும் கடவுள்,அழிக்கும் கடவுள் பற்றிய விளக்கங்கள் முக்கியமாக வருணாசிரம அடிப்படையில் எழுதப்பட்ட சாதிப்பிரிவுகளும் இதில் அடக்கம்.
அவர்களின் கதை நாயகர்களான சிவன்,பிரம்மா மற்றும் விஷ்ணு அதன் மூலம் வந்த வினாயகர்,அய்யப்பன் (ஏன் இங்கு முருகன் வரவில்லை!? அதற்கான விளக்கத்தை பிறகு தருகிறேன்)இவர்களை வழிபடும் முறையெல்லாம் பிற்காலத்தில் பெரு தெய்வ வழிபாட்டு முறையென அறியப்பட்டது.ஆரியர்கள் தேவர்கள் ஆயினர் அவர்களின் தலைவன் இந்திரன் உருவாக்கப்பட்டார்,திராவிடர்கள் அசுரர்கள்,அரக்கர்கள் ஆயினர் அவர்களின் தலைவனாக இராவணன் உருவாக்கப்பட்டார்.அலகு குத்துதல்,தலையில் தேங்காய் உடைப்பது மற்றும் சாமி வந்து ஆடுதல் அனைத்துமே சிறு தெய்வ வழிபாட்டின் வழிபடும் முறையாக பிற்காலத்தில் கொண்டுவரப்பட்டதே...
சிந்துவெளி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சிவ லிங்கங்களும்,கூத்தாடும் சிவன் வடிவமும்,ஓக நிலையிலுள்ள சிவன் வடிவமும் சான்றாகின்றன,தாய் தெய்வ வழிபாடும்,முருக வழிபாடும் இந்தியா முழுவதும்,சிந்து வெளியிலும் நிலவியுள்ளன.முருகன்,கண்ணன்,வேந்தன்,வருணன்,கொற்றவை எனும் சிறு தெய்வங்கள் ஐந்திணைக்குரிய வழிபடு தெய்வங்களாக தமிழிலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன,ஒவ்வையின் புறனானூற்றுப் பாடலும் இதை மெய்ப்பிப்பதை காணலாம்...அதாவது இந்து என்ற சொல்லாடல் வருவதற்கு முன்பு,பல்வேறு படையெடுப்புகள் இங்கு புகுவதற்கு முன்பு இருந்த மதம்...மதம் என்பதை விட வழிபடு முறை என்று சொல்லலாம்....ஏனென்றால் பழந்தமிழர் அந்த தெய்வங்களை எல்லாம் வானத்தில் மேலுலகத்தில் வாழும் தெய்வங்கள் என்று நினைக்கவில்லை.....இயற்கை,முன்னோர்,சக்தி,சிவ,சிறு தெய்வ வழிபாடு என்று சொல்லலாம்.
தமிழும்,ஆத்திரேலிய பழங்குடி மொழிகளும் நெருங்கிய தொடர்புடையன,ஆத்திரேலியப் பழங்குடி மக்கள் திருனீறு அணியும் பழக்கமுடையவர்கள்.இவர்கள் ஆத்திரேலியாவில் குடியேறிய காலம் கி.மு 40,000 ஆண்டுகள் என்று சொல்லப்படுகிறது,சிவ வழிபாட்டின் தொன்மையை இதன் மூலமாகவும் உணரலாம்...மெக்ஸிகோவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய செவ்விந்தியர்களும் சிவ வழிபாட்டினர்,இந்தியாவில் சிவன் கோயில்களே மிகுதி...பிற்காலத்தில் வந்ததே திருமால் கோயில்கள்,சிற்றூர்களில் திருமால் கோயில் காண்பது மிகவும் அரிது...சிவன் கோயிலில் திருமாலுக்கு சிலை இருக்கும்...திருமால் கோயில்களில் சிவனுக்கு இடம் கிடைப்பதும் அரிது!?

எது எப்படியோ, பெரு தெய்வ வழி பாட்டிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வதும் சிறு தெய்வ வழிபாட்டின் இது போன்ற மூட நம்பிக்கையிலிருந்து வெளியே வருவதும் பகுத்தறிவுள்ள நம்மைப் போன்ற சுயமரியாதைக்கரர்களின் கடமை.

சிந்து- சிந்தி- சிந்தியா அதாவது சிந்து சமவெளி நாகரீகம்,சிந்தி இன மக்கள் இதன் வழி சிந்தியா பிற்காலத்தில் இதுவே இந்து- இந்தி- இந்தியா என்று திரிந்தது...இந்து என்ற சொற்றொடரே பிற்காலத்தில் வந்தது தான்,கிறிஸ்துவர்,முஸ்லீம் மற்றும் வேறு இன மக்களை தவிர்த்த ஏனையர் இந்து என்று ஆங்கிலேயர்களால் வகைப்படுத்தப்பட்டது(இதில் ஆரியரும் அடக்கம்,திராவிடரும் அடக்கம்).முதலில் இந்த நாம் யார் என்பதை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்...ஆரியரா? திராவிடரா? அவர்களின் கலப்பா....(சிவப்பு நிறத்தவர் பிராமணர் அல்லாத வகுப்பிலும் இன்று உள்ளனர்,கறுப்பு பிராமணரும் உள்ளனர்)..இப்படி வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் ஆரியர் என்று தம்மை பறை சாற்றிக் கொள்பவர்,திராவிடர் என்று தம்மை பறை சாற்றிக் கொள்பவர்.

ஆரியர் என்று தம்மை பறை சாற்றிக் கொள்பவர் சிறு தெய்வ வழிபாட்டை கடைபிடித்தது கிடையாது,ஆரியர் அல்லாதோர் இரண்டையும் கடைபிடிப்பவர் ஆனால் ஒருகாலத்தில் இருந்த ஆரியர்களின் ஆதிக்கத்தால் நாளடைவில் பெரு தெய்வ வழிபாடே நம் வழிபாடு என்றும் நம்பியும் விட்டனர்.தம்மை மதிக்காத இடத்தில்,ஏற்றத்தாழ்வு,தீண்டாமை நிலவும் இடத்தில் இருப்பது சுயமரியாதை இல்லை,பகுத்தறிந்து சிந்தியுங்கள் என்று அவர்களுக்கு சில பகுத்திறிவு வாதிகளால் அறிவுறுத்தப்பட்டது,படுகிறது...

அந்த பெரு தெய்வ வழிபாடு நமக்கு சொந்தமானதல்ல,அதனால் ஏற்றத்தாழ்வு மிகுந்த,சாதி அமைப்பை ஏற்படுத்திய அந்த வழிபாட்டை விட்டொழியுங்கள்...இந்து என்ற கட்டமைப்பிலிருந்து வெளியே வாருங்கள் என்று பெரியார் மற்றும் அம்பேத்கார் போன்றவர்களால் அறிவுறுத்தப்பட்டது... நான் வெளியே வந்து விட்டேன்,சிறு தெய்வ வழிபாடே என் வழிபாடு.பகுத்தறிந்து சிந்திக்கும் சுயமரியாதைக்காரன்,தமிழன்,திராவிடன், நாகன்..... நீங்கள்? சிந்தியுங்கள்.....

Sunday, March 7, 2010

மரண தண்டனையை நீக்கவேண்டுமா?

இந்தியா உட்பட இன்னும் பல நாடுகளில் மரண தண்டனை இருக்கவே செய்கிறது,ஆனால் தண்டனைகள் குறையவில்லையே!!!கட்டுப்பாடுகள் மேலும் அதிகம் உள்ள பல நாடுகளிலும் தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
ஒவ்வொரு தவறுக்கும் ஆண்டுகள் அடிப்படையில் தண்டனையை கொடுத்து கொலை செய்தால் அவனை கொலை செய்வது என்பது,கண்ணுக்கு கண்,பல்லுக்கு பல் என்ற அடிப்படையில் பழி வாங்கும் போக்கு மாறியே அமையும்,தண்டனை அவன் திருந்துவதற்கு தரும் சந்தர்ப்பமே தவிர அவன் உயிரை எடுப்பதற்காக அல்ல.
கொலை செய்பவர்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.ஒன்று எப்படியும் தப்பித்து விடலாம் என்று நன்கு யோசனை செய்து செய்பவர்கள்,இரண்டாவது நாம் பிடிபட்டால் தண்டனை பெறுவோம் ஆனால் அதைப் பற்றி கவலை படாமல் செய்பவர்கள்.மூன்றாவது உணர்ச்சி வயப்பட்டு செய்பவர்கள்,இந்த 3 வகையினரையும் மரண தண்டனை தடுத்து விடாது,மரண தண்டனை மூலம் தப்பை குறைக்கலம் என்று நினைப்பது திரைப்படத்திற்கு தான் பொருந்தும்.வாழ்வியல் நெறி மற்றும் வாழ்க்கை முறைகளில் தான் மாற்ற்ம் கொண்டு வர வேண்டும்.சிறையிலும் திருந்துவதற்கான சீர்திருத்த நடவடைக்கைகள் மேலும் செயல் படுத்த வேண்டும்.

Friday, March 5, 2010

மதமாற்றம் சாதியை ஒழிக்குமா?

அம்பேத்கார் ஒரு காலத்தில் 1 லட்சம் இந்துக்களை இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு தழுவச் செய்தார்,அதற்கு அவர் வைத்த காரணம் இந்து மதத்தில் உள்ள தீண்டாமை,மூட நம்பிக்கை மற்றும் ஏற்றத்தாழ்வுகள்.அந்த சமயத்தில் பெரியாரிடம் சில நிருபர்கள் நீங்களும் ஏன் இதே வழியை பின்பற்றக் கூடாது என்று கேட்டனர்,அதற்கு அவர் அளித்த பதில்.....மதம் என்பதே மனிதர்களின் மூளையை மழுங்கடிப்பது தான்,ஒரு இடத்தில் அசிங்கம் இருக்கிறது அதை அப்புறப் படுத்தி சுத்தப் படுத்த வேண்டும் என்கிறேன், நீங்கள் அந்த அசுத்தம் இருந்த இடத்தில் வேறு எதை வைக்க வேண்டும் என்கிறீர்கள். நான் இருக்கும் மதத்தில் குறைபாடுகள் இருந்தால் அதில் இருந்தெ அதை களைய விரும்புகிறேன்.

மதமாற்றம்... மன மாற்றம் என்கின்ற அடிப்படையில் சுயமாக, தனிச்சையாக வர வேண்டும். காசு பணத்திற்காகவோ, பிரியாணி பொட்டலத்திற்காகவோ இல்லை பிறரின் இயலாமையை, அறியாமையை பயன்படுத்தியோ செய்யப்படும் மத மாற்றம் நிரந்தரமாக இருக்காது. 

ஒரு சமூக மக்கள் தன் சமூக மக்களையே விதி, வர்ணம், கர்மா, சாதி அடிப்படையில் ஒதுக்கும் பொழுது அவர்களை சக மனிதர்களாக பார்க்க தவறும் பொழுது வந்தேறி மதங்களுக்கு மத மாற்றம் என்பது எளிதாக அமைந்து விடுகிறது, அதே சமயம் புதிய மதத்திலும் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றால் தாய் மதம் திரும்பும் நிகழ்வும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

ஆனால் இக்கால கட்டத்தில் மதமாற்றம் என்பது சுய நலத்திற்காக மட்டுமே பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது,மேலும் கிறிஸ்துவ நாடார்,கிறிஸ்துவ வேளாளர் என்று தங்களை பறை சாற்றிக் கொள்ளும்பொழுது(இட ஒதுக்கீட்டிற்கு அப்பாற்பட்டு திருமணத்திலும் வேறு சில சடங்குகளிலும்)இவைகள் எல்லாம் சாதியை ஒழிக்க நிகழ்த்தப்படுவதாக தெரியவில்லை.அதனால் தான் பெரியாரும் அப்படி நீங்கள் தானாகவே முன்வந்து மதமாறும் முயற்சியில் இறங்கும் பொழுது அதற்கு கிறிஸ்துவ மதத்தை விட இஸ்லாம் மதம்(சாதியின் அடிப்படையில் மட்டும் பார்க்கும் பொழுது) மற்றும் புத்த மதமும் சற்று பொருத்தமாக இருக்கும் என்றார்.மொத்தத்தில் இன்றைய காலகட்டத்தில் மதமாற்றத்தின் மூலம் சாதியை ஒழிக்க சிறிது வாய்ப்பே உள்ளது எனலாம்.

ஆனால் மதம் என்பதே ஒரு அபின் போன்றது தான்.

மொத்தத்தில் அவரவர், அவரவர் மதக் குறைபாடுகளை அவரவர் பங்கிற்கு களைவது தான் சிறந்தது!!!



சாதி ஒழிய என்ன வழி?

கலப்புத் திருமணம்???
பெரியார் கூற்றுப் படி கலப்புத் திருமணம் என்ற சொல்லாடலே தவறு,மனிதனுக்கும்,விலங்குக்கும் நடந்தால் தான் அது கலப்புத் திருமணம்,இது சாதி மறுப்புத் திருமணம் என்பார்.அந்த சாதி மறுப்புத் திருமணத்தால் சாதி ஒழியக் கூடும் ஆனால் இந்த ஆணாதிக்க சமுதாயம் திருமணத்திற்கு பின் ஆணின் சாதி அடையாளத்தையே முன் நிறுத்தும்.ஆனால் பெருகி வரும் சாதி மறுப்புத் திருமணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குடும்பங்களின் சாதி மத அடையாளங்களை அழிக்க உதவும் என்பது நிதர்சனமான உண்மை......

இட ஒதுக்கீடு நீக்கல் சாதியை அழிக்க உதவும் என்பது நிச்சயமாக அறியாமையே,சில படங்கள் வெற்றி பெறுவதற்கு வேண்டுமானால் இந்த கருத்து உதவியாக இருக்கும்!!!3000 ஆண்டுகள் அடிமையாக இருந்த ஒரு இனம்,150 ஆண்டுகளுக்கு தங்கள் உரிமையை பெற்று தன்னிறைவை அடைந்து விடும் என்பது நம்பத்தகுந்தது அல்ல,அடிமைப்பட்ட ஒடுக்கப்பட்ட இனம் சமுதாயத்தின் மேல் நிலையை அடைவதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பே இட ஒதுக்கீடு என்பது.இட ஒதுக்கீடு நீக்கலை ஆதரிப்பவர்களுக்கு என் இரண்டு கேள்வி....

உதாரணத்திற்கு 5 தலைமுறையாக சரியாக உணவு ஊட்டம் கொடுக்காமல் ஒரு சந்ததியையும்,5 தலைமுறையாக நன்றாக உணவு ஊட்டம் கொடுத்து ஒரு சந்ததியையும் வளர்த்து எடுத்து,6-வது தலைமுறையில் பிறக்கும் அந்த 2 குழந்தைகளையும் மோத விடுவது என்பது எப்படி நியாயமாகும்?அறிவியல் ஆதாரப்படி நோஞ்சானாக இருக்கும் முதலாம் குழந்தைக்கு இரண்டாம் குழந்தையை விட அடுத்த 5 தலைமுறைக்கு தொடர்ச்சியாக ஊட்டம் அதிகமாக கொடுத்து வளர்ப்பதே நியாயமாகும்,அதுவே இட ஒதுக்கீடு என்பது....

இட ஒதுக்கீட்டை நீக்கினால் சாதி ஒழிக்கப்படும் என்பவர்களுக்கு ஒரு கேள்வி...உங்களுக்கு பிறக்கும் போது சாதி வேண்டும்,திருமணத்தில் சாதி வேண்டும்,இறக்கும் போதும் சாதி முறைப்படி செயல்கள் செய்ய வேண்டும் ஆனால் கல்வி,வேலை வாய்ப்பில் மட்டும் இருக்கக் கூடாது ஏனென்றால் கீழெ உள்ளவன் உங்களுக்கு சமமாக வந்து விடுவானே என்ற பயம்,முதலில் நம் குழந்தைகளின் சாதி மறுப்பு காதல் திருமணத்தை ஆதரிப்போம்,உடலில்,இரத்ததில், நடைமுறையில் நாம் செயல் படுத்தும் சாதி அடியாளங்களை அகற்றுவோம் அதற்குப் பிறகு அனைவரும் சமதர்ம நிலையை அடிந்த பிறகு பெரியார்,அம்பேத்கார் பின்வருமாறு உரைத்தது போல் இட ஒதுக்கீட்டை நீக்குவதைப் பற்றி முடிவு செய்யலாம்...

அம்பேத்கார் கூற்று :- இட ஒடுக்கீடு என்பது எல்லா காலத்திற்கும் பொருத்தமானதாக இருக்க முடியாது,சாதி அடியாளங்கள் அகற்றப்பட்டு,சமதர்ம நிலையை அடிந்த பிறகு,இட ஒதுக்கீட்டை பரிசீலனை செய்யலாம்.பெரியார் கூற்று :- ஒருகாலத்தில் நாம் கையேந்திய நிலையில் இருந்தோம் என்பதற்காக,இன்று மேல் நிலையில் இருப்பவர்கள் கையேந்தும் நிலைக்கு இட ஒதுக்கீடு தள்ளி விடக் கூடாது.ஆனால் இட ஒதுக்கீட்டை பரிசீலனை செய்யும் நிலை இன்று வந்து விடவில்லை,அதற்கு இன்னும் வெகு காலம் உள்ளது.

இராமர்..இராமர் பாலம்..இராமாயணம்

வால்மீகி இராமாயணம்(ஆயிரத்தெட்டு இராமாயணங்கள் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் ஆதி மூலமாக சொல்லப்படுகிற வால்மீகி இராமாயணத்தை நாம் எடுத்துக் கொள்வோம்.) சுமார் 27 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு திரேதாயுத காலத்தில் எழுதப்பட்டதாக,இராமாயணம் அந்த காலத்தில் நிகழ்ந்ததாக வால்மீகி இராமயணத்தில் சொல்லப்படுகிறது.ஆனால் இந்த உலகத்தில் உயிர்களின் பரிணாம வளர்ச்சி கிட்டத்தட்ட 50,000 ஆண்டுகளுக்குள் நிகழ்ந்ததாக அறிவியலால் நிரூபிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்தியாவும் இலங்கையும் கடலால் பிரிந்து போனதும் இந்த 50,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தான்.

இதன் மூலம் நமக்கு எழும் இரண்டு கேள்விகள்...
1.கிட்டத்தட்ட உயிர்கள் தோன்றியே 50,000 ஆண்டுகள் தான் இருக்கும் பட்சத்தில்,27 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இராமர் இருந்ததாகவும்,இராமாயணம் நிகழ்ந்ததாகவும் கூறுவதை எப்படி நம்புவது?சரி இராமர் கடவுளின் அவதாரம் அவர் இருந்து விட்டு போகட்டும்,அவரிடம் கூட இருந்த அவர் குடும்பத்தினர் அனைவரும்,வானர சேனைகளும் மேலும் அசுரர்கள் உட்பட கடவுளின் அவதாரங்களா?
2.இந்தியாவும்,இலங்கையும் பிரிந்த நிகழ்வே இந்த 50,000 ஆண்டுகளுக்குள் தான் என்று இருக்கும் பட்சத்தில் இராமரும்,வானர சேனைகளும் எதன் மீது பாலம் கட்டினார்கள்? நிலத்தின் மீதா?(யாரும் இல்லாத கடையில் யாருக்காக டீ ஆத்தினார்!!!)

மேலும் 27 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக சொல்லப்படும் இராமாயணத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புத்தரைப் பற்றிய குறிப்புகள் சில இடங்களில் வருவது எப்படி?இதிலிருந்து இராமாயணம் என்பது கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்குமான போரின் கற்பனை கதையே! ஆபாசங்களும்,புரட்டுகளும் நிறைந்த வால்மீகி போதையில் உளறிய பேத்தலே இராமாயணம்.உலக சரித்திரத்தை எழுதிய பண்டிதர் நேருவும் இதையே வலியுறுத்தியதை இங்கே குறிப்பிடுவது முக்கியமானதாகும்.

இந்திய தொல்பொருள் ஆய்வின்(Archeological Survey of India-ASI) படி,இராமாயணத்தில் வரும் இடங்கள் இருந்ததற்கான சான்றுகள் இருக்கிறதே அன்றி இராமாயணம் நடந்ததற்கான ஆதாரமோ,இராமர் இருந்ததற்கான ஆதாரமோ இல்லை என்று கூறுவதன் மூலம் இதை மெய்ப்பிப்பதை காண்லாம்.மொத்தத்தில் இராமர் பாலம் மட்டுமின்றி இராமரோ,இராமாயணமோ கற்பனையே,கற்பனைக்கு கூட எட்டாத ஆபாசமும்,புரட்டும் நிறைந்த குப்பையே!

Sunday, February 21, 2010

யாரைப் போல் இவன்?

கமல் என்னும் மாபெரும் கலைனன், நடிகன் மற்றும் சகலகலா வல்லவனுக்கு ரசிகனாக இருப்பதில் என்றும் பெருமை கொண்டுள்ளேன் ஆனால் அவரை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது என்பது அவர் கடைபிடிக்கும் பகுத்தறிவுக்கு ஒவ்வானது என்பதால் அவரின் சமீபத்திய உன்னைப் போல் ஒருவன் திரைப் படத்தின் விமர்சனத்தை இங்கே வைத்துள்ளேன்,இதையும் நீங்கள் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் அவசியமில்லை,என் விமர்சனத்தின் மீதான உங்களின் விமர்சனத்தையும் நான் எதிர்பார்க்கிறேன்.உன்னைப் போல் ஒருவன் சிறந்த திரைக்கதை மற்றும் தொழில் நுட்பத்தில் வெளிவந்த சற்று நெருடலான கருத்தைக் கொண்ட படம் என்பதே மறுக்க முடியாத உண்மை,அதன் மீதான விமர்சனத்தை கமல் மீது வைக்க நான் க்டமைப்பட்டுள்ளேன்.

உன்னைப் போல் ஒருவன் வெளிவந்த சமயத்தில் நீங்கள் விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒரு நல்ல கருத்து எங்கிருந்து வந்தாலும் அதனை வரவேற்க வேண்டும்,அதன் அடிப்படையில் தான் படத்தின் மறு பதிப்பாக தமிழில் உன்னைப் போல் ஒருவன் படத்தை எடுத்ததாக கூறினீர்கள்.உங்களின் புகழ்பாடும்(அவ்விதம் புகழ்பாடி உணர்ச்சி வயப்பட்டு அழுதவர்களை நீங்கள் அமைதிப்படுத்தியதோடு அவர்களுக்கு கொஞ்சம் அறிவுரையும் சொல்லியிருக்கலாம்),படத்தின் புகழ் பாடும் நிகழ்வுகளைத் தவிர்த்து ஆறுதலாக
ஒரெ ஒருவர் மட்டும்(விஜய் தொலைக்காட்சி இவ்விதம் விமர்சனம் செய்ய ஒரெ ஒருவரை மட்டும் அனுமதித்ததா என்று தெரியவில்லை!? கோபி மற்றும் நிகழ்ச்சியின் இயக்குனர்க்கே வெளிச்சம்.)படத்தின் மீதான நியாயமான விமர்சனத்தை தெரிவித்தார்.வன்முறைக்கு என்றும் வன்முறை தீர்வாகாது,அதற்கான காரணத்தை,மூலத்தை ஆராய்ந்து தீர்வு காண்பதே உகந்தது அப்படி இருக்கையில் இந்த திரைப்படத்தின் கருத்து எனக்கு உடன்பாடில்லை என்ற அந்த நண்பரின் விமர்சனத்திற்கு உங்களின் பதில் பின்வருமாறு அமைந்தது."உங்களின் கருத்து தான் என் கருத்தும் ஆனால் இந்த திரைப்படத்தின் கருத்து அதிலுள்ள கதானாயகனின் கருத்து"
உங்களின் இந்த பதிலை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை..... நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒரு நல்ல கருத்து எங்கிருந்தாலும் வரவேற்க வேண்டும் என்கிறீர்கள்,இப்பொழுது அது என் கருத்தல்ல கதானாயகனின் கருத்து என்கிறீர்கள். நீங்கள் ஏற்றுக் கொள்ளாத கருத்தை எப்படி நல்ல கருத்து என்கிறீர்கள் என்று புரியவில்லை,உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தான் அதை நல்ல கருத்தாக அங்கீகரித்து தமிழ் படுத்தவும் செய்திருக்கிறீர்கள்.
விருமாண்டியில் மரணத்திற்கு மரணம் தீர்வல்ல என்றீர்கள், நல்ல கருத்து (உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? ஏற்றுக்கொள்ளப்படாததா? தெளிவு படுத்தினால் நல்லது!?)அதற்கு எதிர்மறையான கருத்தைக்கூறும் உன்னைப் போல் ஒருவனை தமிழ் படுத்தியிருக்கிறீர்கள்.....இந்த இரண்டில் எது உங்கள் கருத்து? எது நல்ல கருத்து?

பொத்தாம் பொதுவாக போராளிகளை தீவிரவாதிகள் என்று உரைத்து(காஷ்மீர் போராளிகளோ,விடுதலைப் புலிகளோ இல்லை வட கிழக்கு மா நிலங்களின் போராளிகளோ)அவர்களைப் பற்றியெல்லாம் ஆராயாமல் மணிரத்னம் மற்றும் விஜயகாந்த்(!!!)எடுக்கும் படங்களுக்கும் உங்களின் குருதிப்புனல் மற்றும் உன்னைப் போல் ஒருவனுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை சில தொழில் நுட்ப நேர்த்திகளைத் தவிர...

நாங்கள் எந்தவித தீவிரவாத செயல்களையும் ஆதரிப்பவர் இல்லை ஆனால் இந்திய தீவிரவாதம் மற்றும் உலக தீவிரவாதத்திற்கான காரணத்தை,மூலத்தை ஆராய்ந்து அதற்கான தீர்வை கொடுக்காமல் இவ்விதம் நீங்கள் கொடுக்கும் தீர்வு பகுத்தறிவிற்கு ஒவ்வானதே...
மேலும் இத்திரைப்படத்தின் மீதான சுபவீ மற்றும் சிலரின் விமர்சனத்தையும் இதனுடன் இணைத்துள்ளேன்...
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=556:2009-09-27-17-08-37&catid=1:articles&Itemid=87

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1011:2009-10-31-02-18-37&catid=938:09&Itemid=185

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=873:2009-10-22-07-09-10&catid=11:cinema-review&Itemid=129